Home செய்திகள் சேற்றில் சிக்கிய பசு உயிரிழப்பு; ஏக்கத்துடன் தவித்த கன்று..!

சேற்றில் சிக்கிய பசு உயிரிழப்பு; ஏக்கத்துடன் தவித்த கன்று..!

by mohan

புதுச்சேரி அருகே, சேற்றில் சிக்கிய பசு உயிரிழந்தது தெரியாமல் அதன் அருகிலேயே இரண்டு நாட்களாக கன்றுக்குட்டி ஏக்கத்துடன் காத்திருந்த காட்சி, மக்களின் கண்களில் நீரை வரவழைத்தது.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளது ஊசுட்டேரி. பல்லாயிரம் ஏக்கர் பரப்பளவு கொண்ட ஏரியான இது, தற்போது வரலாறு காணாத அளவில் வறண்டு போய் காணப்படுகிறது. ஒரு சில இடங்களில் மட்டும் குட்டை போல் சிறிதளவு தண்ணீர் உள்ளது. இதில், மேய்ச்சலுக்கு வரும் கால்நடைகள் தாகம் தணித்துச் செல்வது வழக்கம்.இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு இந்த ஏரியில் மேய்ச்சலுக்கு கன்றுடன் வந்த பசு ஒன்று, தண்ணீர் குடிக்க குட்டையில் இறங்கியுள்ளது. அப்போது, எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கிய பசு அதில் இருந்து மீண்டு வெளியே வர முடியாமல் இறந்துள்ளது.

இதை அறியாத கன்று, ‘சேற்றில் சிக்கிய தனது தாய், அதிலிருந்து மீண்டு வந்துவிடும்’ என நினைத்து அதன் அருகிலேயே ஏக்கத்துடன் படுத்துக் கொண்டது. பசுவையும் கன்றையும் தேடி அதன் உரிமையாளரும் வரவில்லை.இந்நிலையில், இரண்டு நாட்களாக தொடர்ந்து பசுவின் அருகிலேயே கன்று படுத்திருப்பதை தொலைவில் இருந்து பார்த்த ஒருவர், அதன் அருகே சென்று பார்த்துள்ளார். அப்போது, சேற்றில் சிக்கி பசு இறந்திருப்பது தெரிந்துள்ளது. இதுகுறித்து அவர், அக்கம் பக்கத்தில் உள்ளவர்களுக்கு தெரிவித்துள்ளார்.இதையடுத்து அங்கு வந்த மக்கள், பட்டினியாக படுத்திருந்த கன்றுக்கு புல் உள்ளிட்ட தீவனங்களை கொடுத்துள்ளனர். அவைகளை உண்ண மறுத்த கன்று, தாய் பசுவையே ஏக்கத்துடன் பார்த்தபடி இருந்துள்ளது. இந்தக் காட்சி, அங்கிருந்த மக்களின் கண்களின் கண்ணீரை வரவழைத்தது.இதுகுறித்து, வில்லியனூர் போலீஸாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். மேலும், ஊசுட்டேரி வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால், வனத்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!