இராமேஸ்வரத்தில் தமிழக அரசு சார்பாக மீன்வள அறிவியல் கல்லூரி மற்றும் மீன்வள பொறியியல் கல்லூரி அமைத்து தரக்கோரி முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கோரிக்கை :

இராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையைச் சார்ந்த பகுதிதான் அதிகமாக இருக்கிறது. மேலும் முக்கிய தொழிலாக மீன்பிடி தொழில் இருக்கிறது. இந்த பகுதியைச் சார்ந்த மாணவர்களுக்கு மீன் வளம் சார்ந்த படிப்பினை படிக்க ஒரு கல்லூரி கூட இல்லாமல் இருப்பது வருத்தமளிக்கிறது. இராமேஸ்வரத்தில் மீன் வளம், பவளப்பாறை ஆராய்ச்சி, கடற்பாசி வளர்ப்பு, மீன் வளம் சார்ந்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதி, துறைமுகம் மேலாண்மை,கடல்சார் பொறியியல்,போக்குவரத்து மற்றும் சரக்கு கையாளுதல்,குளிர்சாதன சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை பற்றி அறிந்து கல்வி பயில ஒரு கல்லூரி அமைந்தால் இந்த பகுதி மாணவர்கள் பயன்பெறுவார்கள்.

இராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து பல மாணவர்கள் வெளியூர்களில் கல்விக்காக செல்கின்றனர். மீன்வளம் சார்ந்து கல்வி கற்க தூத்துக்குடி மற்றும் நாகப்பட்டினம் ,சென்னை வரை சென்று கல்வி பயில முயற்சிகள் மேற்கொள்கின்றனர். சில மாணவர்கள் வெளியூர்களில் விடுதியில் தங்கியும் தங்களது கல்வியை கற்கின்றனர். படிக்க வேண்டும் என ஆர்வம் இருந்தும் குடும்ப வறுமையின் காரணமாக பலர் கல்வி கற்க இயலாத சூழல் உருவாகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரை பரப்பளவை உள்ளடக்கியது. மீனவர்கள் அதிகம் வாழும் பகுதியாக இருந்தும் தங்களது குழந்தைகளுக்கு மீன்வளம் சார்ந்த படிப்பு எட்டாக்கனியாக இருப்பது வேதனையளிக்கிறது. ஆகையால் தமிழக அரசு இதனை கருத்தில் கொண்டு இராமேஸ்வரத்தில் அரசு சார்பில் மீன்வள கல்லூரி மற்றும் பொறியியல் கல்லூரி அமைத்து ஏழை, எளிய மாணவ மாணவிகளுக்கு இலவச கல்வி தந்து உதவ வேண்டுகிறேன்.

கடல்சார் துறை படிப்பின் அவசியம் குறித்து மக்கள் பாதை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் கூறியதாவது:

கடல் தான் இந்தியாவின் பலம். உலகின் மிகப்பெரிய சொத்து கடல். பல்வேறு வகையான உயிரினங்களின் வாழிடம் அது. நிலத்தில் கிடைக்காத பல அரிய வளங்கள் கடலில் இருக்கின்றன. பல்வேறு வகையான வர்த்தகத்துக்கும், போக்குவரத்துக்கும் கடல் பயன்படுகிறது. மீன்பிடித்தல், துறைமுகப் பணிகள், கப்பல் பணிகள், கடல் தொடர்பான சட்டங்கள், கடல் வணிக மேலாண்மை என கடலைச் சார்ந்த துறைகள் ஏராளம். தமிழகத்திலும், பிற மாநிலங்களிலும் கடல் சார்ந்த பொருளாதார மேம்பாட்டு நடவடிக்கைகள், தொழிற்சாலைகள், துறைமுகங்கள், மீன்பிடி தொழில், சுற்றுலா, தாதுவளம் பயன்பாடு, உப்பு தயாரிப்பு போன்றவை நடந்து வருகிறது. குறிப்பாக தமிழக கடற்கரை பகுதிகளில் கடற்பாசி, கடற்புல், கடல் தாவரங்கள் உள்ளிட்டவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் பொக்கிஷமாக உள்ளன.

கடல்சார் துறைகளில் தாரளமான வேலைவாய்ப்பு இருக்கிறது. கடல் தொடர்பான வேலைகளுக்குப் படிக்கும் படிப்புகளை கடல் சார் படிப்புகள் என்று அடக்கினாலும், அதில் பலவகையான பிரிவுகள் இருக்கின்றன. அவ்வப்போது புதிது புதிதாகப் பல்வேறு துறைகள் வந்துகொண்டும் இருக்கின்றன. இதில் சிறப்பு என்னவென்றால், கடல்சார் படிப்புகளுக்கு அதிக வேலை வாய்ப்பு இருப்பதுடன், ஊதியமும் மற்ற துறைகளைக் காட்டிலும் மிக அதிகமாகவே இருக்கிறது.இந்தியாவில் வருங்காலத்தில் கடல் வளம் சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.குறிப்பாக இந்தியாவில் கடல் வளம் சார்ந்த படிப்பு அவசியம். இந்தியா மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட ஒரு தீபகற்ப நாடு. இங்கு கடல் வளம் சார்ந்த படிப்புகளுக்கு வாய்ப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. இராமநாதபுரம் மாவட்ட மாணவ மாணவியர்களுக்கு கடல் மற்றும் மீன்வளம் சார்ந்த படிப்பினை படிக்க விழிப்புணர்வு ஏற்படுத்துவது காலத்தின் கட்டாயம்.

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & Get Delivered