கோவில்பட்டியில் புதுப்பிக்கப்பட்ட காதி விற்பனை நிலையம் திறப்பு..

கோவில்பட்டி காதி விற்பனை நிலையத்தை ரூ.20 லட்சத்தில் புதுப்பிக்கப்பட்டுள்ளது. முற்றிலும் குளிரூட்டப்பட்ட காதி விற்பனை நிலையத்தின் கீழ் தளத்தில் கதர் துணிகள், முதல் தளத்தில் பட்டு விற்பனை பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட காதி விற்பனை நிலையத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது. சர்வோதயா சங்க தலைவர் ராமசுப்பு தலைமை வகித்தார். செயலாளர் வினோபா முன்னிலை வகித்தார். விற்பனை நிலைய மேலாளர் மல்லிகா வரவேற்றார். அமைச்சர் கடம்பூர் ராஜூ காதி விற்பனை நிலையத்தை திறந்து, முதல் விற்பனையை தொடங்கி வைத்தார். முதல் தளத்தில் மதுரை கதர் கிராம கைத்தறி வாரிய இயக்குநர் சின்னத்தம்பி பட்டு விற்பனை தொடங்கி வைத்தார். சர்வோதய சங்க பொருளாளர் அழகு சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

பின்னர் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறும்போது, நெய்வேலி என்.எல்.சி. நிறுவனமும், தமிழ்நாடு மின் பகிர்மான கழகமும் இணைந்து தூத்துக்குடியில் ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையத்தை அமைத்துள்ளது. இந்தத் திட்டம் மத்திய மாநில அரசுகளின் பங்களிப்போடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனை தூத்துக்குடி மாவட்டத்துக்கு அர்ப்பணித்த பிரதமர் மோடிக்கும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கும் நன்றி. இது தூத்துக்குடி வரலாற்றில் ஒரு மைல் கல் என்றால் மிகையாகாது. தமிழகத்தில் நிரந்தர மின்வெட்டு இல்லாத நிலையை உருவாக்குவதற்காக மத்திய அரசு துணையுடன் மாநில அரசு பங்களிப்போடு அனல் மின் நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தது யார்? ஜெயலலிதாவின் ஆட்சியை நீடித்து, நடத்திக் கொண்டு, தொடர்ந்து அவரது ஆட்சி இருப்பதால்தான் ஜெயலலிதா அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ரூ. 50.80 கோடியில் நினைவாலயம் அமைத்துக்கொண்டிருக்கிறோம். வரலாற்றில் இடம்பெறும் வகையில் சட்டமன்றத்தில் அவரது படத்தை திறந்து வைக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அவர் கொண்டு வந்த திட்டங்களை எல்லாம் செயல்படுத்தி அவரது புகழ் பரப்புக்கின்ற பணியை அரசு செய்கிறது. எனவே, இந்த ஆட்சி இருக்கக்கூடாது என கவர்னரிடம் சென்று மனு அளித்தவர்கள். ஜெயலலிதா ஆட்சியை ஒழிக்க நினைப்பவர்கள் துரோகிகளா அல்லது யார் துரோகிகள் என்பது நாட்டு மக்களுக்கு தெரியும்.

2ஜி அலைக்கற்றில் ஒரு லட்சத்து 76 ஆயிரம் கோடி கபளீகரம் செய்து திகார் சிறையில் அடைக்கப்பட்டு தமிழகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியவர்கள் நாட்டைவிட்டு வெளியேற வேண்டியவர்கள். சிபிஐ அந்த வழக்கில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில் தீர்ப்பு வரும்போது குற்றவாளிகள் யார் என்று தெரியும். நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்து, உலக நாடுகளை இந்தியா பக்கம் திரும்ப செய்து, தீவிரவாதிகளின் அச்சுறுத்தலை சவாலாக எடுத்து, அறவே ஒழித்த பிரதமர் மோடி நாட்டில் இருக்க வேண்டுமா என மக்கள் இந்த தேர்தலில் முடிவெடுப்பார்கள், என்றார் அவர்.