மாநில அளவிலான தகவல் தொழில்நுட்ப கருத்தரங்கம் “THEMIDA-18”

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் தகவல் தொழில் நுட்பத்துறையின் சார்பாக மாநில அளவிலான ஒருநாள் கருத்தரங்கம் “THEMIDA-18” மிகச்சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்று துவக்கி வைத்தார். அவர் பேசுகையில், “கணினித்துறையில் மிகவேகமாக வளர்ந்து வரும் பல தொழில்நுட்பங்கள் மனிதரின் தேவைகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உதாரணமாக ரோபோடிக்ஸ் தொழில்நுட்பம் மனிதருக்குத் தேவையான அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்து வருகிறது. அதுமட்டுமன்றி இன்று மருத்துவத் துறையில் பிரம்மிக்கும் வகையில் அறுவைச் சிகிச்சையிலும் இத்தொழில் நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ரோபோடிக்ஸ் தொழில் நுட்பத்திலும் அது செயல்படுத்தப்படும் சூழலுக்கேற்ப மென்பொருட்கள் உருவாக்கப்பட்டு ரோபோக்களைப் பயன்படுத்தி வருகின்றனர். இதன்மூலம் வேலை நேரத்தினை குறைப்பதுமின்றி வேலைப்பளுவும் குறைகிறது. அதேபோல் பல்வேறு அபாயங்களிலிருந்தும் மனித உயிர்காக்கவும் முடியும். மாணவர்கள் அனைவரும் தகவல் தொழில் நுட்பத்தினை நன்கு கற்றறிந்து மேலும் புதிய தொழில் நுட்பங்களை கண்டறிய வேண்டும்” என வலியுறுத்தினார்.

இவ்விழாவிற்கு சிறப்பு விருந்தினராக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக கணினி அறிவியல் துறைத்தலைவர் ராமராஜ் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர் உரையில் “தற்போது தகவல் தொழில்நுட்பத்துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி, மாற்றங்கள், சமீபகால தகவல் அறிவியலின் முன்னேற்றம் மற்றும் அதன் பயன்பாடுகள்” குறித்து விளக்கமளித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாநில அளவில் பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் மாணவ, மாணவியர் கலந்து கொண்டு தங்களது ஆராய்ச்சி கட்டுரைகளை சமர்ப்பித்தனர். மேலும் இந்நிகழ்ச்சியில் உபயோகமற்ற மின் சாதனங்களைக் கொண்டு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் அலங்கார பொருட்கள் செய்யும் போட்டிகள், அனிமேசன் உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இந்நிகழ்ச்சியின் முன்னதாக தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைவர் மலர் வரவேற்றார். இவ்விழாவில் சுமார் 650க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்பம் குறித்த மாணவ, மாணவியரின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியருக்கும், சிறந்த ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்த மாணவ மாணவியருக்கும் பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டது. இறுதியாக தகவல் தொழில்நுட்பத் துறைப் பேராசிரியர் திரு. சாகுல்ஹமீது நன்றி கூறினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை திரு.ராஜமாணிக்கம் மற்றும் மெர்லின் ரிஷானா ஆகியோர் செய்திருந்தனர். இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுஃப், செயலர் ஷர்மிளா மற்றும் இயக்குநர்கள் ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.