தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக மனநல தின விழா..

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் உலக மனநல தின விழா கொண்டாடாப்பட்டது. இந்த விழாவின் போது நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. மன நலம் காப்பது பற்றியும், மன நோய் பற்றிய விழிப்புணர்வு சமுதாயத்தில் ஏற்படுத்தவும் ஆண்டுதோறும் அக்டோபர் 10 ஆம் தேதி மனநல நாள் விழாவாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி மாவட்ட மனநல திட்டம் சார்பாக அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை தென்காசியில் உலக மனநல நாள் விழா இணை இயக்குனர் மரு.வெங்கடரங்கன் தலைமையில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் ரோட்டரி சங்க தலைவர் பிரகாஷ், செயலாளர், கார்த்திக்குமார், இந்திய மருத்துவ கழக குற்றாலம் தலைவர் மரு.அசரானா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். இந்த நிகழ்வில் அரசு மருத்துவமனையில் உள்ள மனநல வெளி நோயாளிகள், உள் நோயாளிகள், குழந்தைகள் மனநலம், மது போதை சிறப்பு சேவைகள் பற்றி மருத்துவமனை கண்காணிப்பாளர் மரு.ஜெஸ்லின் எடுத்து கூறினார்.”ஏற்றதாழ்வு நிறைந்த உலகில் மனநலம்” என்னும் தலைப்பில் மனநல மருத்துவர் நிர்மல் சிறப்புரையாற்றினார்.

அதில் அவர் கூறியதாவது: ஓர் இலக்கை நோக்கி உழைக்கும் அனைவருக்கும் கிடைக்ககூடிய வாய்ப்புகளும் வசதிகளும் வேறு வேறாக இருந்தாலும் காலத்தின் கட்டாயத்தினால் ஒன்றாக போட்டியிட வேண்டியுள்ளது. பேராற்றல் கொண்ட மனமே இந்த இடைவெளியை நிரப்பமுடியும். இன்றைய போட்டி மிகுந்த சூழலில் அனைத்து வயதினருக்கும் மனஅழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது.வாழ்வில் ஏற்படும் சவால்களை மனஉறுதியுடன் , தம்முடைய திறமையால் தடைகற்களை வெற்றிபடிகளாக மாற்றுபவர்களே வருங்கால சாதனையாளர்களாக ஆகின்றனர் என்ற ஆழமிக்க கருத்தை முன் வைத்தார். விழாவினை யொட்டி நர்சிங் மாணவிகள், பயிற்சி மருந்தாளுநர்களுக்கு மனநல விழிப்புணர்வை விளக்கும் வகையில் ரங்கோலி போட்டி, மற்றும் பேச்சு போட்டியும் நடைபெற்றது. அதற்கு உறைவிட மருத்துவர் அகத்தியன், மூத்த குடிமை மருத்துவர்கள் மரு.கீதா, மரு.அனிதா, மரு.லதா ஆகியோர் நடுவர்களாக இருந்து வெற்றியாளர்களை தேர்வு செய்து பரிசளித்து பாராட்டினர். விழாவில் மருத்துவமனை மருத்துவர்கள், செவிலியர்கள், மருந்தாளுநர்கள், பயிற்சி மாணவர்கள், மருத்துவமனை பணியாளர்கள், பொதுமக்கள் அனைவரும் பங்குபெற்றனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்