கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோயிலில் தைப்பூசத் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர். கழுகுமலை கழுகாசலமூர்த்தி குடவரைக் கோயிலில் தைப்பூசத் திருவிழா கடந்த 12-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலை நேரங்களில் அலங்கரிக்கப்பட்ட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி வீதியுலா நடந்தது.
தைப்பூச விழாவான இன்று அதிகாலை 5 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு திருவனந்தல் பூஜை, விளா பூஜை, காலசந்தி பூஜைகள் நடந்தன. காலை 6 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானை சட்ட ரதத்திலும், விநாயகப் பெருமாள் கோ ரதத்திலும் எழுந்தருளுதலைத் தொடர்ந்து 9.30 மணிக்கு மேல் அரோகரா கோஷங்களுடன் பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.
தெற்கு ரதவீதியில் இருந்து இழுக்கப்பட்டு எட்டாம் பலி பீடம், கீழ பஜார் வழியாக நண்பகல் 12 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. விழாவில், கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், திமுக மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளரும், இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி செயலாளருமான சுப்பிரமணியன், ரஜினி மக்கள் மன்ற மாவட்ட வர்த்தக அணி செயலாளர் ஜெயக்கொடி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மதியம் கோவில்பட்டி ஜீவ அனுகிரக பொதுநல அறக்கட்டளை இயக்க தலைவர் ராஜேந்திரன் தலைமையில் அன்னதானம் வழங்கப்பட்டது. கோவில்பட்டி அண்ணா பஸ்நிலைய வியாபாரிகள் சங்க தலைவர் ராஜகோபால் அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இரவு 9 மணிக்கு மேல் கழுகாசலமூர்த்தி, வள்ளி, தெய்வானையுடன் பூஞ்சப்பரத்தில் வீதியுலா வருதல் நிகழ்ச்சி நடந்தது.
ஏற்பாடுகளை கோயில் நிர்வாக அதிகாரி கார்த்தீஸ்வரன், தலைமை எழுத்தர் பரமசிவம், உள்துறை எழுத்தர் செண்பகராஜ் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயிலில் உள்ள முருகன் சன்னதியில் சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. கோவில்பட்டி சொர்ணமலை கதிர்வேல் முருகன் கோயிலில் உள்ள மூலவருக்கு 18 விதமான அபிஷேகங்கள் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. பத்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. வீரவாஞ்சி நகர் புற்று கோவிலான சங்கரேஸ்வரி அம்மன் கோவிலில் உள்ள வள்ளி தேவசேனா சமேத கல்யாண சுப்பிரமணியசாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
செய்தி:- அஹமது, தூத்துக்குடி
You must be logged in to post a comment.