Home செய்திகள் திருவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, மதுக்குடிப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

திருவில்லிபுத்தூர் அருகே டாஸ்மாக் மதுக்கடையை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு, மதுக்குடிப்பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

by mohan

கொரோனா தொற்று கட்டுப்பாடுகள் காரணமாக தமிழகம் முழுவதும் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 2 வாரங்களாக அரசு, ஊரடங்கில் கொஞ்சம் கொஞ்சமாக சில தளர்வுகளை வழங்கி வருகிறது. இன்று தேநீர் கடைகள் மற்றும் டாஸ்மாக் மதுக்கடைகளை கட்டுப்பாடுகளுடன் திறக்கலாம் என்று அரசு அறிவித்தது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக மதுவுக்கு அடிமையான போதை ஆசாமிகள், மது கிடைக்காமல் திண்டாடி வந்தனர். ஆங்காங்கே கள்ளச்சாரயம் தயாரித்து விற்பனை செய்யப்பட்டு வந்தது. சில இடங்களில் மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டு கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. கூடுதல் விலை கொடுத்து மது பாட்டில்கள் வாங்க முடியாமலும், அழைந்து திரிந்து கள்ளச்சாரயம் வாங்க முடியாமலும் மதுக்குடிப்பிரியர்கள் கடும் மனஉளைச்சலில் இருந்து வந்தனர். இன்று முதல் டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பு போதை ஆசாமிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இன்று காலையிலேயே டாஸ்மாக் கடைகள் முன்பு போதை ஆசாமிகள், மது பாட்டில்கள் வாங்குவதற்காக ஆர்வமுடன் திரண்டனர்.இந்தநிலையில் விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் – கூமாபட்டி அருகேயுள்ள ராமசாமியாபுரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடையை திறப்பதற்காக ஊழியர்கள் வந்தனர். அதே நேரம் மதுக்கடையை திறக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து ராமசாமியாபுரம் பகுதி மக்கள் திரண்டு வந்தனர். இன்னொரு பக்கம் மது பாட்டில்கள் வாங்குவதற்காக போதை ஆசாமிகளும் திரண்டு வந்தனர். மதுக்கடை திறப்பதை எதிர்த்து, மதுக்கடை ஊழியர்களுடன் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இதனால் அந்தப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. தகவலறிந்த கூமாப்பட்டி காவல்நிலைய போலீசார் விரைந்துவந்து, பொதுமக்களை சமாதானப்படுத்தி, கலைந்து போகுமாறு வலியுறுத்தினர். தொடர்ந்து அங்கிருந்த மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. பதற்றம் அதிகரிக்கவே, டாஸ்மாக் மதுக்கடை ஊழியர்கள் கடையை திறக்க முடியாமல் திரும்பிச் சென்றனர். மதுக்கடை திறக்காததால் ஏமாற்றம் அடைந்த மதுக்குடிப்பிரியர்கள், வேறு இடத்திற்குச் சென்று மது பாட்டில்கள் வாங்குவதற்காக புறப்பட்டுச் சென்றனர். தொடர்ந்து பதற்றமான நிலை இருப்பதால் அந்தப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com