அயோத்தி’வழக்கு’ விரைவில் தீர்ப்பு, இந்தியா முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்..!

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் வரும் 17-ம்தேதி ஓய்வு பெறுகிறார். இதனையடுத்து வரும் 13-ம் தேதி அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாகலாம் என கூறப்படுகிறது. அன்று தவறினாலும், 14 அல்லது 15-ம் தேதி கண்டிப்பாக தீர்ப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இந்நிலையில் தீர்ப்புக்காக இந்தியா முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது.

ஏற்கெனவே அயோத்தியிலும், உத்திரபிரதேசத்தின் காஜியாபாத்திலும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. மேலும் இந்தியா முழுவதுமே பாதுகாப்பை பலப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. குறிப்பாக வட மாநிலங்களில் பாதுகாப்பை பலப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. உத்திரப்பிரதேசம் மற்றும் மத்திய பிரதேச மாநில போலீசாருக்கு வரும் 30-தேதி வரை விடுமுறையை ரத்து செய்து அம்மாநில அரசுகள் உத்தரவிட்டுள்ளன.

அதேபோல் தீர்ப்பு எந்த தரப்புக்கு சாதகமாக வந்தாலும் இரு தரப்பும் அமைதி காக்க வேண்டுமென மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. வானொலியில் பேசிய பிரதமர் மோடி, அயோத்தி வழக்கில் அலகாபாத் நீதிமன்றம் தீர்ப்பளித்த போது அமைதி காத்ததை போல, உச்ச நீதிமன்ற தீர்ப்பின் போதும் அனைவரும் அமைதிகாக்க வேண்டுமென தெரிவித்தார். இது குறித்து பேசிய உபி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், உச்ச நீதிமன்ற தீர்ப்பை மாநில அரசு முழுமையாக அமல்படுத்தும். நீதிமன்ற தீர்ப்பை அனைத்து தரப்பு மக்களும் ஏற்றுக்கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

மும்பையில் கடந்த 2ம் தேதி கூடிய முஸ்லீம் அமைப்புகள், நீதிமன்ற தீர்ப்பு எதுவாக இருந்தாலும் அதற்கு முஸ்லீம் அமைப்புகள் மதிப்பளிக்க வேண்டுமென அறிவித்தன. அதேபோல் டெல்லியில் கடந்த 1ம் தேதி ஆர்எஸ்எஸ் அமைப்பின் உயர் நிலைக்கூட்டம் நடைபெற்றது. அதில் சாதகமாக தீர்ப்பு வந்தாலும் வெற்றி ஊர்வலங்கள் நடத்தக்கூடாது என கண்டிப்புடன் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இன்னும் 10 நாட்களுக்குள் தீர்ப்பு வெளியாக உள்ளதால் மத்திய மாநில அரசுகள், வழக்கு தொடர்புடைய இரு தரப்பினர், பொதுமக்கள் என அனைவரும் தயாராகி வருகின்றனர். இதற்கிடையே 5 பேர் அடங்கிய நீதிபதிகள் குழு என்பதால், 5 பேரும் ஒருமித்த தீர்ப்பை வழங்குவார்களா அல்லது மாறுபட்ட தீர்ப்பை வழங்குவார்களா என்ற எதிர்பார்ப்பும் கிளம்பியுள்ளது.

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

KEELAI MEDIA & ADVERTISEMENT PVT.LTD

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image