மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற பிம்பம் கவனமாக கட்டி எழுப்பப்படுவதை ஊடகங்கள் வழியாக பார்க்க முடிகிறது:-திருமுருகன் காந்தி…

மக்கள் ஊரடங்கிற்கு முழு ஒத்துழைப்பு தருவதில்லை என்ற பிம்பம் கவனமாக கட்டி எழுப்பப்படுவதை ஊடகங்கள் வழியாக பார்க்க முடிகிறது. மூன்று மாதங்களாக தூங்கி வழிந்து திடீரென விழிக்க முயலும் அரசாங்கத்தை கேள்வி கேட்காமல் பொதுமக்களை குற்றவாளிகளாக மாற்றுகிறார்கள். நாளை நோய் பரவல் அதிகமானதென்றால், அதன் முழு பொறுப்பும் மக்கள் மீது சுமத்தப்படப் போகிறது. இதற்கான பணிகளை இப்போதே இந்த ஊடகங்கள் ஆரம்பித்துவிட்டன. நெருக்கடியான காலகட்டத்தில் அரசோடு ஒத்துழைக்க வேண்டுமென்பதற்கு எல்லை இருக்கிறது. வெண்டிலேட்டர்கள், முகக்கவசம், படுக்கைகள், பரிசோதனை நிலையங்கள் மற்றும் பாதுகாப்பு கவசங்கள் என எதுவும் சுகாதார பணியாளர்களுக்கு கூட இந்த மூன்று மாதங்களில் ஏற்பாடு செய்யவில்லை. இதைப் பற்றி கேள்வி கேட்காமல், மக்களை நோக்கி விரல் நீட்டும் ஊடகங்கள் அரசிற்கு யோக்கியவான் பட்டம் சூட்ட முயலுவதாகவே பார்க்க இயலும்.

மாநிலம், யூனியன் பிரதேசத்தோடு சேர்த்து 35 ஆளுமைப்பகுதிகளுக்கு 15,000 கோடியை வைத்து என்ன செய்யமுடியும் என நினைக்கிறது பாஜக? சவக்குழி கூட தோண்டமுடியாது. 130 கோடி மக்களுக்கு நூறு ரூபாயை ஒவ்வொரு தலைக்கும் ஒதுக்கி இருக்கிறது அரசு. ஒருவேளை சோற்றிற்கு போதாத நிதி ஒதுக்கீடு இது. இப்போதிருக்கும் விலைவாசிக்கு முகக்கவசமே 150 ரூபாய்க்கு விற்கிறார்கள். இதையெல்லாம் கேள்வி எழுப்பாமல் மயிலிறகால் வருடிக்கொண்டிருக்கும் ஊடகங்களை நோக்கி சமரசமற்று கேள்வி எழுப்புங்கள் நண்பர்களே. சென்னை வெள்ளத்தின் போது உதவிப்பொருட்கள் மீது அதிமுகவினர் ஜெயலலிதா ஸ்டிக்கர் ஒட்டுவதும், பிடுங்கிச் செல்வதையும் அன்றய தினமே ஊடகத்தின் விவாதத்தில் மே17 இயக்கம் அம்பலப்படுத்தி தடுத்து நிறுத்தியது. இவையெல்லாம் இன்று சாத்தியமா எனத் தெரியவில்லை.

இந்தியா முழுவதும் ஒருவகை அச்சமும், பதட்டமும், கவலையும் சூழ்ந்திருக்கிறது. பேரழிவு நிகழ்ந்துவிடக் கூடாதென அனைவரும் விரும்புகிறோம். கொரோனாவால் வரும் பேரழிவினைப் போல பசியாலும், சுகாதார சீர்கேடாலும் அழிவு வந்துவிடாமல் தடுக்கும் பொறுப்பு நம் அனைவருடையது.

மூன்று மாதங்களாக மக்களுக்கு எவ்வித பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தாமல் இன்று மக்களை குற்றவாளியாக்காதீர்கள்… கீழ்நிலை பணியாளர்கள் மீது வேலைச்சுமையை எல்லையற்று சுமத்துகிறது பாசிச அரசு. இவைகளை பேசாமல் மூடிமறைக்கும் ஊடகங்களை அம்பலப்படுத்துங்கள்.

பேசாதவர்களைப் பேசவைப்போம். பேச இயலாதவர்களுக்காக பேசுவோம். எழுதுங்கள். பகிருங்கள்

தோழர் திருமுருகன் காந்தி
மே 17 இயக்கம்

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

சத்தியபாதை செப்டம்பர் மாத இதழ்..

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image