கொரோனா தடுப்பு நடவடிக்கை; 3 நாட்கள் தொடர் கடை அடைப்பு-சுரண்டை தொழில் நகரம் வெறிச்சோடியது…

தமிழகத்தில் கொரோனா தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.

இதனை தடுக்கும் வகையில் மக்கள் அதிகமாக கூடும் முக்கிய நகரங்களில் வியாபாரிகள் தாமாகவே முன்வந்து முழு கடையடைப்பு நடத்தி கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த ஓத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

அந்த வகையில், பொதுமக்கள் அதிகமாக நடமாடுவதை தவிர்க்க தென்காசி மாவட்டம் சுரண்டை வியாபாரிகள் சங்கம், காமராஜர் காய்கனி மார்க்கெட் வியாபாரிகள் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம், நுகர்பொருள் விநியோகஸ்தர் சங்கங்களின் கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்து வியாபாரிகள் சங்கம் சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தென்காசி மாவட்டம் சுரண்டை பேரூராட்சி பகுதியில் உள்ள அனைத்து கடைகளும் சனிக்கிழமை துவங்கி திங்கள் கிழமை வரை தொடர்ந்து 3 நாட்கள் தொடர் முழு கடையடைப்பு நடத்த தீர்மானிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் 11-ஆம் தேதி காலை முதல் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. இறைச்சி, மீன், சிக்கன் உள்ளிட்ட கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. பால் மற்றும் மருந்து கடைகள் மட்டும் திறக்கப்பட்டுள்ளது.

அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள் இயங்கின. கார், ஆட்டோ, டூரிஸ்ட் வாகனங்கள் இயங்கவில்லை. முழு கடையடைப்பை முன்னிட்டு சுரண்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரீஸ்வரி தலைமையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். வியாபாரிகளின் முழு கடை அடைப்பால் சுரண்டை தொழில் நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image