சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் குடும்பத்துக்கு டி.டி.வி. தினகரன் ஆறுதல்..

கோவில்பட்டி அருகே சவலாப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். சுப்பிரமணியன் குடும்பத்துக்கு அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் ஆறுதல் கூறினார்.

காஷ்மீரில் கடந்த மாதம் 14-ம் தேதி நடந்த தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் கோவில்பட்டி அருகே சவலாப்பேரியை சேர்ந்த க.சுப்பிரமணியன் மரணமடைந்தார். அவரது வீட்டுக்கு நேற்று அமமுக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் நேரில் வந்து, சுப்பிரமணியன் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் சுப்பிரமணியனின் மனைவி கிருஷ்ணவேணி, தந்தை கணபதி உள்ளிட்டோருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் ரூ.3 லட்சம் நிதி வழங்கினார். பின்னர் சுப்பிரமணியன் அடக்கம் செய்யப்பட்ட இடத்துக்கு சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அவருடன் அமமுக தென் மண்டல பொறுப்பாளர் எஸ்.வி.எஸ்.பி.மாணிக்கராஜா, வடக்கு மாவட்ட செயலாளர் ஆர்.சுந்தர்ராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் கூறும்போது, தீவிரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் அனைத்தும் ஒன்று திரண்டு, தீவிரவாதத்தை கூண்டோடு அழிக்க வேண்டும் என்பது தான் அனைத்து மக்களின் வேண்டுகோள். இதை அனைத்து நாடுகளின் அரசுகளும் தீவிரவாதத்தை அனுமதிக்காமல், குறிப்பாக பாகிஸ்தான் தீவிரவாதத்துக்கு புகழிடம் கொடுக்கக்கூடாது. இதுபோன்ற வீரர்கள் நாட்டின் பாதுகாப்புக்காக ஈடுபட்டிருந்தபோது, தீவிரவாதி கோழைத்தனமாக தாக்கியதில் 44 பேர் உயிரிழந்துள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது, என்றார் அவர்.