Home செய்திகள் இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை: உள் நோயாளிகள் பலர் வலிப்பால் அவதி..

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை: உள் நோயாளிகள் பலர் வலிப்பால் அவதி..

by ஆசிரியர்

இராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை எம்.எம்.வார்டு உள்நோயாளிகள் பலருக்கு வலி நிவாரணி, புண் குணப்படுத்துவதற்கான ஊசி இன்றிரவு செலுத்தப்பட்டது. ஊசி செலுத்தப்பட்ட சில நிமிடங்களில் பலருக்கு திடீர் காய்ச்சல், வலிப்பு ஏற்பட்டதால் அச்சமடைந்தனர்.  மீண்டும் உரிய சிகிச்சை அளிக்கக் கோரி வார்டின் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இரவு பணி மருத்துவர் ஆலோசனை இன்றி பயிற்சி செவிலியர்கள் மூலம் ஊசி செலுத்தப்பட்டதால், பல்வேறு பக்க விளைவு நோய்கள் ஏற்படுவதாக அவதிக்குள்ளான நோயாளிகள் மற்றும் அவர்களின் உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகம் மீது குற்றம் சாட்டுகின்றனர். அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் உயர்தர சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்படுகின்றனர் என்ற வலுவான குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. இந்நிலையில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வரும் ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினருக்கு கவனக்குறைவான சிகிச்சை அளிப்பதால் அரசு மருத்துவமனைகள் மக்களின் நம்பிக்கையை இழந்து வருகின்றன என சமூக ஆர்வலர்கள் மத்தியில் சந்தேகம் எழும்பியுள்ளது. சாத்தூர் கர்ப்பிணிக்கு எச்ஐவி ரத்தம் செலுத்திய விவகாரத்திற்கு பிறகு, இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் தமிழக தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் டாக்டர் மணிகண்டன், மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆகியோர் அடிக்கடி திடீர் ஆய்வு செய்து தரமான சிகிச்சை அளிக்க மருத்துவர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். ஆனால், டாக்டர்கள் யாரும் அமைச்சர், ஆட்சியர் அறிவுறுத்தலை சம்பிரதாயத்திற்கு கூட ஏற்காமல், தாங்கள் நடத்தும் கிளினிக் வருமானத்தை மட்டும் இலக்காக கொண்டு செயல்படுகின்றனர். உறுதியான நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் முன் வர வேண்டும் என  பொதுக்களின் எதிர்பார்பாக உள்ளது.

இந்நிலையில் இராமநாதபுரம் அரசு மருத்துவமனை எம்எம் வார்டில்  மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் ஆய்வு செய்தார். செப்போடாக்ஸின் ஊசி மருந்து செலுத்தி எதிர் விளைவுகளால் அவதியடைந்த உள்நோயாளிகளுக்கு ஆறுதல் கூறினார். அவர் கூறியதாவது: ராமநாதபுரம் அரசு மருத்துவமனை உள்நோயாளிகள் 50 பேருக்கு இன்றி ரவு செலுத்திய நோய் எதிர்ப்பு மருந்து 30 பேருக்கு சளி, காய்ச்சல் தாக்கம் உள்ளிட்ட எதிர் விளைவு ஏற்படுத்தியுள்ளது. மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டு அவர்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர். நோயாளிகளுக்கு செலுத்தப்பட்ட இந்த ஊசி மருந்தால் பிரச்னையா?

எதிர் விளைவு ஏற்படுத்த என்ன காரணம்? மருந்துடன் கலந்த தண்ணீரில் தொற்று உள்ளதா? அவ்வாறிருக்க வாய்ப்பில்லை. இது தொடர்பாக விசாரணைக்கு பின் நடவடிக்கை எடுக்கப்படும். நிர்வாக ரீதியாக தவறிழைத்திருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும். ஊசி மருந்து செலுத்தியதால் எதிர் விளைவுகளால் பாதித்த நோயாளிகளின் ரத்த பரிசோதனை செய்து, அதன் முடிவை உரியவர்களுக்கு வெளிப்படையாக தெரிவிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சுகாதார நலப்பணி இணை இயக்குநர் உள்ளிட்ட அரசு தலைமை மருத்துவமனை மருத்துவக் குழுவினர் கண்காணிப்பை தொடர அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!