Home செய்திகள்உலக செய்திகள் பட்டாணிச் செடிகளில் ஆராய்ச்சி செய்த, மரபியலின் தந்தை கிரிகோர் யோவான் மெண்டல் பிறந்த தினம் இன்று (ஜூலை 20, 1822).

பட்டாணிச் செடிகளில் ஆராய்ச்சி செய்த, மரபியலின் தந்தை கிரிகோர் யோவான் மெண்டல் பிறந்த தினம் இன்று (ஜூலை 20, 1822).

by mohan

கிரிகோர் ஜோஹன் மெண்டல் (Gregor Johann Mendel) ஜூலை 20, 1822ல் ஆஸ்திரியப் பேரரசின் ஹெய்ன்சன் டார்ஃப் நகரில் பிறந்தார். மெண்டல், தன் இள வயதில் தோட்ட வேலை பார்த்தார். பின் ஓல்முட்டுசு (Olmutz) மெய்யியல் நிறுவனத்தில் சேர்ந்து பயின்றார். 1843ல் பெறனோவில் உள்ள அகத்தீனிய மடத்தில் சேர்ந்தார். அதன் பிறகு வியன்னா பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலச் சென்றார். தாவரங்களில் இருந்த வேறுபாடுகளை ஆய்வு செய்வதற்கு, அவரது பல்கலைக்கழகப் பேராசிரியர்களும் மடத்தில் உடன் பணியாற்றியவர்களும் தூண்டுகோலாக விளங்கினர். மெண்டலுக்கு இயற்கை மீதிருந்த காதலே அவருடைய ஆராய்ச்சி மனப்பான்மைக்கு முக்கியக் காரணமாகும். தாவரங்கள் தவிர, வானியலிலும் பரிணாம வளர்ச்சிக் கோட்பாடுகளிலும் அவருக்கு ஈடுபாடு இருந்தது. மெண்டல், தன் மடத்திலிருந்த தோட்டத்திலேயே ஆராய்ச்சிப் பணிகளைச் செய்தார். 1856இல் இருந்து 1863 வரை பல நுணுக்கமான வேறுபாடுகளைக் கொண்ட பட்டாணிச் செடிகளை வளர்த்து, தனது ஆர்வத்தின் காரணமாக தனிப்பட்ட முறையில் அவற்றின் மரபுப் பண்புகளை ஆராய்ந்தார்.

தன் தோட்டத்தில் இருந்த பட்டாணிச் செடிகளில், முறைப்படுத்தப்பட்ட மகரந்தச் சேர்க்கை நடைபெறச் செய்தார். அதன் விளைவுகளை புள்ளியியல் அடிப்படையில் விளங்கிக்கொள்ள முற்பட்டபோது, மரபுப் பண்புகள் சில குறிப்பிட்ட விதிகளுக்கு உட்பட்டே ஒரு சந்ததியில் இருந்து அடுத்த சந்ததிக்கு எப்படி கடத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிந்தார். அவர் மேற்கொண்ட ஒரு ஆய்வில் உயரமான ஒரு பட்டாணிச் செடியும், குட்டையான ஒரு பட்டாணிச் செடியும் மகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தப்பட்டபோது இரண்டாம் தலைமுறையில் விளைந்த எல்லாச் செடிகளும் உயரமானதாகவே காணப்பட்டது. அதே செடிகளை மீண்டும் சுயமகரந்தச் சேர்க்கைக்கு உட்படுத்தியபோது, அதில் மூன்றாம் தலைமுறையில் விளைந்த செடிகளில் நான்கில் ஒரு பகுதிச் செடிகள் குட்டையானதாகவே காணப்பட்டது. ஆக, இரண்டாம் தலைமுறையில் வெளிப்படாமல் இருந்த குட்டைச் செடிக்கான காரணி, மூன்றாம் தலைமுறையில் ஏதோ ஒரு மரபணுச் சேர்க்கை விதியின் கீழ் வெளிப்பட்டுள்ளது என்ற ஒரு முக்கிய உண்மையைக் கண்டறிந்தார். இதுவே அவர் மரபணுவியல் குறித்து மேலும் மேலும் ஆராய தூண்டுகோளாக அமைந்தது. பட்டாணிச் செடிகளின் ஏழு குணாதிசயங்களை பல்வேறு புள்ளியியல் கோட்பாடுகளின் கீழ் மீண்டும் மீண்டும் மகரந்தச் சேர்க்கை மூலம் இணைத்துப் பார்த்தவருக்கு, பல ஆச்சரியங்கள் காத்திருந்தன.

