கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கணித்தமிழ் பயிலரங்கம்…

கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணித்தமிழ்ப் பேரவை சார்பாக கணித்தமிழ்ப் பயிலரங்கம் 30.08.2017 அன்று மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் ரஜபுதீன் தலைமையேற்றுத் துவக்கி வைத்தார். அவர் பேசுகையில் “உலகளவில் தமிழ்மொழி மிகப் பழமையானதாக இருக்கிறது. தமிழ் மொழியானது இந்திய மொழிகளிலேயே அதிக எழுத்துக்களைக் கொண்ட மொழியாகும். தமிழ் இலக்கியங்களில் ஐம்பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம், மணிமேகலை, வளையாபதி, சீவகசிந்தாமணி மற்றும் குண்டலகேசி ஆகியவையும் ஐஞ்சிருங்காப்பியங்களான நாககுமாரகாவியம், யசோதரைக்காவியம், நீலகேசி, உதயகுமாரகாவியம் மற்றும் சூளாமணி போன்றவை தமிழ்மொழியின் பெருமைகளை பெரிதும் பரைசாற்றுபவை. மேலும் அகநானூறு, புறநானூறு, ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, குறுந்தொகை, பரிபாடல், நற்றிணை மற்றும் கலித்தொகை போன்றவை எட்டுத்தொகை நூல்கள் ஆகும் இவை அனைத்தும் தமிழ்மொழியின் சிறப்பிற்கு எடுத்துக்காட்டாகும். இவை அனைத்திற்கும் தமிழ் மென்பொருள் ஏற்படுத்தியும் இணையம் மூலமாக தமிழ்மொழியின் சிறப்பினை உலகெங்கும் பரப்ப வேண்டும்” என வலியுறுத்தினார்.

இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் மு. பாண்டி, கணினிமைய இயக்குநர் முனைவர் அ. செந்தில்ராஜன், தமிழ்த்துறைப் பேராசிரியர் முனைவர் மணிகண்டன் மற்றும் ஆய்வாளர் பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். இதில் இணையத்தில் தமிழ்மொழியினைப் பிரயோகப்படுத்தும் யுத்திகள் குறித்தும், அதில் பயன்படுத்தப்படும் கணினி மென்பொருள் குறித்தும் விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் முன்னதாக கல்லூரியின் தமிழ்த்துறைத்தலைவர் பொ. பாலமுருகன் அவர்கள் வரவேற்புரை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இதில் கணித்தமிழ் குறித்த மாணவர்களின் பல்வேறு சந்தேகங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கணினிப்பயன்பாட்டியல் துறைத்தலைவர் மதினா வாழ்த்துரை வழங்கினார். இறுதியாக முதுகலை கணினி அறிவியல் துறைத்தலைவர் கார்த்திக் நன்றியுரை வழங்கினார். இந்நிகழ்ச்சி ஏற்பாடுகளை கணிதத்துறைப் பேராசிரியர் விக்னேஷ்குமார், கணினி அறிவியல் துறைத்தலைவர்பாத்திமா ஜாஹிரா, தகவல் தொழில் நுட்பத்துறைத் தலைவர் மலர் மற்றும் தமிழ்த்துறைப் பேராசிரியர் சரவணக்குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

இந்நிகழ்ச்சிக்கு முகம்மது சதக் அறக்கட்டளைத் தலைவர் மற்றும் தாளாளர் யூசுப் மற்றும் செயலர் ஷர்மிளா ஆகியோர் வாழ்த்துக்களையும் பாராட்டினையும் தெரிவித்திருந்தனர்.