Home அறிவிப்புகள் மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு…

மதுரை மாநகர காவல் துறையின் முக்கிய அறிவிப்பு…

by ஆசிரியர்

மதுரை மாநகரில் சித்திரை திருவிழா வரும் 17.04.2019-ம் தேதியும் மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம்18.04.2019-ம் தேதியும் அன்று மாலையே கள்ளழகரை வரவேற்கும் எதிர்சேவையும், 19.04.2019 காலை 06.00 மணியளவில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா நிகழ்ச்சியும் நடைபெறவுள்ளது.

பல லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த திருவிழாவில் மதுரை மாநகர காவல் துறை சார்பாக குற்றத்தடுப்பு சம்மந்தப்பட்ட சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 200 காவலர்களை 40 குழுவாக பிரித்து குற்றத்தடுப்பு நடவடிக்கை தொடர்பாக ரோந்து மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பழங்குற்றவாளிகள், செய்முறை குற்றவாளிகள், ஆண் மற்றும் பெண் சுமார் 2000 நபர்கள், கண்டறியப்பட்டு அவர்களின் புகைப்படங்களை ஆல்பமாக தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த குற்றவாளிகள் திருவிழாவில் நடமாடும்பட்சத்தில் அவர்களை பிடிக்க சிறப்பு குழு அமைக்கப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

குற்றவாளிகளை கண்காணிக்கும் விதமாக, தேர் பவணி வரும் நான்குமாசி வீதிகளிலும் 150 சுழலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகளின் நடமாட்டத்தை சிறப்பு காவல் கட்டுப்பாட்டு அறையில் அனுபவ மிக்க குற்றப்பிரிவு காவலர்களை பணிக்கு அமர்த்தி கண்காணித்து வருகிறார்கள். மேலும் கள்ளழகர் பவனிவரும் சாலையில் புதூர் எல்கைகளிலிருந்து ஆழ்வார்புரம் வரை சுமார் 200 கேமராக்கள் பொருத்தப்பட்டு குற்றவாளிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக தேரோட்ட பகுதி, கோரிப்பாளையம் தேவர்சிலை, அழகர் வைகை ஆற்றில் இறங்கும் இடங்களில் பறக்கும் கேமராக்கள் (Drone Camera) மூலம் தீவிர கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 50 இருசக்கர வாகன ரோந்து காவலர்கள் 24 மணிநேரமும் தீவிர ரோந்து பணியில் அதிக விழிப்புணர்வுடன் ரோந்து செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தவிர குற்றப்பிரிவு காவலர்கள் சாதாரண உடையில் 20 குழுவாக பிரித்து தீவிர கண்காணிப்பு ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

அன்னதானம் வழங்குவோர் கவனத்திற்கு…

அன்னதானம் மற்றும் இலவச உணவு வழங்குபவர்கள் தங்கள் வாகனத்திற்கு அருகே உணவு வாங்க வரும் மக்களை முறையாக ஒழுங்குபடுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அன்னதான வாகனத்தில் பெட்டி வடிவ ஒலி பெருக்கி பொருத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தியும், குற்றவிழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுத்தப்படுகிறது.

பொதுமக்களின் அன்பான கவனத்திற்கு..

பெரும்பாலான குற்றங்கள் அன்னதானம் வழங்கும் இடத்திலும், இலவச பொருட்கள் வழங்கும் இடத்திலும்தான் நடைபெறுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். அன்னதானம் வழங்கும் இடத்தில் கூட்டத்தில் முந்தியடித்து கொண்டு செல்லாமல், வரிசையில் செல்லவேண்டும். சாமியை பார்க்கும் போதும், அன்னதானம் வழங்கும் போதும், தாங்கள் அணிந்துள்ள நகைகள் மற்றும் கைப்பைகளில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

காவல்துறை சார்பாக பெண்கள் கழுத்தில் அணிந்துள்ள நகைகளை பாதுகாக்கும் விதமாக சேப்டி பின் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பெண்கள் கண்டிப்பாக நகைகளில் சேலையினுள் வைத்து சேப்டி பின் அணிந்து கொள்ளவேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

வாகனம் நிறுத்துமிடங்களிலும் போதிய காவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் வாகனத்திற்கு பக்கவாட்டு பூட்டு போடுவதுடன் கூடுதல் செயின் பூட்டும் பொருத்தவேண்டும் என கேட்டுக்கொள்ளப்படுகிறது.

பொதுமக்கள் தங்கள் உடமைகளிலும் அணிந்துள்ள நகைகளிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் மேலும் எவரேனும் சந்தேகப்படும்படி நடமாடினாலோ அல்லது பின்தொடர்ந்தாலோ உடனடியாக அருகிலுள்ள காவலர்களிடம் தகவல் தெரிவிக்கவும்.

குற்றத்தை தடுக்கவும், குற்றவாளிகளை பிடிக்கவும், பொதுமக்கள் பாதுகாப்பாக சாமியை வழிபாடு செய்யவும், மதுரை மாநகர காவல்துறை சார்பாக விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றும் பொதுமக்களும் குற்ற தடுப்பில் காவல்துறைக்கு முழு ஒத்தழைப்பு அளிக்கவேண்டும் எனவும் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

செய்தி வி. காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!