துபாய் ஈமான் கல்சுரல் சென்டர் செயல்பாட்டின் வளர்ச்சி முன்னேற்றத்திற்கான ஆலோசனைக் கூட்டம்..

ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு இயங்கி வரும் ஈமான் அமைப்பு பல்வேறான பொதுப்பணிகள் செய்து வருகின்றனர். ஆனால் அவ்வமைப்பின் முழுமையான செயல்பாடுகளும், அதன் செயல் திட்டங்களும், அதனால் மக்களுக்கு ஏற்படக்கூடிய பலன்களும் மக்களுக்கு முழுமையான வகையில் சென்றடையாமல் இருப்பதே நடைமுறை உண்மை. பொதுவாகவே ஈமான் அமைப்பு என்பது மற்ற அமைப்புகள் போல் குறிப்பிட்ட நபர்களால் இரத்த தானம் முகாம், சில கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடத்துவதற்காகவே உருவாக்கப்பட்டது என்ற எண்ணமே அனேக பேரின் மனதில் உள்ளது.

ஆனால் ஈமான் அமைப்பு அந்த எல்லையையும் தாண்டி பல நற்பணிகளை தமிழ் சமுதாய மக்களுக்கு செய்து வருகிறது மற்றும் செய்யவும் தயாராக உள்ளது என்பதே நிதர்சன உண்மையாகும். அதுவும் முக்கியமாக சொந்த ஊரில் இருந்து வேலை தேடி வருபவர்களுக்கான தங்கும் இடம், உணவு வசதிகள் மற்றும் வேலை தேடி கொள்வதற்கான வழிகாட்டி, அதே போல் அமீரகத்தில் வேலை பார்க்கும் இடத்தில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டாலோ அல்லது உயிர் சேதம் அடைந்தாலோ பாதிக்கப்பட்டவர்களுக்கான அனைத்து அரசாங்க உதவிகளைநயும் எந்த கட்டணமும் இல்லாமல் சேவை நோக்கத்துடன் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவ்வமைப்பின் செயல்பாடுகளை மக்களின் மத்தியில் கொண்டு சேர்க்கவும், மேலும் தேவையுடையவர்கள் பயனடைவதற்கான எளிய வழிமுறைகள் பற்றியும் ஆலோசனை செய்யும் நோக்கில் ஈமான் அமைப்பின் பொதுச் செயலாளர் ஹமீது யாசின் தலைமையில் ஆர்வமுள்ளவர்களுடன் ஆலோசனைக் கூட்டம் துபாயில் 27/11/2017 அன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அழகன்குளம் நியாஸ். அஜ்மான் சஃபீக், கீழக்கரை ஹசன், கீழக்கரை கிளாசிஃபைட் SKV சேக், கீழைநியூஸ் அப்துர்ரஹ்மான், ஜெயா டிவி ரஃபீக் சுலைமான், களஞ்சியம் ஜமாலுதீன், துபாய் மண்டல விடுதலைச் சிறுத்தையின் இசுலாமிய ஜனநாயக பேரைவையின் தலைவர் அசார் மற்றும் இன்னும் சில ஆர்வமுள்ள சகோதரர்களும் கலந்து கொண்டு கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர். இக்கூட்டத்தில் ஈமான் அமைப்பின் ஹமீது யாசீன் வந்திருந்தவர்களிடம் அவ்வமைப்பின் செயல்பாடுகளை தெளிவாக விளக்கினார்.

அதே சமயம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அனுமதி மற்றும் பதிவு செய்யப்படாத அமைப்புகள் எந்த விதமான செயல்பாடுகளையும் செய்யக்கூடாது என்று தடை விதித்துள்ள நிலையில் ஈமான் அமைப்பு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தால் முழுமையான அங்கீகாரம் பெற்ற அமைப்பு என்பது குறிப்பிடத்தக்கதாகும்.