Home செய்திகள் தூண்டிவிடப்பட்ட போராட்டம் இது என்று கூசாமல் சொல்கிறார்கள். உண்மையிலேயே நான் இந்தப் போராட்டத்தால் தூண்டப்பட்டவனாகத்தான் இங்கே வந்திருக்கிறேன்..

தூண்டிவிடப்பட்ட போராட்டம் இது என்று கூசாமல் சொல்கிறார்கள். உண்மையிலேயே நான் இந்தப் போராட்டத்தால் தூண்டப்பட்டவனாகத்தான் இங்கே வந்திருக்கிறேன்..

by Askar

உறுத்தல் உணர்விலிருந்து மனம் விடுபடுவது எப்பேர்ப்பட்ட ஆறுதல்! அந்த விடுதலை உணர்வு இன்று எனக்குக் கிடைத்தது.

சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ-என்பிஆர்-என்ஆர்சி எதிர்ப்புப் போராட்டக் களத்திற்குச் செல்லவில்லையே என்ற ஆதங்கம் என்னைக் கவ்வியிருந்தது. தவிர்க்கவியலாத காரணங்களால்தான் என்றாலும் மனதை அது குடைந்துகொண்டிருந்தது.

ஆனது ஆகட்டும் என்று வேலைகளைப் பிற்பகலுக்குத் தள்ளிவைத்துவிட்டு காலையில் அங்கே சென்றேன். மாபெரும் மனிதச் சங்கிலி இயக்கத்தை நடத்திக் காட்டிய தமிழக மக்கள் ஒற்றுமை மேடையின் ஒரு செயல்பாட்டாளராக அவர்களுடன் சேர்ந்தேன். ஒரு பத்திரிகையாளராக அவர்கள் முன் பேசினேன்.

“தூண்டிவிடப்பட்ட போராட்டம் இது என்று கூசாமல் சொல்கிறார்கள். உண்மையிலேயே நான் இந்தப் போராட்டத்தால் தூண்டப்பட்டவனாகத்தான் இங்கே வந்திருக்கிறேன்.

“உங்களைத் தேசவிரோதிகள் என்கிறார்கள். பாகிஸ்தானிலிருந்து வந்தவர்கள் அல்லது பாகிஸ்தானுக்குப் போக வேண்டியவர்கள் என்றும் சொல்கிறார்கள். நீங்கள் உண்மையான தேசபக்தர்கள். தேசம் என்பது வெறும் வரைபடம் அல்ல. வாழும் மக்கள்தான் தேசம். அனைத்து மத நம்பிக்கை சார்ந்தவர்கள், மதமே இல்லாதவர்கள் என தேசத்து மக்கள் அனைவரின் உரிமையைக் காக்கப் போராட்டக் களம் வந்திருக்கிற தேசபக்தர்களான உங்கள் எல்லோருக்கும் என் ரெட் சல்யூட்.

“இரண்டு நாட்களுக்கு முன் உங்கள் மீது தடியடி நடத்தப்பட்டது. அந்தத் தடியடிச் செய்தி முக்கியமான ஒருவருக்குப் போய்ச் சேர்ந்ததா தெரியவில்லை. இஸ்லாமியர்களுக்குப் பாதிப்பென்றால் முதல் ஆளாக வந்து நிற்பேன் என்று சொன்னவர் அவர். ஒருவேளை அவர் படிக்கிற பத்திரிகையில் இனிமேல் இந்தச் செய்தியை பிரிண்ட் பண்ணி வெளியிட்டால் படிப்பாரோ என்னவோ.

ஆனால் அந்தத் தடியடியால் ஒரு நன்மையும் நடந்திருக்கிறது. அறை நடுவில் வைக்கப்பட்டிருக்கிற அரிசி மூட்டையில் தடியால் அடித்தால் என்னவாகும்? அரிசி கீழே சிதறும், அறையின் தரை முழுக்கப் பரவும். உங்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடியால் இன்று தமிழகம் முழுவதும் போராட்டம் பரவியிருக்கிறது. நாடுதழுவிய போராட்டம் தமிழகத்தில் மேலும் வலுப்பெற்றிருக்கிறது.

இந்தியாவின் வலிமையும் பெருமையும் என்னவென்றால் இது மதச்சார்பற்ற நாடு என்பதுதான். மக்கள் எந்தக் கடவுளையும் வணங்கலாம், அவரவர் சமயத்தைப் பின்பற்றலாம், மதத்தை ஏற்காமலும் இருக்கலாம். ஆனால் அரசாங்கத்தில் எந்த மதமும் நுழையாது என்பதுதான் மதச்சார்பின்மை.

மதவாத உணர்வைக் கிளறுவதற்காகச் சிலர் முஸலிம் நாடு இருக்கிறது, கிறிஸ்துவ நாடு இருக்கிறது, இந்து நாடு என்று இல்லையே என்று சொல்கிறார்கள். அதுதான்டா இந்தியாவின் கம்பீரம்! பெரும்பான்மை மக்கள் இந்துக்கள் என்றாலும், நாடு விடுதலையடைந்த பின் உருவாக்கப்பட்ட, அரசமைப்பு சாசனத்தால் உறுதிப்படுத்தப்பட்ட, மக்கள் மனமுவந்து ஏற்றுக்கொண்ட, தலைநிமிர்ந்த கம்பீரம்.

அடிப்படையான அந்த அரசமைப்பு சாசனத்தைக் கிழித்தெறியும் நோக்கத்துடன் கூரிய நகங்கள் நீள்கின்றன. அந்த நகங்களை வெட்டியெறியவே இந்தப் போராட்டம்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை விலக்கிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று பிரதமர் கறாராகப் பேசியிருக்கிறார். அது நடக்கும் வரையில் போராட்டத்தை விலக்கிக்கொள்ளும் பேச்சுக்கே இடமில்லை என்று மக்களும் உறுதியாக இருக்கிறார்கள்.

இன்று இந்தப் போராட்டம் பற்றி எழுதும் என் கைகள் நாளை போராட்டத்தின் வெற்றியை எழுதும் என்ற நம்பிக்கையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.”

-குமரேசன்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!