Home செய்திகள் “தாகத்துல செத்தாலும் சாவோம், ஸ்டெர்லைட் தண்ணிய குடிக்க மாட்டோம்”-கிராம மக்கள் சூளுரை..

“தாகத்துல செத்தாலும் சாவோம், ஸ்டெர்லைட் தண்ணிய குடிக்க மாட்டோம்”-கிராம மக்கள் சூளுரை..

by ஆசிரியர்

ஸ்டெர்லைட் ஆலையை சுற்றியுள்ள அ.குமரெட்டியாபுரம், பண்டாரம்பட்டி, மீளவிட்டான், மடத்தூர் மற்றும் பிற கிராமங்களில் மாவட்ட நிர்வாகத்தினால் குடிநீர் சேவை திட்டமிட்டே நிறுத்தப்பட்டுள்ளதாகவும், மேலும் ஸ்டெர்லைட் நிர்வாகம் ஸ்டெர்லைட்டை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் குடிநீருக்கு பொதுமக்கள் திண்டாடும் நிலையையும் உருவாக்கியுள்ளதாக இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் குடிநீர் விநியோகம் செய்ய இந்த கிராமங்களுக்கு வாகனங்களில் குடிநீர் கொண்டு வரப்படுகின்ற நிலையில் குடிநீர் இல்லாமல் திண்டாடும் மக்கள் ஸ்டெர்லைட் நிர்வாகத்தின் குடிநீரை பயன்படுத்துவார்கள் என்ற நரித்தனத்தை அரங்கேற்றியுள்ளது ஸ்டெர்லைட் நிர்வாகம் எனவும், ஆனால் அனைத்து கிராம மக்களும் “நாங்கள் தண்ணீர் இல்லாமல் செத்தாலும் பரவாயில்லை, ஸ்டெர்லைட் நிர்வாகத்தால் வழங்கப்படும் தண்ணீரை வாங்க மாட்டோம்” என்றும் ஊருக்குள் ஸ்டெர்லைட் நிறுவனத்தால் அனுப்பப்பட்ட வாகனங்களை விரட்டியடித்துள்ளனர் இப்பகுதி மக்கள்.

மேலும் மீளவிட்டான் கிராமத்தில் குடிநீர் கேட்டு போராட்டம் நடத்தியுள்ளனர். இவ்வாறு அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருந்து ஸ்டெர்லைட் குடிநீர் வாகனத்தை விரட்டியுள்ளனர்.

மக்களின் மனநிலையை சோதிக்க முதலில் குடிநீர் வாகனங்களை அனுப்புவதும் பின்னர் பிரச்சினை வருகிற சமயத்தில் காவல்துறை அந்த வாகனத்தை பாதுகாப்போடு எடுத்துச் செல்வதும் வாடிக்கையாக உள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் அரசின் அனுமதியோ, நீதிமன்ற உத்திரவோ எதுவும் இல்லாமல் இது போல மக்களை பிளவு படுத்தி சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் ஸ்டெர்லைட்டின் சட்டவிரோத நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் வேடிக்கை பார்க்கலாம். மக்கள் ஒருபோதும் வேடிக்கை பார்க்க மாட்டோம் என சூளுரைத்தனர் பொதுமக்கள்.

மேலும் மக்கள் மனதில் சிறிய சந்தேகம் எழுகின்றது.அது என்னவென்றால்… தூத்துக்குடி முழுவதும் தண்ணீர் பற்றாக்குறை நிலவும் போது ஸ்டெர்லைட் குடிநீர் வாகனங்களுக்கு மட்டும் தண்ணீர் கிடைப்பது எப்படி??

மாவட்ட நிர்வாகம் பொதுமக்களுக்கு குடி தண்ணீர் தொடர்ந்து கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக அகற்ற வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!