மோடியை ‘டாடி’ எனச் சொல்வது ஜெயலலிதாவுக்கு செய்யும் துரோகம் – அ.தி.மு.க-வினரை விளாசிய சஞ்சய் தத்..

”அ.தி.மு.க-வினர், ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நேரத்தில், தற்போது கூட்டணிக்குப் பிறகு பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களது ‘டாடி’ எனக் கூறிவருகின்றனர். இது, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க-வினர் செய்யும் துரோகம். ” என  காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடியில், காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சியின் தேசியச் செயலாளர் சஞ்சய் தத் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். பின்னர், கூட்டத்தின் முடிவில் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, ”காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மன்மோகன் சிங் தலைமையிலான அமைச்சரவை தமிழகத்தின் நலனுக்காகவும், வளர்ச்சிக்காகவும், உள்கட்டமைப்புக்காகவும் ஒதுக்கிய நிதியை அதன்பின் அமைந்த மத்திய பி.ஜே.பி அரசு தடுத்து நிறுத்தியுள்ளது.  ஒக்கி புயல் பாதிப்பின்போது ராகுல் காந்தி விரைந்து வந்து பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்த்து மக்களுக்கு ஆறுதல் கூறினார். ஆனால் பிரதமர் மோடியோ,அரங்குகள் அடுக்கி வைக்கப்பட்ட ஒக்கி புயல் பாதிப்பு போட்டோக்களை மட்டும் பார்த்துவிட்டுச் சென்று விட்டார். கஜா புயலில் விவசாயிகளும், பொதுமக்களும் பெரும் பாதிப்படைந்து, இன்னல்களைச் சந்தித்தபோது, எந்த ஒரு நிவாரணப் பணியும் உடனடியாகவும்,சரியாகவும் மத்திய அரசால் மேற்கொள்ளப்படவில்லை. மிகப் பெரிய பாதிப்புகளை தமிழகம் சந்தித்தபோதும், மோடி நேரில் வந்து பார்த்தது கிடையாது. ஆனால், அவர் தொழிற்சாலை சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் திரைப்படம் சம்பந்தமான நிகழ்ச்சிகளிலும் மட்டுமே கலந்துகொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இந்நிலையில், மத்தியில் மீண்டும் பா.ஜ.க ஆட்சி அமையும் எனில், அது நாட்டுக்கு மிகப்பெரிய கேடாக அமையும்.. ஏனெனில், ஊழல் ஒன்றே அவர்களின் தாரக மந்திரமாக உள்ளது. பா.ஜ.க அமைச்சரவையில் உள்ள அனைத்து அமைச்சர்களின் பெயரிலும் ஊழல் நடந்துள்ளது. அனைத்துத் துறைகளிலும் ஊழல், ஊழல், ஊழல் மட்டுமே நிறைந்துள்ளது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, பா.ஜ.க.வை அடியோடு வெறுத்து ஒதுக்கிவைத்திருந்தார். நான் உயிரோடு இருக்கும் காலகட்டம் வரை பா.ஜ.க-வுடன் கூட்டணி கிடையாது என அறிவித்திருந்தார். ஆனால் தற்போது, அ.தி.மு.க-வினர் ஜெயலலிதா வெறுத்து ஒதுக்கிய பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர். அ.தி.மு.க-வினர் ஜெயலலிதா வெறுத்து ஒதுக்கிய பா.ஜ.க கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளனர். 

அ.தி.மு.க.வினர் ஜெயலலிதாவை அம்மா என்று அழைக்கும் நேரத்தில் தற்போது கூட்டணிக்கு பிறகு  பிரதமர் நரேந்திர மோடி தான் எங்களது டாடி எனக் கூறிவருகின்றனர். இது மறைந்த முன்னால் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அ.தி.மு.க.வினர் செய்யும் துரோகம். கடந்த 5 ஆண்டுகளில்,இதுவரை இல்லாத அளவுக்கு இந்தியா தீவிரவாதத் தாக்குதல்களைச் சந்தித்துள்ளது. இதற்கெல்லாம் மத்திய பா.ஜ.க அரசுதான் பொறுப்பேற்க வேண்டும். பிரதமர் மோடி, தமிழகத்தில் கூட்டணிக் கட்சிகளை மிரட்டிப் பணியவைத்துள்ளார். சி.பி.ஐ விசாரணை, வருமான வரித் துறை போன்ற அரசுத் துறைகளைப் பயன்படுத்தி, அவர் இக்காரியங்களில் ஈடுபட்டுள்ளார். இந்திய ராணுவத்தின் பதிலடித் தாக்குதல் என்பது மிக பெருமைக்குரியது. பாராட்டுக்குரியது. ஆனால், ராணுவத்தினரின் தாக்குதலை வைத்துக் கொண்டு பிரதமர் மோடி அரசியல் ஆக்க நினைக்கிறார். காங்கிரஸ் – தி.மு.க கூட்டணியில் நாட்டின் வளர்ச்சிக்கும் நலனுக்கும் உறுதி அளிக்க முடியும். அ.தி.மு.க – பா.ஜ.க கூட்டணி என்பது புனிதமான கூட்டணி அல்ல. அவர்கள் தேர்தலுக்காகவே ஒன்றுசேர்ந்துள்ளனர். தம்பிதுரை, பா.ஜ.க-வுடனான கூட்டணியை எதிர்த்தவர்தான். ஆனால் தற்போது, அவரை கட்சியில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணி கட்சியை விமர்சித்துவருகிறார்” என்றார் அவர் .