சாயல்குடி முத்தூட் நிதி நிறுவனத்தில் 25லட்சம் மோசடி..ஊழியர்கள் மீது வழக்கு..

இராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடியில் உள்ள முத்தூட் நிதி நிறுவனம் நகை அடகு பேரில் கடன் வழங்குகிறது. இங்கு கடலாடி மேலச்செல்வனூர் முத்துராமலிங்கம் மகன் காமராஜ் (மேலாளர்) சாயல்குடி வடக்கு தெரு ராஜூ மகன் ராஜேஸ்வரன் ( பொறுப்பாளர்), கமுதி கண்ணார்பட்டி சுப்ரமணியன் சரவணகுமார், சாயல்குடி அருப்புக்கோட்டை ரோடு ராமசாமி மகன் அரவிந்த்ராஜ், சாயல்குடி செவல்பட்டி ரோடு ராஜூ மனைவி ராஜேஸ்வரி ஆகியோர் ஊழியர்களாக பணியாற்றினர். காமராஜ் மற்றும் ராஜேஸ்வரன் ஆகியோர் கூட்டு சேர்ந்து சக ஊழியர்களை மூளைச் சலவை செய்து 15 வாடிக்கையாளர்களின் பெயர்களில் நகை அடகு வைத்தது போல் போலி ஆவணம் தயாரித்து ரூ.24.74 லட்சம் மோசடி செய்தாக செப்., 26 முதல் அக்., 22 ஆம் தேதி வரையிலான தணிக்கையில் தெரிந்தது.

இது குறித்து முத்தூட் நிதி நிறுவன மண்டல மேலாளர் ஆர். சுரேஷ் குமார் ராமநாதபுரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். இதன்படி மேலாளராக பணியாற்றிய காமராஜ், பொறுப்பாளராக பணியாற்றிய ராஜேஸ்வரன் மற்றும் சக ஊழியர்கள் சரவணகுமார், அரவிந்தராஜ், ராஜேஸ்வரி ஆகியோர் மீது 7 பிரிவுகளின் கீழ் ராமநாதபுரம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமா மகேஸ்வரி வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.

செய்தி:- முருகன், இராமநாதபுரம் ..