இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் வணிக நோக்கத்தில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிமம் பெற வேண்டும்…

Office building

இராமநாதபுரம் மாவட்டத்தில் பொதுமக்கள் நலன் மற்றும் வணிக நோக்கத்தில் செயல்பாட்டில் உள்ள அனைத்து பொது கட்டிடங்களுக்கும், சம்மந்தப்பட்ட உரிமைதாரர்கள் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் கீழ் முறையான ஆவணங்களை சமர்ப்பித்து உரிமம் பெற்றிருத்தல் வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மாவட்ட ஆட்சித் தலைவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் கீழ் அனைத்து அரசு மற்றும் தனியார் கல்வி நிறுவனங்கள், மாணவ மாணவியர்கள் தங்கும் விடுதிகள், நூலகங்கள், மருத்துவமனைகள், கிளினிக், நர்ஸிங் ஹோம், தனியார் தங்கும் விடுதிகள் மற்றும் வணிக நோக்கத்திற்காக பயன்படுத்தப்படும் பொது கட்டிடங்கள் அனைத்தும் தமிழ்நாடு பொதுக் கட்டிடங்கள் உரிமைச் சட்டம் 1965-இன் முறையாக உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

பொதுகட்டிட உரிமையாளர்கள் கட்டிடங்களுக்கு பொறுப்பாளர்கள் பொதுக் கட்டிட உரிமம் வழங்கிடக் கோரி சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களிடம் கட்டிட உறுதித் தன்மை குறித்தான பதிவு பெற்ற பொறியாளர் சான்று, பாதுகாப்பு அம்சங்கள், தீயணைப்புத்துறை தடையின்மைச் சான்று, சுகாதாரத்துறைச் சான்று ஆகியவற்றை இணைத்து உரிய கட்டணம் செலுத்தி விண்ணப்பித்திட வேண்டும். வட்டாட்சியர் கள ஆய்வு செய்து ஆவணங்களை பரிசீலித்து உரிமம் வழங்குவார்.

மேலும் உரிமம் பெற்ற உரிமைதாரர்கள், உரிய காலக் கெடுவிற்குள் தவறாது தங்களது கட்டிட உரிமத்தினை புதுப்பித்திட வேண்டும். உரிமம் பெறாமலும், புதுப்பிக்கப்படாமலும் பொதுக் கட்டிடங்கள் செயல்பட்டால், சம்மந்தப்பட்ட உரிமைதாரர்கள் மீது உரிய குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர்.ச.நடராஜன் தெரிவித்துள்ளார்.

To Download Keelainews Android Application – Click on the Image

July Issue…

July Issue…