Home செய்திகள் தலைமுறை தலைமுறையாய்த்தடுக்கப்பட்ட அழகிய காட்சிகள்.!

தலைமுறை தலைமுறையாய்த்தடுக்கப்பட்ட அழகிய காட்சிகள்.!

by Askar

இது பூமியைச் சுற்றி வருகிற நிலா, சூரியனுக்கும் பூமிக்கும் நேர்கோட்டில் குறுக்கே வந்து கடக்கிறபோது சூரியனைச் சிறிது நேரம் மறைக்கிறது என்கிற சாதாரணமான இயற்கை நிகழ்வு. இதைத் தமிழில் “ஞாயிறு மறைப்பு” அல்லது “சூரிய மறைப்பு” சொல்லிப் பாருங்கள், நமக்கு இந்த நிகழ்வு புரியும், மனதில் எந்த அச்சமும் ஏற்படாது. சூரிய கிரகணம் என்று சொல்கிறபோதுதான், பல காலமாக ஏற்றப்பட்ட என்னவோ ஏதோவென்ற எண்ணத்துடன் பயம் ஏற்படுகிறது.

உலகெங்கும் இந்த நிகழ்வை நேரடி ஒளிபரப்பாகக் காட்டிக்கொண்டிருக்கிற தொலைக்காட்சி நிறுவனங்களைப் பாராட்டுகிறேன். சூரியனை நிலா மறைத்து விலகுகிற காட்சி எவ்வளவு அழகாக இருக்கிறது! இந்த அழகான காட்சியைப் பல தலைமுறைகளாகப் பார்க்கவிடாமல் பயமுறுத்திவைத்துவிட்டீர்களே பாவிகளா என்ற கோபம்தான் ஏற்படுகிறது.

இந்த நிகழ்வை பிரதமர் மோடி பார்ப்பதைக் காட்டுகிற படத்தையும் செய்தியையும் பார்க்கிறபோது மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் பார்க்கட்டும். வேத காலத்திலேயே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்தது, ஸ்டெம் செல் சிகிச்சை இருந்தது என்று ஏற்கெனவே அறிவியலுக்குப் புறம்பாக அவர் பேசியதை மறக்கத் தயாராக இருக்கிறேன். இனிமேலாவது அறிவியல் உண்மைகளை அவரும் புரிந்துகொள்ளட்டும், அறிவியலுக்கு மாறான தகவல்களை மக்களுக்கும் சொல்லாமல் இருக்கட்டும்.

மக்களிடையே அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பது ஒரு கடமையாகவே நமது நாட்டின் அரசமைப்பு சாசன முன்னுரையில் சொல்லப்பட்டிருக்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் இன்றைக்கும் பரப்பப்படுகின்றன. கிரகணத்தின்போது வெளியே போகக்கூடாது, சாப்பிடக்கூடாது, குறிப்பாகக் கர்ப்பிணிகள் வெளியே போனால் பூமியில் விழுகிற கிரகணக் கதிர்களால் வயிற்றில் இருக்கும் சிசுவுக்குப் பாதிப்பு ஏற்படும் என்றெல்லாம் அறிவுரைகள் சொல்லப்படுகின்றன. வெறும் கண்ணால் பார்க்கக்கூடாது என்பது மட்டுமே தேவையான எச்சரிக்கை.

இயற்கை உண்மைகளை எடுத்துச் சொல்கிற, அறிவியலுக்கு எதிரான கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்கிற தொடர்ச்சியான இயக்கம் தேவை. அரசாங்கத்தின் கோளரங்குகளில் ஞாயிறு மறைப்பு நிகழ்வைப் பார்ப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது பாராட்டத்தக்கது. பல பள்ளிகளிலிருந்தும் கல்லூரிகளிலிருந்தும் மாணவர்கள் சென்று பார்க்கிறார்கள்.

