வத்தலக்குண்டு காவல்நிலையத்தில் காவலர்கள் பற்றாக்குறை! போதிய காவலர்களை நியமிக்க விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கோரிக்கை..
தமிழ்நாட்டின் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு ஊர் வத்தலக்குண்டு என்றால் அது மிகையாகாது.
சுதந்திர போராட்ட தியாகி சுப்பிரமணியசிவா இந்த ஊருக்கு சொந்தக்காரர் ஆவார்.
மலைகளின் இளவரசி கொடைக்கானல்,சுருளி அருவி,வைகை அணை, முல்லைப் பெரியாறு அணை, சோத்துப்பாறை அணை,மஞ்சலாறு அணை, மூங்கில் அண்ணை காமாட்சி அம்மன் கோவில்,போன்ற பிரபலமான சுற்றுலாத் தளங்கள் மற்றும் கோவில்களுக்கு செல்ல இந்த ஊரை தாண்டி தான் மக்கள் செல்ல வேண்டும்.
ஆகையால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினமும் வந்து செல்லும் பரபரப்பான மிகவும் நெரிசலான பகுதியாகும்.
மேலும் தினம் தோறும் பல தேவைகளுக்காக பல்வேறு ஊர்களில் இருந்து பொதுமக்கள் அதிகளவில் வத்தலக்குண்டு பகுதிக்குள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நில உரிமை மீட்பு இயக்க மாநில துணை செயலாளர் பெ.ச.உலகநம்பி கூறுகையில்,
எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் வத்தலக்குண்டுக்கு உட்பட்ட பேரூராட்சி, 50 கிராமங்கள் இதில் பல்வேறு சமயத்தினர் அடங்குவர்,10 பஞ்சாயத்து,என சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர்.
வத்தலக்குண்டு பகுதிகளில் நாட்டு காய்கறிகள், தக்காளி,வாழை இலை, மற்றும் இதர காய்கறிகள் விளையும் பூமி இது.
கொடைக்கானலில் இருந்து ஆங்கில காய்கறிகள் மதுரைக்கு கொண்டு செல்வதற்கான பிரதான சாலையாகவும் உள்ளது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் வத்தலக்குண்டு பகுதியின் காவல் நிலையத்தில் தினம் தோறும் பலதரப்பட்ட புகார்கள் பல்வேறு வழக்குகள் சம்பந்தப்பட்ட விஷயங்களை காவலர்கள் கையாண்டு வருகின்றனர். காவல்நிலையத்தில் மொத்தம் 4 அதிகாரிகள் 19 காவலர்கள் என மொத்தம் 23 பேர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.
இதில் ரோந்து பணிகள், நீதிமன்ற பணிகள், வழக்குகள் சம்பந்தமாக வெளியே செல்லும் காவலர்கள் என்ற சூழ்நிலையில் சில சமயங்களில் காவல்நிலையத்தில் மக்கள் கூட்டம் அலைமோதும் காட்சிகளை காண முடிகிறது.
வழக்குகளும் உரிய முறையில் விசாரணை செய்து விரைந்து முடிப்பதற்கும் காவலர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
இதில் பொதுமக்களை விட காவலர்களே மிகுந்த மன உளைச்சலுக்கும் சிரமத்திற்கும் ஆளாகின்றனர்.
தமது வீடுகளில் நடக்கும் சில நல்ல காரியங்கள் துக்க காரியங்களுக்கு கூட விடுப்பு எடுக்க முடியாத சூழ்நிலையில் காவலர்கள் மிகவும் மன அழுத்தத்தையும் சந்தித்து வருகின்றனர்.
ஆகையால் வத்தலக்குண்டு காவல் நிலையத்தின் நிலைமையை கருத்தில் கொண்டும் காவலர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதியும் பற்றாக்குறையை போக்கவும் மக்கள் தொகை அடிப்படையில் போதிய அளவில் காவலர்களை நியமிக்க வேண்டும் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பாக கோரிக்கை விடுக்கிறேன் என கூறியுள்ளார்.
You must be logged in to post a comment.