தென்காசி மாவட்டத்தில் உள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.20,75,000 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார். தென்காசி மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் டாக்டர். கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் துரை. இரவிச்சந்திரன் தலைமையில் 19.08.2023 அன்று நடைபெற்றது. மாற்றுத் திறனாளிகள் நலத் துறையில் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 20 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் தலா ரூ.85,000/- மதிப்பில், மொத்தம் ரூ.17,00,000/- மதிப்பிலும் மற்றும் 15 மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட்போன் தலா ரூ.25,000/- மதிப்பில், மொத்தம் ரூ.3,75,000 மதிப்பிலும் ஆக மொத்தம் ரூ.20,70,000 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளையும் இலவச பேருந்து பயண அட்டைகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் துரை. இரவிச்சந்திரன் வழங்கினார். இம்முகாமில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்கள், எலும்பு, மூட்டு மருத்துவ நிபுணர்கள் மற்றும் மனநல மருத்துவர்கள் பங்குபெற்றனர்.
முகாமில் பங்குபெற்ற மாற்றுத்திறனாளி சிவகாமி (வயது 24) தெரிவித்ததாவது, நான் பிரானூர் பார்டர் பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த ஒரு வருடமாக நான் சொந்தமாக அழகுகலை நிலையம் நடத்தி வருகிறேன், இத்தொழிலை செய்வதற்கு நான் எனது அண்ணியுடன் திருமண நிகழ்ச்சிகள் மற்றும் பிற நிகழ்ச்சிகளுக்கு ஆட்டோ பிடித்து செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வேண்டி மனு அளித்தேன். தற்போது மாவட்ட ஆட்சியர் அவர்கள் எனது மனுவை பரிசீலித்து எனக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டரை வழங்கியுள்ளார்கள். எங்கள் மீது அக்கறையுடன் பரிவுடன் கவனம் செலுத்தி இம்முகாமில் வழங்கியுள்ள இந்த வாகனம் நான் செய்து வரும் இந்த அழகு தொழிலை மேலும் மேம்படுத்த உதவியாக இருக்கும் என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
இம்முகாமில் பங்குபெற்ற மாற்றுத்திறனாளி முகமது யூசுப் அன்சாரி, (வயது 42) தெரிவித்ததாவது, எனது ஊர் இரவணசமுத்திரம், எனது மனைவி பீடி சுற்றும் தொழில் செய்து வருகிறார். எனக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கொரோனா பெருந்தொற்று காலத்தின் போது எனது தொழிலில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. தற்போது முதலமைச்சர் அவர்கள் என் போன்ற மாற்றுத் திறனாளிகளின் சிரமத்தை போக்க வழங்கியுள்ள ஸ்மார்ட்போன் எங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் என நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். முகாமில், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெய பிரகாஷ், தென்காசி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் இரா. இளவரசி, மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள், மாற்றுத் திறனாளிகள் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.