தூத்துக்குடியில் ஆட்சியர் தலைமையில் குறை தீர்க்கும் கூட்டம்..

தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி தலைமையில் இன்று (07.01.2019) நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி முதியோர் உதவித்தொகை, திருமண உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, பட்டா பெயர் மாற்றம், கல்விக்கடன், தொழிற்கடன் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வேண்டிய கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை, பொதுமக்களிடமிருந்து பெற்றுக்கொண்டார். மேலும், மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

பின்னர், மாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளிகளின் இருப்பிடங்களுக்கு சென்று குறைகளை கேட்டறிந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். அதனைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டம் வருவாய் துறையில் பணியாற்றி பணியின்போது காலமான 08 நபர்களின் வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன ஆணையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்தீப் நந்தூரி வழங்கினார். மேலும், இந்தியா ஸ்பீடு ஸ்கேட்டிங் அஸ்ஸோசியேஷன் சார்பாக கடந்த மாதம் நாக்பூரில் நடைபெற்ற சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த 4 முதல் 16 வயதிற்கு மேற்பட்ட 09 ஸ்கேட்டிங் வீரர்கள் தாங்கள் பெற்ற பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் மு.வீரப்பன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் திரு.சங்கரநாராயணன், மாற்றுதிறனாளிகள் நல அலுவலர் திருமதி.ஜெயசீலி, துணை ஆட்சியர் (பயிற்சி) செல்வி லாவண்யா, ஸ்கேட்டிங் பயிற்சியாளர் திரு.ஷாரா முபாரக், ஸ்கேட்டிங் சங்க தலைவர் திரு.ஷாநவாஸ், தமிழ்நாடு ஸ்கேட்டிங் சங்க பொது செயலாளர் திரு.முருகானந்தம் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

செய்தி:- அஹமது, தூத்துக்குடி..