Home கட்டுரைகள் வெல்க சுதந்திரம்.. போற்றுவோம் சுதந்திரத்தை…

வெல்க சுதந்திரம்.. போற்றுவோம் சுதந்திரத்தை…

by ஆசிரியர்

நாம் சுதந்திரம் பெற்ற 1947ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை சுதந்திர தினத்தன்று நாட்டின் பிரதமர் டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றி உரையாற்றுவது ஏன்?

ஏன் அப்படி, இதன் பின்னனி என்ன?

டெல்லி செங்கோட்டையைக் கட்டியவர் முகலாய சக்ரவர்த்தி ஷாஜகான். இவருக்குப்பின் இவரது மகன் ஔரங்கசீப் காலத்திலும் சாம்ராஜ்யத்தின் அதிகார மையமாக விளங்கியது செங்கோட்டை.

ஔரங்கசீப்பிற்குப் பிறகு வந்த முகலாய மன்னர்கள் பலவீனமானவர்கள் என்பதால், நாதிர்ஷா என்ற ஈரானிய மன்னன் செங்கோட்டையைக் கைப்பற்றி, மயூராசனம் மற்றும் கோகினூர் வைரங்கள் உட்பட பெரும் செல்வங்களை கொள்ளையடித்து சென்றான்.

தொடர்ந்து டெல்லி பலரது தாக்குதல்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் கும்பினியர்கள் டெல்லியையும் செங்கோட்டையையும் 1803ல் கைபற்றி டெல்லி செங்கோட்டையை அதிகார மையமாக ஆக்கிக் கொண்டனர்.

1857ல் நாடு முழுவதும் முதல் சுதந்திரப் போர் வெடித்தது. ஆங்கிலேயப் படைகள் எல்லா இடங்களிலும் விரட்டியடிக்கப்படுகிறது. கடைசி முகலாய மன்னர் பகதூர் ஷா ஜபர் இந்த போர்களுக்கு தலைமை தாங்கினார்.

செங்கோட்டை மீண்டும் சுதந்திரப் போரின் மையமான தலைமை கோட்டையாக மாறுகிறது. பெரும் படைகளை திரட்டி, ஆங்கிலேயர்கள் மீண்டும் வட இந்தியா முழுவதையும் கைபற்றுகின்றனர்.

பகதூர் ஷாவின் 3 மகன்களை டெல்லி கேட் அருகில் ஆங்கிலேயத் தளபதி சுட்டு கொல்கிறார். பகதூர் ஷா நாடு கடத்தப்பட்டு ரங்கூனில் சிறை வைக்கப்பட்டார். அவர் வைக்கப்பட்ட இடம் வெளியில் தெரியாமல் இரகசியமாக பாதுகாக்கப்பட்டது.

செங்கோட்டை மீண்டும் பிரிட்டிஷ் இந்தியாவின் இராணுவ மற்றும் அதிகார கோட்டையாக மாறுகிறது. இங்கே தான் ஆங்கிலேயர்கள் “தர்பார்” நடத்தினர். 1911ல் பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகர் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றிய அறிவிப்பை இங்கு நடந்த தர்பாரில்தான் வெளியிடப்பட்டது.

1857க்கு பிறகு சுமார் 90 ஆண்டுகளுக்குப்பின் அரசியல் சுழல்கள் நிகழ்வுகளை மீண்டும் செங்கோட்டையை நோக்கி இழுத்தன.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், இந்திய தேசிய இராணுவத்தை அமைத்து ரங்கூனில் இந்திய அரசை நிர்மாணித்தார், அங்கு அவர் இரகசியமாக வைக்கப்பட்டிருந்த பகதூர் ஷா ஜாபர் சமாதியைப் போய் பார்த்தார்.

அதில் உத்வேகமடைந்த அவர *டெல்லி சலோ* (டெல்லி நோக்கி செல்) என அறைகூவினார். இந்திய தேசிய இராணுவப் படைகள் டெல்லி நோக்கி விரைந்தன.

போரில் தோற்ற ஐ.என்.ஏ வீரர்களை ஆங்கில அரசு கொடூரமாக கொன்று குவித்தது. அதில் பலரை டெல்லி செங்கோட்டையில் 1945-46ல் பொது மக்கள் முன்னிலையில் விசாரணை நடத்தியது. அவர்களில் 3 பேர் பிரசித்தம் பெற்றவர்கள்.

கர்னல்.ஷா நவாஸ் கான், கர்னல் பிரேம் குமார் சேகல், கர்னல் குர்பக்ஷ் சிங் தில்லான்.

என்ன மத ஒற்றுமை பார்த்தீர்களா? இவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் பெரும் கலவரங்கள் வெடித்தன.

அனைத்து கட்சிகளும் இந்த விசாரணையைக் கண்டித்து இயக்கம் நடத்தின. நாடு முழுவதும் எழுந்த கிளர்ச்சியின் போது டெல்லி செவ்கோட்டை என்பது ஆங்கில அதிகாரத்தின் அடையாளமாக பொதுமக்கள் பார்வையில் மாறியது.

ஆகவே, ஆட்சி மாற்றம் என்பது, டெல்லி செங்கோட்டையில் பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடியை இறக்கி விட்டு தேசீயக் கொடியை ஏற்றுவது என்ற எண்ணம் பரவலாக மக்கள் மனதில் ஏற்பட்டது.

மக்களின் இந்த அபிலாஷைகளை முதல் இந்தியப் பிரதமர் பண்டித நேருஜி செங்கோட்டையில் தேசீயக் கொடியை 1947 ஆகஸ்டு 15ல் ஏற்றி வைத்து உரையாற்றினார்.

அன்று முதல் சுதந்திர உரை செங்கோட்டை என்றாயிற்று. சுதந்திரப் போராட்டத்தில் தொடர்பில்லாதவர்கள் வேண்டுமானால் செங்கோட்டையை ஒரு முகலாயக் கட்டிடமாகவே பார்க்கலாம்.

ஆனால்…..

செங்கோட்டையின் பின்னணியில் உள்ள இரத்தம் தோய்ந்த வீர வரலாற்றை நாம் அறிந்து அதை போற்றுவோம்.

அதுவும் இன்றைய நாளில்.

அனைவருக்கும் *சுதந்திர தின நல்வாழ்த்துகள்!*

பெற்ற சுதந்திரத்தை பேணி காப்போம்!!

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com