Home செய்திகள் கடத்தப்பட்ட தொழிலதிபரை 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட சென்னை காவல்துறை…

கடத்தப்பட்ட தொழிலதிபரை 12 மணி நேரத்தில் பத்திரமாக மீட்ட சென்னை காவல்துறை…

by ஆசிரியர்

சென்னை, செங்குன்றம் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவர், லாரிகளை வைத்து தொழில் செய்து வருகிறார். கடந்த 02.07.2018 அன்று இரவு காவலர் சீருடையில் உள்ள சில நபர்கள் கணேசன் வீட்டிற்கு வந்து விசாரணை என்ற பெயரில் கணேசனை காரில் கடத்தி சென்றுவிட்டனர். உறவினர்கள் அக்கம் பக்கத்தில் உள்ள காவல் நிலையங்களில் தேடிய பிறகே கணேசன் கடத்தப்பட்டுள்ளார் என்பது தெரியவந்தது. அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் கடந்த 03.07.2018 அன்று, கணேசனின் செல்பேசியில் இருந்து, அவரது உறவினரை தொடர்பு கொண்டு, ரூபாய் 25 இலட்சம் வேண்டுமென்றும், அவ்வாறு கொடுத்தால் தான் கணேசனை விடுதலை செய்ய முடியும் என்று மிரட்டி உள்ளனர். உடனே கணேசனின் உறவினர், இதுகுறித்து செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

இந்த தகவல் உடனடியாக காவல்துறை மேல் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து சென்னை காவல்துறை கூடுதல் ஆணையாளர் திரு.ஜெயராம், IPS., அவர்கள் உத்தரவின்படி, கணேசனை மீட்கவும், குற்றவாளிகளை கைது செய்யவும் செயல் திட்டம் தீட்டப்பட்டு மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு சி.சி.டி.வி கேமராவின் பதிவுகள், செல்பேசி கோபுரங்களின் பதிவுகள், நேரடி சாட்சிகள் மற்றும் குற்றவாளிகளுக்கும், கணேசன் உறவினர்களுக்கும் நடந்த உரையாடல்களை கண்காணித்தும், வண்டலூர், கூடுவாஞ்சேரி, செங்குன்றம் ஆகிய இடங்களில் சிறப்பு வாகனத் தணிக்கை செய்தும், தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்த தேடுதல் வேட்டையில் வடகரை சக்தி மற்றும் அவனது கூட்டாளிகள், கணேசன் உறவினர்களிடமிருந்து பணத்தை பெற்றபோது கைது செய்யப்பட்டார்கள். கணேசன் நல்ல முறையில் மீட்கப்பட்டார். குற்றவாளிகளிடமிருந்து இரண்டு அரிவாள்கள், இரண்டு வாகனங்கள், நகத்தை பிடுங்கும் கருவி, ஒரு காவலர் சீருடை ஆகியவை கைப்பற்றப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். இந்த மீட்பு நடவடிக்கையை, 12 மணி நேரத்திற்குள் விரைந்து முடித்து, குற்றவாளிகளை கைது செய்தமைக்காக தனிப்படையினர் காவல் உயர் அதிகாரிகளால் பாராட்டப்பட்டனர்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!