Home செய்திகள் காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு

காவிரி மேலாண்மை ஆணைய தலைவரை நேரில் சந்தித்து பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு

by mohan

காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் மசூத் உசேன் அவர்களை டெல்லியில் 24.06.2019 இன்று நேரில் சந்தித்து மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி ராசி மணலில் தமிழகம் அணை கட்ட அனுமதி வழங்க வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கோரிக்கை மனு அளித்தார்.அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தமிழ்நாட்டின் உணவு களஞ்சியமாம் காவிரி டெல்டா வானம் பார்த்த பூமியாக மாறி வருவது வேதனையளிக்கிறது.இரு போகம் விளைவித்த விவசாயிகள் ஒரு போக சம்பா சாகுபடிக்கே தண்ணீர் பற்றாக்குறையால் பறிதவிக்கும் பரிதாபம் தொடர்கிறது. 50 ஆண்டு கால காவிரி உரிமை மீட்பிற்கான போராட்டம் 2018ல் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்ட பிறகு முடிவுக்கு வரும் என எதிர் பார்த்த நிலையில் தற்போது மேகதாட்டு அணை கட்ட கர்நாடகம் முயற்சிப்பதால் மீண்டும் பிரச்சினை விஸ்வரூபம் எடுக்க துவங்கியுள்ளது.

அணை கட்டப்பட்டால் தமிழகத்தில் சுமார் 25 லட்சம் ஏக்கர் சாகுபடி நிலபரப்பு பாலைவனமாகும். சென்னை உட்பட 11 மாநகராட்சிகளை உள்ளடக்கிய 25 மாவட்டங்களில் வாழக்கூடிய 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரம் பறிபோகும். நிலத்தடி நீர் அழிந்து போகும். தமிழக உணவு உற்பத்தியில் 40% முற்றிலும் முடக்கப்படும்.இந்நிலையில் தமிழகம் உபரி நீரை ஆண்டு தோறும் 30 முதல் 100 டி.எம்.சி தண்ணீரை கடலிலே கலக்க செய்வதாகவும், தமிழகம் சமவெளிப் பகுதி என்பதால் அணை கட்ட இயலாது எனவும் குற்றம் சாட்டும் கர்நாடகம்,

ஏற்கனவே சட்ட விரோதமாக 6 அணைகளை கட்டி உள்ள நிலையில் தற்போது கர்நாடக எல்லையின் இறுதிப் பகுதியான மேகதாட்டுவில் அணைகட்டி தமிழகம் நோக்கி வரும் உபரி நீரை தடுத்து உரிய தண்ணீரை தமிழகத்திற்கே வழங்க உள்ளதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறது.தமிழகம் நோக்கி வரும் தண்ணீரை தடுக்க சட்டப்படி உரிமை இல்லாத கர்நாடகம், தமிழக நலனுக்காக என காரணம் காட்டி நியாயப்படுத்த முயற்சிக்கிறது.

தமிழக நலன் மீது அக்கறையோடு கர்நாடகம் பேசுவது உண்மையாக இருக்குமேயானால் தனது எல்லையின் இறுதியில் மேகதாட்டுவில் சட்ட விரோதமாக கர்நாடகம் அணை கட்டுவதை தடுத்து நிறுத்தி அதிலிருந்து தமிழக எல்லையான காவிரியின் இடது கரையில் கீழ்நோக்கி 42 கி.மீ. தொலைவிலும், தமிழக கிருஷ்ணகிரி மாவட்ட வனத்துறை கட்டுப்பாட்டிலும், மத்திய அரசின் நீர் பாசனத்துறை நீர் அறவிடும் இடமான பில்லிகுண்டு விலிருந்து மேல் நோக்கி 8 கி.மீ. தொலைவில் உள்ள ராசி மணலில் தமிழகத்திற்குள் ஒடும் உபரி நீரை தடுத்து அணைகட்டி தண்ணீரை பயன்படுத்திக் கொள்ள தமிழகத்திற்கு முழு சட்ட உரிமை உள்ளது.

ராசி மணலில் அணையை கட்டி உபரி நீரை தேக்கி வைத்து மேட்டூர் அணை நீர்மட்டம் குறையும் போது ராசி மணல் அணையிலிருந்து தண்ணீரை விடுவித்து மேட்டூர் அணை மூலமே பாசனம் பெரும் வகையில் தமிழகம் அணை கட்ட கர்நாடகம் ஒத்துழைக்க முன்வரவேண்டும்.காவிரியின் வலது கரை முழுவதும் கர்நாடகாவிற்கு சொந்தம் என்பதால் மின்சாரத்தை கர்நாடகம் உற்பத்தி செய்துகொள்ளலாம்.தமிழக அரசின் முன்னாள் முதலமைச்சர் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தனது ஆட்சிகாலத்தில் 1961ல் அடிக்கல் நாட்டியுள்ளார்.

திரு. பழநெடுமாறன் அவர்கள் தமிழக சட்ட மன்றத்தில் முன்மொழிந்த தீர்மானத்தை அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள் ஏகமனதாக நிறைவேற்றி ராசி மணல் அணை கட்ட மத்திய அரசை நேரடியாக சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.இதனை பின்பற்றி அணை கட்டுமான பணியினை தொடர மத்திய அரசிடம் உரிய அனுமதிகளை பெற்றுக் கொடுத்து தமிழக அரசு பணிகளை துவக்க ஆணையம் 25.06.2009-ல் நடைபெறும் கூட்டத்தில் தீர்மானித்து அனுமதி வழங்கிட வேண்டுகிறேன் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு அளிக்கப்படும் போது சென்னை மண்டல தலைவர் வேளச்சேரி குமார், காஞ்சிபுரம் மாவட்ட செயலாளர் வி கேவி துரைச்சாமி,மருத்துவர் ஆனந்த்,செய்தி தொடர்பாளர் என்.மணிமாறன்ஆகியோர் உடன் இருந்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com