கோமாவில் இருந்த கணவனை மீட்டெடுத்தது மனைவியின் பாசம்..!

ஐந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்த கணவன், மனைவியின் பாசத்தால் கண் விழித்த சம்பவம் அனைவரையும் அச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்த விவரம் வருமாறு; சீனாவின் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்தவர் லீ ஷிலியா. கடந்த 2013ம் ஆண்டு ஒரு விபத்தில் சிக்கிய இவருக்கு, தலையின் பின் பகுதியில் பலத்தகாயம் ஏற்பட்டது. டாக்டர்கள் எவ்வளவோ போராடியும் லீ கோமா நிலைக்கு சென்றார். இதையடுத்து, ஆஸ்பத்திரியில் வைத்து அவருக்கு சில காலம் சிகிச்சை அளித்து வந்தனர். ஆனாலும், லீ உடல் நிலையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அவரை வீட்டுக்கு அனுப்ப ஆஸ்பத்திரி நிர்வாகம் முடிவு செய்தது.

இதையடுத்து லீ-யின் மனைவி ஷிலாங்-கிடம் பேசிய டாக்டர்கள், “50 வயதைக் கடந்தவர் என்பதால், இனிமேல் லீயால் கோமாவில் இருந்து மீள வாய்ப்பில்லை. இருக்கும் காலம் வரை அவரை நன்றாக கவனித்துக் கொள்ளுங்கள்” எனக் கூறி, லீயை வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.’காப்பாற்ற முடியாது’ என டாக்டர்களே கைவிட்ட நிலையிலும், லீயின் மனைவி மனம் தளரவில்லை. நாளின் 24 மணி நேரத்தில், 20 மணி நேரம் அவர் அருகிலேயே இருந்து கனிவோடு கவனித்து வந்தார். அத்துடன், லீயின் தலைமாட்டிலேயே இருந்த அவர் மனைவி, லீ-க்கு பிடித்த பாடல்களை ஒலிபரப்பி வந்தார். ஐந்து ஆண்டுகள் இப்படியே நகர்ந்த நிலையில், திடீரென ஒருநாள் கண் விழித்த லீ, “நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு இன்ப அதிர்ச்சி அடைந்த ஷிலாங், இதுகுறித்து லீ-க்கு சிகிச்சை அளித்த ஆஸ்பத்திரிக்கு தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை பரிசோதித்த டாக்டர்கள், லீ கண் விழித்ததை உறுதி செய்தனர். இந்த செய்தி, டாக்டர்களை மட்டுமின்றி ஹூபே மாகாண மக்களையே ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.தொடர்ந்து 5 ஆண்டுகள் படுக்கையில் இருந்ததால், போதிய ஊட்டச்சத்து உணவுகளை சாப்பிடாமல் மிகவும் எடை குறைந்து காணப்பட்டார். இதனால், அவருடைய உடல் எடையை அதிகரித்து, ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக மீண்டும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அன்பைவிட மிகச் சிறந்தது இந்த உலகில் எதுவும் இல்லை என்பதற்கு, இந்தச் சம்பவம் நிகழ்கால உதாரணம் ஆகியிருக்கிறது.

– சிறப்பு நிருபர் ப.ஞானமுத்து