Home செய்திகள் அக்கறை, ஈடுபாடு இருந்தால் போட்டி தேர்வுகளை வெல்லலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவுரை..

அக்கறை, ஈடுபாடு இருந்தால் போட்டி தேர்வுகளை வெல்லலாம் இராமநாதபுரம் ஆட்சியர் அறிவுரை..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் முத்துப்பேட்டை கௌசானல் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் கல்லூரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி நடந்தது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் துவக்கி வைத்தார். அவர் பேசியதாவது: அரசு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யும் இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழில்நெறி வழிகாட்டுவதற்கான கருத்தரங்கு, கண்காட்சி நடத்தி வருகிறது.

இக்கண்காட்சியில் ஒன்றிய அரசு பணியாளர் தேர்வாணையம், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், வங்கி தேர்வுகள், காவல், ரயில்வே துறை உள்ளிட்ட அனைத்து விதமான அரசு பணியிடத்திற்கான தேர்வுகளுக்கு மாணவ, மாணவியர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ள தேவையான பயிற்சி புத்தகங்கள் இடம் பெற்றுள்ளன. இன்றைய கால இளைஞர்கள் தகவல் தொழில்நுட்பத்தில் தேர்ச்சி பெற்றவர்களாகவும், பல்வேறு  துறை சார்ந்த தகவல்களை சேகரித்து போட்டித் தேர்வுகளுக்கு தங்களை தயாராவதிலும் மிகுந்த  ஈடுபாடு கொண்டுள்ளனர். மாணவ, மாணவியர் விருப்பமான துறைகளை தேர்ந்தெடுத்து அத்துறையில் தங்களது திறமைகளை வளர்த்து கொள்ள முழு  அக்கறையுடன் செயல்படும் பட்சத்தில் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் எளிதில் வெற்றி  கொள்ளலாம். வேலைவாய்ப்பில்லா இளைஞர்கள், சுய தொழில் முனைவோருக்கு பல்வேறு கடனுதவி திட்டங்களை தமிழக அரசால் செயல்படுத்தப் படுகின்றன.  கற்றல் என்பது கல்லூரி படிப்போடு நின்று போவதல்ல. இளைஞர்கள் பல்வேறு புதுமையான விஷயங்களை கற்றறிந்து ஆக்கப்பூர்வ செயல்திட்டங்களில் ஈடுபடுத்தி வளமான  சமுதாயம் ஏற்படுத்த செயல்பட வேண்டும் என  பேசினார்.

கல்லூரி சார்பில் நடந்த பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்ற  மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் பரிசு, சான்றிதழ் வழங்கினார்.  வேலைவாய்ப்பு மண்டல இணை இயக்குநர் எம்.சந்திரன், முன்னாள்  படைவீரர்கள் நல அலுவலக துணை இயக்குநர் ச.மணிவண்ணன், மாவட்ட வேலை வாய்ப்பு  அலுவலக உதவி இயக்குநர் மு.கருணாகரன், தாட்கோ மேலாளர் செல்வராஜ், மாவட்ட மின்  ஆளுமை மேலாளர் க.பிரியதர்ஷன், ராமநாதபுரம் சிறைத் துறை நன்னடத்தை அலுவலர் ச.பாவாஜி, கௌசானல் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலர் சு.ஜேசுதாஸ், முதல்வர் கு.ஹேமலதா உட்பட அரசு அலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!