Home செய்திகள் இளைஞர்களின் மத்தியில் பரவிவரும் குற்றங்களை தடுக்க பெற்றோர்,ஆசிரியர் மற்றும் பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்..

இளைஞர்களின் மத்தியில் பரவிவரும் குற்றங்களை தடுக்க பெற்றோர்,ஆசிரியர் மற்றும் பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல்துறையின் முக்கிய வேண்டுகோள்..

by ஆசிரியர்

இன்றைய இளைஞர்களில் பலர் தங்களின் எதிர்கால வாழ்க்கையை பற்றி சிறிதும் கவலைப்படாமல் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு அவர்களின் அன்றாட தேவைகளை பூர்த்தி செய்வதற்காகவும் சுகபோக வாழ்கை வாழ்வதற்காகவும், கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டும் மற்றும் போதை பழக்க வழக்கங்கள், குடிப்பழக்கங்களுக்கு அடிமையாகி பாலியல் குற்றங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

மதுரை மாநகரில் கொலை குற்றங்களில் அதிகமாக ஈடுபடுவது 20 வயது முதல் 25 வயது வரை உள்ள இளைஞர்களே. இப்படிப்பட்ட இளைஞர்கள் இதனால் அவர்களின் எதிர்காலத்தை தொலைத்துவிடுகின்றனர். அவர்களுடைய எதிர்கால வாழ்க்கை கேள்விக்குறியாகவே உள்ளது. இவர்கள் அரசுவேலை, வெளிநாட்டு கடவுசீட்டு, பொதுவான தடையில்லா சான்றிதழ் / நற்சான்றிதல் (NO OBJECTION CERTIFICATE / CLEARANCE CERTIFICATE) பெறமுடியாமல் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள் என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவர்கள் தங்களது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிடுவதினால் குற்றச்சம்பவங்களில் ஈடுபட நிறைய வாய்ப்புகள் அவர்களுக்கு கிடைக்கின்றன. அந்த வாய்ப்பை நாம் ஒருபோதும் அவர்களுக்கு கொடுத்துவிடக்கூடாது.

பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திவிட்ட இளைஞர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மீண்டும் கல்வி பயில அவர்களை நேரில் அழைத்து உளவியல் ரீதியான ஆலோசனைகள் வழங்கி குற்றச்சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும்.

.மாணவர்களுக்கு குற்ற செயல் தடுப்பு விழிப்புணர்வு வகுப்புகள் சிறந்த வல்லுநர்களை கொண்டு நடத்தப்பட வேண்டும். மாணவர்கள் செய்யும் தவறுகளால் பெற்றோர், ஆசிரியர் மற்றும் பள்ளிக்கு அவப்பெயர் ஏற்படும் என்பதை மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும்.

.மாணவர்கள் போதை பழக்கவழக்கங்களுக்கு அடிமையாகாமல் போதை பொருள் தடுப்பு குழுக்கள் மூலம் விழிப்புணர்வு மற்றும் படிப்பில் அதிக கவனம் செலுத்த அறிவுரை வழங்க வேண்டும் மேலும் தினசரி செய்தித்தாள்களை படித்து நாட்டு நடப்புகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்துதரப்பட வேண்டும். சட்டத்தை பற்றியும் அவற்றின் கடுமையான தண்டனைகள் பற்றியும் மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்கள் செய்யும் தவறுகளால் அவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களது பெற்றோர்களின் வாழ்க்கை தரம் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்பதை அவ்வப்போது மாணவர்களுக்கு உணர்த்த வேண்டும். ஒவ்வொரு மாணவருக்கும் சிறந்த பயிற்சியாளராக பெற்றோர்கள் இருக்க வேண்டும். பெரும்பாலும் மாணவர்களின் எதிர்கால வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல்படுவதில் பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்க வேண்டும்.

பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொணர்ந்து சரியான இலக்கை அடையச் செய்வது பெற்றோர்களின் மிக முக்கியமான கடமையாகும். அதுமட்டுமில்லாமல் பெற்றோராக மட்டுமின்றி நல்ல நண்பனாகவும் அவரது எல்லாவித வெற்றி, தோல்விகளுக்கும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும். வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் முன்னேற்ற பாதையை நோக்கி பயணம் செய்யும் வித்தையையும் பெற்றோர்கள் அவ்வப்போது தங்களது பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்க வேண்டும்.

பெற்றோர்கள் பிள்ளைகளின் மனதில் தோன்றும் எண்ணங்களையும் விருப்பங்களையும் சரியானதா, தவறானதா என நன்கு ஆராய்ந்து அவர்களை நல்வழியில் அழைத்துச் செல்ல வேண்டும். இதன் மூலம் மாணவர்கள் குற்ற சம்பவங்களில் ஈடுபடாமல் தடுக்கலாம். பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் படிப்பை இடையில் நிறுத்திவிட்டு குற்றச்சம்பவங்களில் ஈடுபடுவது பற்றி பொதுமக்கள் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் உடனடியாக மாணவர்களின் பெற்றோர்களுக்கோ, ஆசிரியர்களுக்கோ அல்லது காவல்துறைக்கோ உடனடியாக தகவல் தெரிவிக்கலாம்.

இளைஞர்கள் யாரேனும் சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடுவதை நேரடியாக பார்த்தால் சமுதாய சீர்கேட்டிலிருந்து அவர்களை காப்பாற்ற அவர்களை அழைத்து அறிவுரை வழங்க மக்கள் முன்வர வேண்டும். பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் வீட்டின் அருகில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் படிப்பை பாதியில் நிறுத்தியது தெரியவந்தால், அந்த மாணவனிடமோ அல்லது அவர்களது பெற்றோரிடமோ பள்ளிப்படிப்பை மீண்டும் தொடர உங்களால் இயன்ற உதவிகளை பொது நலத்தோடு செய்யவேண்டும்

மாணவர்கள் ஒவ்வொருவரும் தங்களுக்கென்று ஒரு இலட்சியம் வைத்துக்கொண்டு அதை அடைய கடும் முயற்சிகள் எடுக்கவேண்டும். முழுமையான பள்ளி மற்றும் கல்லூரிப்படிப்புகளை மாணவர்கள் தொடர்வதனால் அவர்களை குற்றசெயல்களில் இளம்வயதில் ஈடுபடுவதை நம்மால் தடுக்க முடியும்.

செய்தி வி.காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!