மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு மூன்று வருடத்தை நிறைவு செய்யும் பரிசாக சிறுபான்மை மக்களின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாக சுற்றுப் புற சூழல் அமைச்சகம் மூலம் பசு, எருமை, ஒட்டகம் போன்ற மிருகங்களை இறைச்சிக்காக வெட்டுவதற்கும், விற்பதற்கும் தடை விதித்துள்ளது. இது தனி மனிதனின் அடிப்படை உரிமையை பறிக்கும் விதமாகும். ஒரு மனிதன் தான் எதை உண்ண வேண்டும் என்பதை அரசாங்கம் தான் முடிவு செய்ய வேண்டிய மிக மோசமன நிலைக்கு தள்ளப்பட்டுள்ளான்.
இந்த சட்டம் மூலம் இந்தியா மக்களாட்சி தத்துவத்தை இழந்து விட்டது என்றே கூறலாம். இந்த சட்டம் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ஆணிவேரையே ஆட்டிப்பார்த்துள்ளது. தற்பொழுது மத்தியில் ஆட்சி புரிந்து வரும் அரசாங்கம் தினம் தினம், போதிய சத்துணவு இல்லாமல் இறந்து கொண்டிருக்கும் 3000 குழந்தைகளுக்கு சரியான வழிமுறையை உண்டாக்கவில்லை, ஆனால் பல மாநிலங்களில் மாடுகளுக்கு ஆதார் அட்டை வழங்கும் திட்டத்தை செயல்படுத்த பல கோடி ரூபாய் செலவு செய்து கொண்டிருக்கிறது. இதுதான் இன்றயை அரசாங்கம் மக்கள் மீது காட்டும் அக்கறைக்கு எடுத்துக்காட்டு. ஒரு புறம் ஆர்.எஸ்.எஸ் மற்றும் பா.ஜ.க கட்சியின் மேல் நிலை உறுப்பினர்கள் மாட்டிறைச்சியை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி தொழிலில் கொடிகட்டி பறக்கிறார்கள், அவர்களுக்கு அனைத்து உதவியும் செய்யும் அரசு, அன்றாட உணவு தேவைகளுக்கு உண்ணும் இறைச்சிக்கு தடை போடும் மக்கள் விரோத அரசு.
இந்த மிருகவதைச் சட்டம் மிருகங்களை கொடூரமான முறையில் வதை செய்யும் நோக்கத்திலேயே இந்தியா முழுவதும் ஜம்மு காஷ்மீரை தவிர்த்துக் கொண்டுவந்துள்ளதாக இந்த அரசு கூறுகிறது. ஆனால் அதில் கூறப்பட்டுள்ள ஒரு முக்கியமான ஷரத்தான சந்தையில் வாங்கப்படும் இந்த மிருகங்கள் எந்த மதத்தின் பெயராலும் கொல்வதற்கு அனுமதியில்லை என்று கூறுகிறது. இதன் மூலம் சிறுபான்மையினரின் அடிப்படை மத ரீதியான சிந்தனையில் மத்தியில் ஆளும் அரசு அவர்களின் காவி சிந்தனையை திணிக்க முற்படுகிறது என்பது தெளிவாகிறது.
இன்று உணவுக்காக விற்கப்படும் மாட்டிறைச்சியை தடை செய்த மத்திய அரசு, காசியில் கங்கை கரையில் அமர்ந்து மனித மாமிசத்தை உண்ணும் அகோரி சாமியார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் துணிவு வருமா?? மத்தியில் ஆளும் அரசு எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சிறுபான்மை மக்களை ஒடுக்கும் எண்ணமே தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை என்பது தெளிவாகி வருகிறது. பசு வதை தடையை ஏற்கனவே பல மாநிலங்கள் நம் தமிழகத்தையும் சேர்த்து நடைமுறைப்படுத்தி விட்டது, ஆனால் நம் அண்டை மாநிலமான கேரளா, மணிப்பூர், மிஜோரம், திரிப்புரா, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்கள் இன்னும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்த வண்ணம்தான் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் இந்த அடுக்குமுறையை சிறுபான்மை மக்களும், தலித் இன மக்களும் வேடிக்கை பார்த்து கொண்டுதான் இருப்பார்கள் என்று தவறான எண்ணத்தில் மிதந்து கொண்டிருக்கிறது மத்திய அரசு. ஆனால் அவர்கள் வீதிக்கு வந்து போராட தொடங்கினால் எத்தனை இரும்புக் திரைக்கு பின்னால் ஒளிந்து கொண்டாலும் அத்திரைகள் தூள் தூளாகி விடும் என்பதில் ஐயமில்லை. மத்திய அரசின் நாட்கள் எண்ணப்படுகிறது… அதனுடைய வீழ்ச்சியின் காலம் வெகு தொலைவில் இல்லை…
1 comment
REALLY AWESOME POST KAKA
Comments are closed.