Home செய்திகள்உலக செய்திகள் பசுமை புரட்சியின் தந்தை, நோபல் பரிசு வென்ற அமெரிக்க அறிவியலாளர் நார்மன் போர்லாக் பிறந்தநாள் இன்று (மார்ச் 25, 1914).

பசுமை புரட்சியின் தந்தை, நோபல் பரிசு வென்ற அமெரிக்க அறிவியலாளர் நார்மன் போர்லாக் பிறந்தநாள் இன்று (மார்ச் 25, 1914).

by mohan

நார்மன் ஏர்னெஸ்ட் போர்லாக் (Norman Ernest Borlaug) மார்ச் 25, 1914ல் அமெரிக்காவின் கிரெஸ்கோ நகரில் பிறந்தார். பள்ளிப் படிப்பை அதே ஊரில் முடித்தார். குடும்பப் பண்ணையில் மீன்பிடிப்பது, வேட்டையாடுவது, சோளம், ஓட்ஸ் பயிரிடுவது, ஆடு, மாடு, கோழி வளர்ப்பது ஆகியவைதான் சிறு வயதில் அவரது பிரதான பொழுதுபோக்கு. மினசோட்டா பல்கலைக்கழகத்தில் வனவியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார். மசாசூசெட்ஸ், இடாஹோவில் வனத்துறை அதிகாரியாக பணியாற்றினார். பின்னர், தாவர நோய் துறையில் முதுகலைப் பட்டமும், தாவர நோய் மற்றும் மரபணுவியலில் ஆய்வு மேற்கொண்டு முனைவர் பட்டமும் பெற்றார்.

நுண்ணுயிரி நிபுணராக ஓர் அறிவியல் அமைப்பில் இரண்டாண்டுகள் பணியாற்றினார். அப்போது வேளாண் துறை குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டார். மெக்சிகோ அரசு அழைப்பின் பேரில் அந்நாட்டின் கூட்டுறவு கோதுமை ஆராய்ச்சி, உற்பத்தி திட்ட அமைப்பில் மரபணுவியல் மற்றும் தாவர நோய் நிபுணராகப் பணியாற்றினார். மெக்சிகோ விஞ்ஞானிகளுடன் இணைந்து இவர் மேற்கொண்ட ஆராய்ச்சிகளில், இருபது ஆண்டுகளுக்குள், அதிக விளைச்சல் தரும், நோய் எதிர்ப்பு சக்தி உள்ள குட்டையான (Semi Dwarf) கோதுமை பயிர் ரகங்களை உருவாக்கினார். இவற்றை மெக்சிகோ மட்டுமின்றி, இந்தியா, பாகிஸ்தானிலும் அறிமுகம் செய்ய வழிகாட்டினார். நோய் தாக்காத அதிக விளைச்சல் தரும் பயிர்களை 1960 ம் ஆண்டுகளின் போது நார்மன் போர்லாக் உருவாக்கினார். கோதுமை ஏற்றுமதியில் 1963ல் மெக்சிகோ முதலிடம் பெற்றது. 1965 முதல் 1970 வரை காலகட்டத்தில் இந்தியா, பாகிஸ்தானில் கோதுமை விளைச்சல் ஏறக்குறைய இரண்டு மடங்கானது. இந்த நாடுகளில் விவசாய உற்பத்தி தன்னிறைவை எட்டுவதில் பெரும் பங்காற்றினார். ஆசியாவின் பிற நாடுகளிலும், ஆப்பிரிக்காவிலும் உணவு உற்பத்தி பெருக உதவினார். உணவு பாதுகாப்பை மேம்படுத்திய இவரது செயல்பாடு பசுமைப் புரட்சி எனப் பாராட்டப்பட்டது. சர்வதேச மக்காச்சோளம், கோதுமை மேம்படுத்துதல் மையத்தின் சர்வதேச கோதுமை மேம்பாட்டுத் திட்ட இயக்குநராக நியமிக்கப்பட்டார். ஆராய்ச்சி, உற்பத்தி முறைகள் குறித்த பயிற்சிகளில் இளம் விஞ்ஞானிகளை அதிகம் ஈடுபடுத்தினார். அறிவியல் சாதனைகள் மட்டுமின்றி, மனிதநேயத்தையும் சேர்த்தே இலக்காகக் கொண்டிருந்தார்.

உலகம் முழுவதும் பசியால் வாடும் மக்களுக்கு உணவு அளிப்பதை தலையாய கடமையாகக் கருதினார். உணவு உற்பத்தியைப் பெருக்கி, உலக அமைதிக்கு வித்திட்ட இவரது பங்களிப்புகளுக்காக 1970ல் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. விடுதலைக்கான அமெரிக்க தலைவர் பதக்கம் மற்றும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் தங்கப் பதக்கம், நோபல் பரிசு ஆகிய மூன்று உயர்ந்த விருதுகளைப் பெற்ற ஏழு பேரில் இவரும் ஒருவர். இந்தியாவின் இரண்டாவது உயரிய விருதான பத்மவிபூஷண் விருதும் பெற்றவர். இவரது ஆராய்ச்சி முடிவுகள் ஒருசில சுற்றுச்சூழல் மற்றும் சமூக ஆர்வலர்களின் விமர்சனங்களுக்கு உள்ளாகின. அதே நேரம், உலகம் முழுவதும் பல கோடி மக்களை பசியின் கோரப் பிடியில் இருந்து இவரது பசுமைப் புரட்சி காப்பாற்றியது பெரிதும் போற்றப்படுகிறது.அவரது கண்டுபிடிப்புகள் மூலம் 245 மில்லியன் மக்கள் பசியின் பிடியிலிருந்து காப்பாற்றப்பட்டிருப்பதாக மதிப்பிடப்படுகிறது. பசுமைப் புரட்சியின் தந்தை என போற்றப்படும் நார்மன் எர்னஸ்ட் போர்லாக் செப்டம்பர் 12, 2009ல் தனது 95வது வயதில் டெக்சாஸ் நகரில் இவ்வுலகை விட்டு பிரிந்தார். தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!