Home கட்டுரைகள் பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும்?

by ஆசிரியர்

பன்றிக் காய்ச்சல் அறிகுறிகள் தெரிந்தால் என்ன செய்ய வேண்டும். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பருவநிலை மாற்றங்களால் பலரும் காய்ச்சல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், அரசு மருத்துவமனைகள், சுகாதார நிலையங்களில் கூட்டம் அலைமோதுகிறது. மக்கள் பதற்றத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள். குறிப்பாக, பன்றிக் காய்ச்சல் பற்றிய பயம் அதிகமாகவே உள்ளது. சாதாரணக் காய்ச்சல் வந்தாலே பன்றிக் காய்ச்சலாக இருக்குமோ என்ற அச்சம் மக்களை வாட்டுகிறது.

காய்ச்ச்ல்

பன்றிக் காய்ச்சலின் அறிகுறிகள் என்னென்ன… பரிசோதனைகள் மூலம் கண்டறிவது எப்படி… காய்ச்சல் பாதிப்பிலிருந்து தப்பிப்பது எப்படி… அதற்கான சிகிச்சைகள் என்னென்ன?’ என்று பொதுநல மருத்துவர் சிவராம கண்ணனிடம் கேட்டோம்.

பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும்போதும் தும்மும்போதும் வெளிப்படும் எச்சில், சளி மூலம் இந்த வைரஸ் அடுத்தவர்களுக்குப் பரவும். இந்தக் கிருமிகள் படிந்துள்ள கதவு, கைப்பிடி, நாற்காலி, மேசை போன்ற பொருள்களை மற்றவர் தொடுவதால், அவர்களது கைகளில் கிருமிகள் ஒட்டிக்கொள்ளும். அதன்பிறகு, கைகளைக் கழுவாமல் கண்கள், மூக்கு, வாயைத் தொடும்போது கிருமிகள் தொற்றிக்கொண்டு பாதிப்பை ஏற்படுத்தும்.

பன்றிக்காய்ச்சல்

இந்தக் காய்ச்சல் உடலில் பரவியதும் சளி, காய்ச்சல், இருமல், தலைவலி, தொண்டைவலி போன்றவற்றை ஏற்படுத்தும். இதையடுத்து உடல் சோர்ந்து காணப்படும். சிலருக்கு வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். இவையே பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகள். பொதுவாக, இது குளிர் மற்றும் மழைக்காலங்களில் மேகமூட்டம் நிறைந்து, வெயில் இல்லாத காலங்களில் மட்டுமே வேகமாகப் பரவும். ஒருவர் இந்தக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பதை ஆர்.ஐ.டி.டி என்ற பரிசோதனை மூலம் அறிந்துகொள்ளலாம்!சிவராம கண்ணன்

இன்ஃப்ளூயென்சா வைரஸ்களில் `ஹெச் ஒன் என் ஒன்’ (H1N1), `ஹெச் த்ரீ என் டூ’ (H3N2) எனப் பல வகைகள் உண்டு. எனவே, காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர் எந்த வகையான வைரஸால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ற தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்வது அவசியம். காய்ச்சல் அறிகுறிகளுக்கு ஏற்றவாறு, பாதிக்கப்பட்டவருக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும். பன்றிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டோர் `டாமிஃப்ளு’ (Tamiflu) மாத்திரையை தினமும் இரண்டுவேளை வீதம் ஐந்து நாள்களுக்கு மருத்துவரின் ஆலோசனை பெற்று, உட்கொள்ள வேண்டும்.

இந்தக் காய்ச்சலால் ஒருவர் பாதிக்கப்பட்டால், அவர் முகக் கவசம் அணிய வேண்டியது அவசியம். இருமல், தும்மல் ஏற்படும்போது கைக்குட்டையால் மூடிக்கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்ச்சல் பரவுவது தடுக்கப்படும். காய்ச்சல் உள்ளவர்கள், பொது இடங்களுக்குத் தேவையின்றி செல்வதைத் தவிர்க்க வேண்டும்.

பன்றிக்காய்ச்சல்

பன்றிக் காய்ச்சல் பாதிப்பில்லாதவர்கள், நோய் பாதித்தவர்களிடமிருந்து குறைந்தது ஒரு மீட்டர் தூரம் தள்ளியே இருக்க வேண்டும். வெளியிடங்களுக்குச் சென்று வீடு திரும்பியதும் சோப்புப் போட்டு தண்ணீரால் கைகளை நன்றாகக் கழுவவேண்டும். கையில், எப்போதும் ஒரு சானிடைசர் வைத்துக்கொள்வது நல்லது. காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டால் நிலவேம்புக் குடிநீர் குடிக்கத் தொடங்கி விடுங்கள். இந்தக் காய்ச்சலின் பாதிப்பு ஒரு வாரம் வரைதான் இருக்கும் என்பதால், முறையான சிகிச்சை எடுத்துக்கொண்டால் விரைவில் குணமடையலாம்!”

செய்தி தொகுப்பு:-அ.சா.அலாவுதீன்.மூத்த நிருபர் கீழை நியூஸ்( பூதக்கண்ணாடி மாத இதழ் )

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com