குற்றாலம் அருவிகளில் கடும் வெள்ளம்..

தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த ஒரு வாரகாலமாக பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேற்குத்தொடர்ச்சி மலைப் பகுதிகளில் உள்ள நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து காணப்படுகிறது. அனைத்து அருவிகளிலும் நீர் வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் முக்கிய அணைகளின் நீர்மட்டத்தை பொருத்த வரையில், கடனாநதி உச்சநீர்மட்டம் 85 அடி, நீர்இருப்பு 82.70 அடி, நீர்வரத்து 1755 கன அடி, வெளியேற்றம் 1755 கன அடியாக உள்ளது. ராமநதியின் உச்ச நீர்மட்டம் 84 அடி, நீர் இருப்பு 82 அடி, நீர்வரத்து 117.91 கன அடி, வெளியேற்றம் 117.91 கனஅடியாக உள்ளது. கருப்பா நதியின் உச்சநீர்மட்டம் 72 அடி, நீர்இருப்பு 68.24 அடி, நீர் வரத்து 100 கன அடி, வெளியேற்றம் :100 கன அடியாக உள்ளது. குண்டாறு உச்சநீர்மட்டம் 36.10 அடி, நீர் இருப்பு 36.10 அடி,நீர் வரத்து 45 கன அடி, வெளியேற்றம் 45 கன அடியாக உள்ளது. அடவிநயினார் அணையின் உச்ச நீர்மட்டம் 132.22 அடி,நீர் இருப்பு 129.75 அடி, நீர் வரத்து 20 கன அடிநீர் வெளியேற்றம் 40 கன அடியாக உள்ளது. மழை அளவை பொருத்தவரையில், கடனா 82 மி்மீ,ராம நதி 55 மி.மீ, கருப்பா நதி 8 மி.மீ, குண்டாறு 18 மி.மீ, அடவிநயினார் 8 மி.மீ, ஆய்க்குடி 22 மி.மீ, செங்கோட்டை 16 மி.மீ, தென்காசி 21.6 மி.மீ, சங்கரன்கோவில்16.7 மி.மீ, சிவகிரி 7 மி.மீ ஆக உள்ளது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் குற்றாலம் மெயினருவியில் காட்டாற்று வெள்ளம் உருவாகி பஜார் பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.குற்றால நாதர் கோவில் மற்றும் அருகில் உள்ள கடைகள் இருக்கும் பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்துள்ளது. குற்றாலத்தில் உள்ள அருவிகளில் ஏற்பட்டுள்ள திடீர் வெள்ளப் பெருக்கு காரணமாக ஆறுகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. குற்றாலம் தென்காசி சாலையிலுள்ள ஆற்றுப்பாலமும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது.இலஞ்சி குமரன் கோவில் ஆற்றுபாலமும் வெள்ளத்தால் மூழ்கியுள்ளது. மேலும் சிற்றாற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு உருவாகியுள்ளது. ஐந்தருவியில் அனைத்து கிளைகளையும் முடியாவாறு நீர் கொட்டி வருகின்றது. பழைய குற்றால அருவியில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து கொட்டிவருவதால் படிக்கட்டுக்களில் கடுமையான வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் அங்கு உள்ள கடைகளிலும் வெள்ளம் பகுந்துள்ளது. தொடர் மழையின் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவி வருவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக ஆற்றுப் படுகைகளில் அதிகரித்து வரும் வெள்ளத்தை கண்டு கொள்ளாமல்,அதன் ஆபத்தை உணராமல் வாகனங்களில் சென்று வருபவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. இந்த நிலை கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்