பரமக்குடியில் செப்.11 ல் இமானுவேல் சேகரன் குருபூஜை முன்னேற்பாடுகள்…

இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் 11.09.2018 அன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்  அனுசரித்தல் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் கொ.வீர ராகவராவ்  தலைமையில் அனைத்து துறை அரசு அலுவலர்கள் மற்றும் சமுதாய தலைவர்களுடன் நடத்தப்பட்ட சட்டம் ஒழுங்கு முன்னேற்பாடுகள் தொடாபான ஆலோசனை கூட்டத்தில் எடுத்த முடிவுகள்.

1. அஞ்சலி செலுத்த இராமநாதபுரம் மற்றும் இதர மாவட்டங்களில் இருந்து வருவோர் சொந்த வாகனங்களில் வர அனுமதிக்கப்படுகிறது.  வாடகை வாகனங்கள், திறந்த வெளி வாகனங்களில் வர அனுமதி இல்லை. இரு சக்கர வாகனங்கள், சரக்கு வாகனங்களில் வர அனுமதி இல்லை. சொந்த கார், வேன் மற்றும் இதர இலகு ரக வாகனங்களில் வருவோர் வாகன எண், வாகனத்தில் பயணிப் போர் விபரங்களை    08.09.2018 க்கு முன்னர் சம்பந்தப்பட்ட காவல் உட்கோட்ட அலுவலகங்களில் (டிஎஸ்பி அலுவலகம்) சமர்ப்பித்து வாகன அனுமதி சீட்டு பெற்றுக் கொள்ள வேண்டும். இதனை வாகன முன்புற கண்ணாடியில் ஒட்ட வேண்டும்.  வாகன அனுமதிச் சீட்டு இல்லா வாகனங்கள் பரமக்குடி செல்ல அனுமதிக்கப்படமாட்டாது.

இதர மாவட்டங்களில் இருந்து சொந்த வாகனங்களில் வரும் நபர்கள் அந்தந்த மாவட்டங்களில் முறையான அனுமதி பெற்று வர வேண்டும்.  சொந்த வாகனங்களில் செல்பவர்கள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே நினைவிடம் வந்து செல்ல வேண்டும். வாகனத்தின் மேற்கூரையில் பயணிக்கக்கூடாது. வாகனத்தில் ஆயுதங்கள் ஏதும் எடுத்துச் செல்லக் கூடாது.  வரும் வழித்தடங்களில் வெடி போடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். வாகனத்தில் ஒலி பெருக்கிகள் பொருத்திச் செல்லக் கூடாது. வாகனங்களில் சாதி மத உணர்வுகளை தூண்டும் வாசகம் அடங்கிய பேனர்களை கட்டி வரவோ, கோஷங்களை எழுப்பவோ கூடாது. பரமக்குடி நகருக்குள் சந்தை பேட்டை சந்திப்பு முதல் காட்டுப்பரமக்குடி வரை தேசிய நெடுஞ்சாலையில் எந்த ஒரு வாகனத்தையும் நிறுத்தி வைக்க அனுமதி கிடையாது.

வாகனங்களில் வரும் போது வரும் வழியில் போக்குவரத்திற்கு இடையூறு செய்யும் வகையில் வாகனங்களை நிறுத்தக் கூடாது. அஞ்சலி செலுத்துவதற்காக கிராமங்களில் இருந்து பேருந்துகளில் வருபவர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து காலை 11.00 மணிக்குள் புறப்பட வேண்டும். பேருந்துகளில் பிளக்ஸ் போர்டு, பேனர், கட்சி கொடி, ஒலிபெருக்கி ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது.  ஜோதி தொடர்பான உபகரணங்களை பேருந்துகளில் எடுத்து வரக்கூடாது. பேருந்துகளில் படி, மேற்கூரையில் பயணம் செய்யக்கூடாது. பேருந்துகளில் டிக்கெட் பெற்று வர வேண்டும். கூடுதல் பேருந்துகள் 11.09.2018 ஒரு நாள் மட்டும் இயக்கப்படும். தலைவர்கள் வரும்போது 3 சொந்த வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படும். தலைவர்களுக்கு ஒதுக்கிய குறித்த நேரத்தில் அஞ்சலி செலுத்தி விட்டு செல்ல வேண்டும்.

