அறிவோம் – மாடி படிக்கு அடியில் மின் மீட்டர் வைக்கலாமா??

மின் இணைப்பு பெறுவதற்கு மின் வாரிய பிரிவு அலுவலகங்களில் இலவசமாக வழங்கப்படும் படிவத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். மின் வாரிய உரிமம் பெற்ற மின் பணி ஒப்பந்ததாரர்கள் மூலம், தரமான பொருட்களைக் கொண்டு மின் கம்பி அமைப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். நல்ல நில இணைப்பு (எர்த்) கொண்ட மும்முனை குழல் உறைகளில் (த்ரீ பின் சாக்கெட்) மட்டுமே, மின் கருவிகளைப் பொருத்தவேண்டும்.

மின் வாரிய மீட்டர், கருவிகளைத் தாங்களாகவே மாற்றவோ, சேதம் விளைவிக்கவோ கூடாது. கட்டிடம் கட்டும்போது, மின்சார விதிகளின் படி உயரழுத்த, தாழ்வழுத்த மின் கம்பிகள் இடையே போதிய இடைவெளி விடவேண்டும். மின் சாதனங்கள், மின் இணைப்பு வழித்தடங்கள் அருகில் பொருட்களை வைப்பது விபத்தை ஏற்படுத்தும். பழுதான மின் பொருத்தங்கள் (பிளக்), கருவிகளை கண்டிப்பாகப் பயன்படுத்தக் கூடாது.

மொத்த மின் இணைப்புச் சுமை ஒரே நேரத்தில் 4000 வாட் அளவுக்கு அதிகரிக்கும்போது, ஒற்றை ஃபேஸ் (Single Phase) இணைப்பிலிருந்து, 3 ஃபேஸ் (Three Phase) அமைப்புக்கு மாற்ற, மின் வாரிய அதிகாரிகளை தொடர்புகொள்ள வேண்டும். அனைத்து கட்டிடங்களிலும், தரை தளத்தில்தான் மின் அளவி (மீட்டர்), மின்கட்டை (ப்யூஸ்) போன்றவற்றைப் பொருத்தவேண்டும். மாடிப்படிக்கு அடியிலோ, கட்டிடத்துக்கு வெளியிலோ மீட்டர் பொருத்தக் கூடாது. மின் துறை அனுமதியின்றி மீட்டரை இடம் மாற்றக்கூடாது.

மின் இணைப்பு எந்த பயன்பாட்டுக்கு கொடுக்கப்பட்டதோ, அதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். வீட்டு மின் இணைப்பை கடை, அலுவலகம் போன்ற வணிக நோக்கத்துக்கு பயன்படுத்துவது தண்டனை அல்லது அபராதத்துக்குரிய குற்றம்.

மின் அட்டையை மீட்டரின் அருகிலேயே வைக்க வேண்டும். கணக்காளர் பயனீட்டு அளவை கணக்கெடுத்த பிறகு, தனியாக கட்டணப் பட்டியல் அனுப்பப்படமாட்டாது. விரைவில் இதற்கு எஸ்.எம்.எஸ். திட்டம் வரவுள்ளது. அட்டையில் அச்சடிக்கப்பட்டுள்ள தகவல்களை கட்டாயம் படிக்கவும். மின் அட்டை, பணம் செலுத்திய ரசீது ஆகியவற்றில் மின் இணைப்பு எண் சரியாக குறிக்கப்பட்டுள்ளதா என்பதை கவனிக்கவும்.

மின் மீட்டர் கட்டணம், கூடுதல் வைப்புக் கட்டணங்களை தாமதப்படுத்தினால் அபராதம் செலுத்த நேரிடும். மின் கட்டணம் செலுத்தத் தவறி, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டால் அபராதத்துடன் கட்டணம் செலுத்திய பின்பு, உடனடியாக மின் வாரிய பிரிவு அலுவலர் அல்லது கணக்காளரிடம் தெரிவித்து மறு இணைப்பு பெறலாம். மீட்டர் பழுது என்றால், புது மீட்டர் மாற்ற மின் வாரியத்தில் எழுத்து மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். இல்லை எனில் மீட்டர் மாற்றும் வரை பல மாதங்களுக்கான தொகையை அபராதமாக நுகர்வோர் செலுத்த வேண்டியிருக்கும்.

வாடகை அல்லது குத்தகை அடிப்படையில் வீட்டில் குடியிருப்பவர்களிடம் உரிமையாளர்கள் கூடுதலாக மின் கட்டணம் வசூலிப்பது குற்றம். மின் பயனீட்டு அளவு கணக்கெடுக்க வருவோரிடம் மின் கட்டண தொகையை கொடுக்கக் கூடாது. அவ்வாறு கொடுத்தால் அதற்கு மின் வாரியம் பொறுப்பாகாது.

நன்றி: தி இந்து

செய்தி தொகுப்பு:- அ.சா.அலாவுதீன்.
மூத்த நிருபர்கீழை நியூஸ்
( பூதக்கண்ணாடி மாத இதழ் )

Hala’s Touch of Traditional Taste

Hala’s Touch of Traditional Taste

Now you can ORDER online & @Amazon @Flipkart @Snapdeal