Home செய்திகள் காதல் மனைவியுடன் பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை- வத்தலக்குண்டு அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

காதல் மனைவியுடன் பா.ஜ.க. பிரமுகர் தற்கொலை- வத்தலக்குண்டு அருகே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது..

by Askar

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருணாசலபுரத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 35). இவர் பா.ஜ.க. கட்சியின் மாநில இளைஞரணி செயற்குழு உறுப்பினர். மேலும் இவர், வத்தலக்குண்டுவில் செல்போன் கடை நடத்தி வந்தார். அவருடைய மனைவி சிவதர்ஷினி (29). ஈரோட்டை சேர்ந்த இவரை, காதலித்து மணிகண்டன் திருமணம் செய்து கொண்டார்.

இந்த தம்பதிக்கு சாய்சைலேஷன் (10) என்ற மகனும், சாய்சிரஞ்சி (4) என்ற மகளும் உள்ளனர். தற்போது மணிகண்டன், பட்டிவீரன்பட்டி அருகே உள்ள எம்.வாடிப்பட்டியில் சொந்தமாக வீடு கட்டி குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை மணிகண்டன் தனது 2 குழந்தைகளையும், கடையில் வேலை செய்யும் நபர் மூலம் சிவதர்ஷினியின் சொந்த ஊரான ஈரோட்டில் உள்ள அவரது தாய் அனுசியா வீட்டுக்கு அனுப்பி வைத்தார். 2 பேரையும் ஈரோட்டில் விட்டு விட்டு கடை ஊழியரும் பட்டிவீரன்பட்டிக்கு வந்து விட்டார்.

முன்கூட்டியே தகவல் எதுவும் தெரிவிக்காமல் பேரனும், பேத்தியும் வந்திருப்பதை கண்டு அனுசியா திடுக்கிட்டார். திடீரென குழந்தைகள் வந்திருப்பதால், இதுதொடர்பாக காரணம் கேட்பதற்காக சிவதர்ஷினியின் செல்போனில் அனுசியா தொடர்பு கொண்டார். ஆனால் சிவதர்ஷினி போனை எடுக்கவில்லை. இதேபோல் மணிகண்டனின் செல்போனிலும் அனுசியா தொடர்பு கொண்டார். அவரும் போனை எடுக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அனுசியா, எம்.வாடிப்பட்டியில் வசிக்கிற உறவினர் ஒருவருக்கு போன் செய்து விவரத்தை சொன்னார்.

மேலும் உறவினரை, மணிகண்டனின் வீட்டுக்கு சென்று பார்க்குமாறு அனுசியா அறிவுறுத்தினார். அதன்பேரில் உறவினரும் மணிகண்டனின் வீட்டுக்கு சென்றார். கதவை தட்டிப்பார்த்தார். அது, உள்பக்கமாக பூட்டி இருந்தது. நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை. இதனால் அவர், வீட்டின் ஜன்னலை திறந்து பார்த்தார்.

அப்போது ஒரு அறையில் மணிகண்டனும், சிவதர்ஷினியும் அருகருகே மின்விசிறி மாட்டுவதற்கான இரும்பு கொக்கியில் தூக்கில் தொங்கி கொண்டிருந்தனர். இதனைக்கண்டு உறவினர் அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி போலீஸ் நிலையத்துக்கு அவர் தகவல் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையிலான போலீசார் அங்கு விரைந்தனர். பின்னர் கதவை உடைத்து போலீசார் உள்ளே சென்றனர். அங்கு கணவன்-மனைவி 2 பேரும் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.

பின்னர் 2 பேரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். போலீசார் நடத்திய விசாரணையில் மணிகண்டனும், சிவதர்ஷினியும் தற்கொலை செய்திருப்பது தெரியவந்தது.

கணவன்-மனைவி 2 பேரும் தற்கொலை செய்ய ஏற்கனவே முடிவு செய்திருக்கின்றனர். இதற்காக திட்டமிட்டே தங்களது குழந்தைகளை ஈரோட்டில் உள்ள சிவதர்ஷினியின் தாய் வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. அதேநேரத்தில் கடன் தொல்லையால் இவர்கள் தற்கொலை செய்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com