நடை பயணமாக அஞ்சலி செலுத்த வரக்கூடாது.  பரமக்குடி நகருக்குள் அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் நடை பயணம் செல்லலாம்.
ஜோதி முளைப்பாரி, பால்குடம் ஆகியவற்றிற்கு அனுமதி இல்லை.  நினைவிடத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவிற்குள் மட்டுமே எடுத்து வர அனுமதிக்கப்படும். சொந்த ஊரில்  செப்டம்பர் 11-ஆம் தேதிக்கு முந்தைய நானோ, பிந்தைய நாளோ எவ்வித நிகழ்ச்சிகள் கொண்டாடவும் ஒலிபெருக்கி அமைப்பதற்கும் அனுமதி கிடையாது.   செப்டம்பர் 11ம் தேதி மட்டும்  அவரவர் சொந்த ஊரில் ஒலிபெருக்கி இன்றி புகைப்படம் வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தலாம்.

பரமக்குடி நினைவிடத்தில் செப்டம்பர் 11ம் தேதி மட்டும்    அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படும். அலங்கார ஊர்தி அணிவகுப்பு மாட்டு வண்டியில் வருதல் சாதித் தலைவர்கள் வேடமணிந்து வருதல் ஆகியவற்றுக்கு அனுமதி இல்லை. நினைவிடத்தில் தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பாக மட்டுமே கூட்டத்தை முறைப்படுத்த ஒரு ஒலிபெருக்கி மட்டும்  பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்படும்.  நினைவிடத்திற்குள் தலைவர்கள் ஒலிபெருக்கியில் பேசுவதற்கு அனுமதி இல்லை.

தேவேந்திர பண்பாட்டு கழகம் சார்பில் குறைந்த பட்சம் 100 தன்னார்வத் தொண்டர்களை ஏற்பாடு செய்து நினைவிடத்தில் கூடியிருக்கும் கூட்டத்தினரை அவ்வப்போது வெளியேற்றி கூட்டத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க செய்ய வேண்டும். பிளக்ஸ் போர்டு, சுவரொட்டிகள் ஆகியவை பரமக்குடி நகருக்குள் மட்டும் 3 நாட்களுக்கு  (9, 10, 11 தேதிகளில் மட்டும் வைத்துக்கொள்ள அனுமதிக்கப்படும்.  மேலும் பிளக்ஸ் போர்டு வைப்பதற்கு முன் பரமக்குடி சார் ஆட்சியரிடம் மனு அளித்து முன் அனுமதி பெற வேண்டும்.  பரமக்குடி சார் ஆட்சியர் அலுவகத்தில் இப்பணிக்கென நகராட்சி காவல், வருவாய் துறை அலுவலர்கள் நியமிக்கப்படுவர். பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி கோரி வரும் விண்ணப்பங்கள் முறையாக பரிசீலிக்கப்பட்டு அரசு விதிகள் மற்றும் தகுதியின் அடிப்படையில் விண்ணப்பம் அளித்த 24 மணி நேரத்திற்குள் உத்தரவு வழங்கப்படும்.  பிளக்ஸ் போர்டு வைக்க அனுமதி கோருவோர் செப் ., 5, 6, 7 தேதிகளுக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.  வழங்கப்படும் அனுமதி எண் பிளக்ஸ் போர்டு மற்றும் சுவரொட்டியில் இடம் பெற்றிருக்க வேண்டும்.

பரமக்குடி நினைவிடத்தில் 11.09.2018 ம் தேதி மாலை 04.00 மணிக்குள் அனைத்து நிகழ்ச்சிகளையும் முடித்துக் கொள்ள வேண்டும்.
அஞ்சலி செலுத்த வருபவர்களில் பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு மட்டும் நேரம் ஒதுக்கீடு செய்யப்படும்.  இதற்கு ஏதுவாக சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்    08.09.2018 ம் தேதிக்கு முன் விண்ணப்பிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.

செய்தி:- முருகன், கீழைநியூஸ் (பூதக்கண்ணாடி மாத இதழ்), இராமநாதபுரம்.

Keeggi – Trusted Platform

Keeggi – Trusted Platform

To Download Keelainews Android Application – Click on the Image