எப்படி ஒரு குரோமோசோமின் குறிப்பிட்ட குணாதிசயம், தன்னைச் சார்ந்துள்ள இன்னொரு குரோமோசோமின் வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்துகிறது என்பதை துல்லியமாகக் கண்டுபிடித்தார். இந்த ஆராய்ச்சிகளின் விளைவாக, பாரம்பரிய இயல்புகள் சந்ததியூடாக கடத்தப்படும் செயல்முறையை விளக்க, இரு முக்கிய விதிகளை முன்மொழிந்தார். அவை பின்னாளில் மெண்டலின் விதிகள் எனப் பெயரிடப்பட்டு அழைக்கப்பட்டு வருகின்றன. 1865ஆம் ஆண்டு, பொகீமியாவில் (Bohemia) உள்ள புருன் (Brunn) இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் நடந்த இரண்டு அமர்வுகளில் தாவரக் கலப்பினமாக்கல் ஆய்வுகள் என்ற தலைப்பிலான தம்முடைய ஆய்வு அறிக்கையை முன்வைத்தார். எனினும், அந்தக் காலகட்டத்தில் மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தை எவரும் உணரவில்லை.

அதற்கடுத்த 35 ஆண்டுகளில் மூன்று முறை மட்டுமே பிற அறிஞர்கள் அவருடைய ஆய்வை மேற்கோள் காட்டினர். பட்டாணியில் தனது ஆய்வை முடித்துக்கொண்டவர், பின்னர் விலங்குகளிலும் தன் ஆய்வை மேற்கொள்ளும் எண்ணத்துடன் தேனீக்களில் தனது ஆய்வைத் தொடங்கினார். தேனீக்களில் ஒரு கலப்பினத்தை அவர் தோற்றுவித்த போதிலும், அந்தக் கலப்பினம் நிலைத்து நிற்காமல் அழிந்து போனது. இராணித் தேனீயின் இனப்பெருக்க நடவடிக்கையை கட்டுப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள் காரணமாக, தேனீக்களின் மரபியல் பற்றிய சரியானதொரு புரிதலை அவரால் கொடுக்க முடியாமல் போனது. அவர் இனங்கண்டு எடுத்துரைத்த சில புதிய தாவர இனங்களுக்குரிய சீர்தர தாவரவியல் ஆசிரிய குறுக்கங்களில் (The standard botanical author abbreviation) ‘மெண்டல்’ எனக் குறிப்பிடப்படுகின்றது.

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கம் வரை மெண்டலின் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவம் உணரப்படாமலேயே இருந்தது. 1900ல் இயூகோ டி விரீசு (Hugo de Vries), காருல் கோரென்சு (Carl Correns) மற்றும் எரிக்கு வான் இட்செர்மர்க்கு (Erich von Tschermak) ஆகிய அறிஞர்கள் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளை மீட்டெடுத்தார்கள். அவர்கள் செய்து பார்த்த சோதனைகளில் மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளைச் சரிபார்த்துக்கொள்ள முடிந்தது. அதன் பின்னரும் கூட, மெண்டலின் கண்டுபிடிப்புகளின் முக்கியத்துவம் பற்றி வில்லியம் பேட்சனுக்கும் கார்ல் பியர்சனுக்கும் இடையில் கடும் விவாதங்கள் நிகழ்ந்தன. 1918ல், ரொனால்டு பிசர் மெண்டலின் மரபியல் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நவீன பரிணாம உயிரியல் துறைக்கு வித்திட்டார். 1930கள் 1940 களில், அவரது ஆய்வுகளை மீட்டெடுத்து, டார்வினின் இயற்கைத் தேர்வுக் கொள்கையுடன் சேர்த்து, தற்கால நவீன கொள்கைகளை உருவாக்கினார்கள். மெண்டலின் ஆராய்ச்சி முடிவுகளின் நம்பகத்தன்மை அவ்வப்போது கேள்விக்குளாக்கப்பட்டு வருகிறது.

