Home செய்திகள்உலக செய்திகள் சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்கு தங்கம் வழங்கும் விழா..

by Abubakker Sithik

தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் கலையரங்கத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் திருமண நிதி உதவி திட்டம் சார்பில் தாலிக்குத் தங்கம் விழாவில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.1.53 கோடி மதிப்பிலான திருமண நிதி உதவித் தொகைக்கான காசோலையினையும் வழங்கினார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் தாலிக்குத் தங்கம் வழங்கும் விழா தென்காசி மாவட்டம் குற்றாலம் கலைவாணர் அரங்கத்தில் 02-02-2024 அன்று வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன், மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கிஷோர் தலைமையில் நடைபெற்றது. விழாவில் தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ். பழனிநாடார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ. ராஜா, வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் மரு. சதன் திருமலைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் பேசியதாவது, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆணைக்கிணங்க, இன்றைய தினம் தாலிக்குத் தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான சமயங்களில் திருமணத்தின் போது ஒரு பெண் தங்கத்தால் செய்யப்பட்ட திருமாங்கல்யம் அணிவது ஒரு வழக்கமான கலாச்சாரத் தேவையாகும். மேலும் பெற்றோர்கள் அவர்களின் பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சார பின்னனியின்படி, திருமண விழாவைக் கொண்டாடுகிறார்கள். இருப்பினும், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவைச் சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளின் திருமணச் செலவுகளை சமாளிக்க முடியாமல் தவிக்கின்றனர். அத்தகைய பெற்றோருக்கு உதவவும், அவர்களின் மகள்களை சரியான வயதுவரை படிக்க ஊக்குவிக்கவும், அரசால் திருமண உதவித்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆதரவற்ற பெண்கள், மறுமணம் செய்யும் கைம்பெண்கள், கலப்புத்திருமணம் செய்து கொள்ளும் தம்பதிகள் மற்றும் கைம்பெண்களின் மகள் ஆகியோருக்கு உதவும் வகையில் திருமண உதவித்திட்டங்கள் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவைகளின் மகள்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25,000 நிதியுதவியும். 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ. 50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25,000 நிதியுதவியும், 8 கிராம் தங்க நாணயமும், பட்டப்படிப்பு எனில் ரூ.50,000 மற்றும் 8 கிராம் தங்க நாணயம் வழங்கப்படுகிறது. டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண உதவித்திட்டத்தின் கீழ் மணமகள் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு பள்ளிப்படிப்பு எனில் ரூ.25,000 நிதியுதவியில், ரூ.15,000 மின்னணு மூலமாகவும் ரூ.10,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் 22 காரட் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது. பட்டம் / பட்டயப்படிப்பு பெற்றவர்களுக்கு ரூ.30,000 மின்னணு மூலமாகவும், ரூ.20,000 தேசிய சேமிப்புச் சான்றிதழாகவும், 8 கிராம் தங்க நாணயத்துடன் வழங்கப்படுகிறது.

தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பாக ஈ.வெ.ரா.மணியம்மை விதவை மகள் திட்டத்தில் 316 பயனாளிகளுக்கும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண உதவித்திட்டத்தில் 48 பயனாளிகளுக்கும், அன்னை தெரசா ஆதரவற்ற பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தில் 30 பயனாளிகளுக்கும் ஆக மொத்தம் 394 ஏழை பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் 3152 கிராம் தங்க நாணயம் (ரூ.1,93,94,256) மதிப்பீட்டில் மற்றும் ரூ.1,53,25,000 நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பெண்களுக்கென பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறது. பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்தி அனைத்து திட்டங்களையும் பயன்படுத்தி பொருளாதாரத்தில் முன்னேற்றம் பெற வேண்டுமென வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்ததாவது, பெண் கல்வியை ஊக்குவித்தல், குழந்தை திருமணத்தை தடுத்தல், சமூக சீர்திருத்த திருமணங்களை ஊக்குவித்தல் ஆகிய நோக்கங்களுக்காக திருமண உதவி திட்டங்கள் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்பட்டன. ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு திருமண உதவித்திட்டம், அன்னை தெரசா திருமண உதவி திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்புத் திருமண உதவித்திட்டம் போன்ற திருமண உதவித் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பள்ளிப்படிப்பு முடித்த பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25.000 நிதிஉதவியும். பட்டப்படிப்பு முடித்திருந்தால் 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 நிதி உதவியும் வழங்கப்படுகிறது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவுப்படி, நமது தென்காசி மாவட்டத்தில் இன்று 394 பயனாளிகளுக்கு 3152 கிராம் தாலிக்கு தங்கமும், ரூ.1,53,25,000 திருமண நிதி உதவியும் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. சமூக நலத்துறை மூலம் செயல்படுத்தப்படும் புதுமைப் பெண் போன்ற திட்டங்களின் மூலம் பெண்களின் உயர் கல்விக்கு வழிவகுப்பதுடன், பெண்களின் சமூக பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கிறது. எனவே, பொதுமக்கள் அனைவரும் தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் நலத் திட்டங்களின் மூலம் பயன்பெற்று பெண்களின் சமூக பொருளாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே. கமல் கிஷோர் தெரிவித்தார்.

தென்காசி மாவட்டத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் ஏழைப்பெண்களுக்கு தாலிக்குத் தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ் கடையத்தில் 42 பயனாளிகளுக்கும், செங்கோட்டையில் 36 பயனாளிகளுக்கும், குருவிகுளத்தில் 12 பயனாளிகளுக்கும், தென்காசியில் 75 பயனாளிகளுக்கும், சங்கரன்கோவிலில் 23 பயனாளிகளுக்கும், மேலநீலதநல்லூரில் 12 பயனாளிகளுக்கும், கடையநல்லூரில் 37 பயனாளிகளுக்கும், ஆலங்குளத்தில் 53 பயனாளிகளுக்கும், கீழப்பாவூரில் 54 பயனாளிகளுக்கும், வாசுதேவநல்லூரில் 50 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம் என மொத்தம் 394 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, கலை பண்பாட்டுத்துறையின் மூலம் கரகாட்டம், கிராமிய கலை நிகழ்ச்சி, ஒயிலாட்டம், தப்பாட்டம், பரதநாட்டியம் போன்ற பல்வேறு கலைநிழ்ச்சிகள் நடைபெற்றது.

இவ்விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் கு. பத்மாவதி, மாவட்ட சமூகநல அலுவலர் செல்வி. மதிவதனா, மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் தமிழ்ச்செல்வி போஸ், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத் தலைவர் உதயகிருஷ்ணன், தென்காசி நகர்மன்ற தலைவர் ஆர்.சாதிர், தென்காசி ஒன்றிய குழுத்தலைவர் சேக் அப்துல்லா, ஒன்றியக்குழு துணைத் தலைவர் எம். கனகராஜ் முத்துப்பாண்டியன், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் திவ்யா மணிகண்டன், ஒன் ஸ்டாப் சென்டர் மைய நிர்வாகி செல்வி. ஜெயராணி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் (செய்தி) ரா.ராமசுப்பிரமணியன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்-அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com