இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்த முயன்ற 7 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்..

இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி வர முயன்ற சுமார் 7 கோடி மதிப்புடைய தங்கத்தினை இலங்கை கடற்படையினர பறிமுதல் செய்துள்ளனர். இது தொடர்பாக தலைமன்னார் பகுதியை சேர்ந்ந 3 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே கடல் வழியாக போதை பொருட்களான கஞ்சா, போதை மாத்திரைகள், வலி மாத்திரைகள், பீடி பண்டல்கள், கடல் அட்டைகள், தங்கம் ஆகியன கள்ளத்தனமாக கடத்தி செல்வது வாடிக்கையாகி வருகிறது. இந்திய கடல் பரப்பினை கண்காணிப்பதற்காக இந்திய கடற்படை, கடலோரக் காவல்படை, சுங்கத்துறை, தமிழக கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் மற்றும் க்யூ பிரிவு உள்ளிட்ட பல்வேறு புலனாய்வு அமைப்புகள் உள்ளன. இதே போல் இலங்கை கடற்பகுதியில் இலங்கை கடற்படை, இலங்கை கடலோரக் காவல் படை என பல பிரிவுகள் இயங்கி வருகின்றன.

 இரு நாடுகளை சேர்ந்த இத்தனை பாதுகாப்பு வளையங்களையும் மீறி கடல் வழியாக கடத்தல் தொழில் கொடிகட்டி பறக்கிறது. கடந்த 3 நாட்களுக்கு முன் மண்டபம் அருகே வேதாளையில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டு வரப்பட்ட 146 கிலோ கஞ்சா பிடிபட்டது. அதே நாளில் இலங்கை பேசாலை பகுதியில் இருந்து கடத்தி வரப்பட்ட 2.6 கிலோ தங்கம் இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்த பரபரப்பு ஓய்வதற்கு முன்பாக மேலும் ஒரு கடத்தல் கும்பலை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். நேற்று முன் தினம் இலங்கை தலைமன்னார் பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர் சந்தேகத்திற்கு இடமான நிலையில் வந்து கொண்டிருந்த பிளாஸ்டிக் படகு ஒன்றை பிடித்து சோதனையிட்டனர். அந்த சோதனையில் படகில் மறைத்து வைக்கப்பட்டிருந்த தலா 100 கிராம் எடை கொண்ட 242 தங்க கட்டிகளாக 24 கிலோ 200 கிராம் சிக்கியது. இவற்றின் இந்திய மதிப்பு சுமார் 7 கோடி ஆகும். இதனை தொடர்ந்து படகில் வந்த தலைமன்னாரைச் சேர்ந்த 3 பேர்களை கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்து 3 செல்போன் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய பிளாஸ்டிக் படகினையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இலங்கையில் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புடைய தங்கம் தொடர்ச்சியாக ராமேஸ்வரம் பகுதிக்கு கடத்தி வரப்படும் நிலையில், ராமேஸ்வரம் பகுதியில் உள்ள கடத்தல்காரர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டிய புலனாய்வு பிரிவுகளில் ஒன்றான க்யூ பிரிவு வில் ஒரே ஒரு தலைமை காவலரை மட்டும் கொண்டு இயங்கி வருகிறது. இதனால் நீண்ட கடற்பரப்பின் வழியாக ஊடுருவும் கடத்தல்காரர்களைப் பற்றிய தகவல்களை கண்டறிய முடியாமல் க்யூ பிரிவு திணறி வருகிறது. இதனால் கடத்தல் நடவடிக்கைகள் எந்த சிரமமும் இன்றி தொடர்ச்சியாக நடந்து வருகிறது.