தண்ணீருக்காக தத்தளிக்கும் மெட்டுக்கல்காடு மலை கிராம மக்கள்… ஊரை விட்டு வெளியேறும் அவலம். ..

தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த கலப்பம்பாடி பஞ்சாயத்துக்குட்பட்ட மெட்டுக்கல்காடு கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த இரண்டு வருடகாலமாக குடிக்க தண்ணீர் இல்லாமல் இம்மக்கள் தவித்து வருகின்றனர். இவர்கள் தண்ணீர்க்காக சுமார் 4கிலோமீட்டர் தொலைவில் உள்ள செஞ்சிமலைகாடு பிரிவு ரோட்டில் இருந்து தண்ணீர் கொண்டு வருகின்றனர். அந்த தண்ணீரும் கலங்கலாக வருவதால் குடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

மேலும் அப்பகுதி மக்கள்க கூறுகையில், “மாவட்ட ஆட்சியரிடமும் வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பல்வேறு முறை மனு அளித்தும் எந்தவித பலனும் இல்லை. இதனால் எங்கள் கிராமத்தில் உள்ள பத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வெளி ஊர்களில் குடி சென்று விட்டனர். எங்கள் பகுதியில் உள்ள ஆடு, மாடுகளுக்கு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் காட்ட முடிகிறது. இதனால் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகிறோம். இதே நிலை நீடித்தால் நாங்களும் வெளி ஊர்களுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படும். எனவே மாவட்ட நிர்வாகம் எங்கள் மலை கிராம மக்களின் நலனை கருதி அருகில் உள்ள ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் வழங்க வேண்டும்” என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

செய்தி: ஶ்ரீதரன்

#Paid Promotion