ஆனால் மக்களுக்கான அறிவியல் அமைப்புகள் தங்களது சொந்தப் பொறுப்பிலும் செலவிலும் மக்களிடையே தங்களுடைய சக்திக்கு உட்பட்டு வானியல் உண்மைகளை விளக்குகின்றன. அரசாங்கம் அல்லவா இதற்கென்றே நிதி ஒதுக்கீடுகள் செய்து தொடர்ச்சியான அறிவியல் பரப்புரை இயக்கத்தை மேற்கொள்ள வேண்டும்?

விண்ணில் நட்சத்திரங்கள் நேர் கோட்டில் வரிசையாகவோ நெருக்கமாகவோ இல்லை. ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இடையே பெரும் இடைவெளி இருக்கிறது – கோடிக்கணக்கான கிலோ மீட்டர்கள் இடைவெளி. இங்கிருந்து நாம் பார்க்கிறபோது பளிச்சென்று தெரிகிற பெரிய நட்சத்திரங்களை கற்பனையாக இணைத்து வரைந்து, வில் போல் இருக்கிறது, மீன் போல் இருக்கிறது என்று உருவகித்துக்கொள்கிறோம். முன்னோர்கள் அப்படித்தான் கற்பனையாக இணைத்தார்கள். அவ்வாறு கற்பனை செய்வது ஒரு இனிய அனுபவம். ஆனால் இப்படிக் கற்பனை செய்து நாமாக உருவகித்துக்கொண்ட தோற்றத்தில் நட்சத்திரங்கள் தென்படுவதற்கும், மனித வாழ்க்கைக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது போலித்தனமான நம்பிக்கையாகிறது.

மனிதரின் உடலில் ஏற்படக்கூடிய மூலம்தான் பிரச்சினையே தவிர, மூல நட்சத்திரத்தால் ஒரு பாதிப்பும் இல்லை. கிரகணத்தன்று தலைவர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார்கள். அப்படியானால் எளிய மக்கள் நாசமாகப் போகலாமா? மாளிகைகளில் பாதுகாப்பாக இருக்கிற தலைவர்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றால் சாலையோர நடைபாதைகளில் கிடக்கிற ஏழைகளுக்கு என்ன பாதுகாப்பு? கிரகணத்தின் கதிர்கள் ஒருவர் என்ன பதவியில் இருக்கிறார் என்று பார்த்துதான் வந்து தாக்குமா?

இந்த ஞாயிறு மறைப்பு நிகழ்வு 360 ஆண்டுகளுக்கு ஒரு முறை வரும் என்று சொல்லப்படுகிறது. உலகின் அனைத்துப் பகுதிகளிலும் ஒவ்வொரு காலகட்டத்திலும் இது நிகழ்கிறது. இதுவாவது, சூரியனைச் சந்திரன் கடக்கிற அந்தச் சில மணி நேரங்களுக்கு மட்டும்தான். ஆனால், தினமும் மாலையில் 6 அல்லது 7 மணியிலிருந்து காலை விடியும் வரையில் சூரியனைப் பார்க்க மாட்டேன் என்று பூமி முகத்தைத் திருப்பிக்கொள்கிறதே, அப்போதும் பூமியின் அந்தப் பகுதியில் சூரியக் கதிர்கள் விழுவதில்லை. அப்படியானால் அப்போதும் வெளியே போகக்கூடாதா? அப்போதும் சாப்பிடக்கூடாதாஈ கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் உள்ள குழந்தைக்குப் பாதிப்பு ஏற்படுமா? கிரகணப் பாதிப்புகள் மனிதர்களுக்கு மட்டும்தானா, விலங்குகளுக்கு இல்லையா, மற்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்குப் பொருந்தாதா, இந்த நாட்டில் நம்புகிறவர்களுக்கு மட்டும்தான் பொருந்துமா?

இப்படியான கோணங்களில் கேள்விகள் கேட்டுப் பழக வேண்டும். அப்படிக் கேள்வி கேட்கிற அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் முதல் பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.

அ.குமரேசன், மூத்த பத்திரிகையாளர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!