புகழ்பெற்ற புள்ளியியலாளரான ரொனால்டு பிசர் மெண்டலின் ஆய்வுகளில் கூறப்பட்டிருந்த F1 சந்ததியின் விகிதத்தை ஆய்வுசெய்து, அவை நம்ப முடியாத வகையில் மூன்றுக்கு ஒன்று என்ற விகிதத்தை மிக அண்மித்திருப்பதாக கருதினார். மெண்டல், உண்மைக்குப் புறம்பான முறையில் தன் ஆராய்ச்சி முடிவுகளைத் திருத்தி எழுதினார் என்று சொல்ல முடியாது என்றாலும், அவரின் ஆராய்ச்சி முடிவுகள் ஆச்சரியப்படத்தக்க வகையில் எளிமையாக உள்ளன. பெரும்பாலும், அறிவியல் ஆராய்ச்சி முடிவுகள் இவ்வளவு எளிமையாக கிடைத்து விடுவதில்லை. இது போக, அவர் பெரும்பாலும் ஒரே மரபணுவில் ஏற்படும் மாற்றத்தின் காரணமாகத் தாவரங்களில் விளையும் வேறுபாடுகளை மட்டும் கொடுத்திருந்தார். பல மரபணுக்களையும் அவர் கவனித்திருந்தார் என்றால், மரபணுக்களின் இணைப்புகளின் காரணமாக முடிவுகள் வேறு மாதிரியாகவோ இவ்வளவு எளிமையாகவோ கிடைத்திருக்காமல் இருக்கலாம். இதனால், ஒருவேளை மெண்டல், தான் பரிந்துரைத்த மரபியல் கோட்பாடுகளுக்குப் புறம்பாக வந்த ஆராய்ச்சி முடிவுகளை மறைத்திருக்கக் கூடுமோ என்ற ஐயப்பாடும் நிலவுகிறது.

மரபணுக்கள் எவ்வாறு இயற்கை விதிகளுக்கு உட்பட்டு ஒரு சந்ததியிலிருந்து அடுத்த சந்ததியினருக்கு இடம் பெயருகிறது என்பது குறித்தும் தனது நீண்ட ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்தவர் கிரிகோர் மெண்டல். இங்கிலாந்து இயற்கையிலாளர் சார்லஸ் டார்வினும் மெண்டலும் ஒரே காலகட்டத்தில் வாழ்ந்தவர்கள். மெண்டல், டார்வினின் ”உயிரினங்களின் தோற்றம்” கட்டுரையைப் படித்திருந்த போதிலும் அதன் முக்கியத்துவத்தை உணர்ந்திருக்கவில்லை. மெண்டலின் ஆராய்ச்சிக் கட்டுரையை டார்வின் பெற்றுக் கொண்ட போதிலும், இறுதி வரை அதைப் படிக்கவில்லை என்று தெரிய வருகிறது. இது போன்ற காரணங்களால், 1920 வரை பரிணாமம் குறித்த கோட்பாடுகள் உருப்பெறாமலே இருந்தன. 1868ல், அரசாங்கம் சமய நிறுவனங்களின் மீது சிறப்பு வரிகளை விதிக்க முயன்ற போது, அதற்கு எதிராக செயற்பட வேண்டிய நிலையில் இருந்தார். எனவே, தனது அறிவியல் நோக்கிலான வேலைகளை முடிவுக்குக் கொண்டு வந்துவிட்டு, நிருவாகக் கடமைகளை செய்யத் தொடங்கினார். மரபியலின் தந்தை கிரிகோர் யோவான் மெண்டல் ஜனவரி 6,1884ல் தனது 61வது அகவையில் ஆத்திரியா-அங்கேரில் கல்லீரல் அழற்சி நோயால் இவ்வுலகை விட்டு பிரிந்தார். Source By: Wikipedia தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!