மக்களுடைய முடிவு எப்போதுமே சரியாக இருக்கும் – நடிகர் விவேக்..

கோவில்பட்டி அருகே குருமலையில் உள்ள 18-ம் படி கருப்பசாமி, அலங்கார ஈஸ்வரி தாயார் கோயிலில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டபங்களின் திறப்பு விழா நடந்தது. நடிகர் விவேக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மண்டபங்களை திறந்து வைத்தார். விழாவில், தொழிலதிபர் நாகஜோதி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நடிகர் விவேக் செய்தியாளர்களிடம் கூறும்போது, எத்தனை மெகா கூட்டணி அமைந்தாலும் அனைவரும் பொதுமக்கள் என்ற மகா சக்தி முன்புதான் கூட்டணி வைத்துள்ளனர். பொதுமக்கள் என்கிற சக்தி தீர்மானிப்பவர்கள் தான் ஆட்சிக்கு வர முடியும். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் போட்டியிடலாம். கூட்டணி வைக்கலாம் முடிவு மக்கள் கையில் தான் இருக்கிறது. ரஜினி பின் வாங்க வில்லை அவர் முதலில் இருந்தே சட்டமன்ற தேர்தலில் தான் நிற்க போகிறேன் என சொன்னார் அதில் தெளிவாக இருக்கிறார். தேர்தல் முடிவை கணிக்க முடியவில்லை. இதுவும் சுவாரஸ்யமாக இருக்கிறது. அனைத்து மக்களும் ஆர்வமாக எதிர்பார்ப்பது போலவே நானும் உள்ளேன். மக்களுடைய முடிவு எப்போதுமே சரியாக இருக்கும் என்று எண்ணுகிறேன், என்றார் அவர்.