மதுரையின் கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல் கல்விகடன் தரப்பட்டுள்ளது.எம்.பி பெருமிதம்.

 மதுரையின் நலனுக்கான பல்வேறு முன்னெடுப்புகளை மக்கள் பிரதிநிதி என்ற முறையில் செய்து வருகிறோம். அதில் மிக முக்கியமான குறிப்பிடத்தக்க முயற்சி மதுரையில் பள்ளிக்கல்வியை முடிக்கும் மாணவர்களுக்கு உயர்கல்வி பெறுவதற்காக கல்விகடன் பெற்றுத்தரும் முயற்சி.மதுரையில் எந்த ஒரு மாணவருக்கும் கல்விக்கட்டணம் செலுத்த முடியாமல் உயர்கல்வி வாய்ப்பு பறிபோய் விடக்கூடாது என்கிற நோக்கத்தோடு மேற்கொள்ளப்பட்ட முயற்சி இது.பல்வேறு காரணங்களால் தேசிய அளவில் கல்விக்கடன் தருதல் 2020-21 ஆம் ஆண்டில் 54 விழுக்காடு குறைந்துள்ளது. ஆனால் மதுரை மாவட்டத்தில் பல மடங்கு உயர்ந்து 100 கோடி ரூபாய் கல்விக்கடன் தரப்பட்டுள்ளது.கடந்த 2020 ஆகஸ்ட் 25 ஆம் தேதி இவ்வியக்கத்தை மாவட்ட நிர்வாகம், வங்கி நிர்வாகம் ஆகியவற்றுடன் இணைந்து நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவகப் பணியாளர்களோடு முன்னெடுத்தோம்.மதுரையில் உள்ள 357 மேல்நிலைப்பள்ளிகளிலும் கல்விக்கடன் பெறுதல் பற்றி விழிப்புணர்வு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து மூன்று ஆய்வுக்கூட்டங்கள் நடைபெற்றன.அக்டோபர் 20 ஆம் தேதி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் மாபெரும் கல்விக்கடன் சிறப்பு முகாம் நடத்தினோம். 1355 மாணவர்கள் பதிவு செய்தனர். அன்றைய நாளிலேயே 11.81 கோடி ரூபாய் கல்விக்கடனாக வழங்கப்பட்டது.இதனைத் தொடர்ந்து விண்ணப்பித்த அனைவரின் மனுக்களையும் முறையாக பரிசீலித்து கடன் வழங்கியதில் 100 கோடி என்ற சாதனை இலக்கு எட்டப்பட்டுள்ளது.இதுவரை மதுரை மாவட்டத்தை சேர்ந்த 1095 மாணவர்களுக்கு 100 கோடி ரூபாய் கடன் தரப்பட்டுள்ளது.12 தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மூலம் 91.13 கோடி ரூபாயும், 28 தனியார் வங்கிகள் மூலம் 8.16 கோடியும் கடன் வழங்கப்பட்டுள்ளது. அதில் மிக அதிகமாக கனரா வங்கி 38.21 கோடி ரூபாயையும் , பாரத ஸ்டேட் வங்கி 27.89 கோடி ரூபாயையும் கல்விக்கடனாக வழங்கியுள்ளது பாராட்டுக்குரியது.இவ்விலக்கினை அடைய கடந்த ஆறு மாதங்களாக உழைத்திட்ட மாவட்ட ஆட்சியர், வங்கி நிர்வாகங்கள் குறிப்பாக முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் அலுவலக ஊழியர்கள், ஊடக நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை உரித்தாக்குகிறேன். என பத்திரிகையாளர் சந்திப்பில் மதுரை பாராளமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்