
எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காத வண்ணம் பாதுகாப்பான முறையில் தியாகத் திருநாளை கொண்டாடிய இஸ்லாமிய பெருமக்களுக்கும், ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும், காவல்துறையினருக்கும் இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் கே. நவாஸ்கனி நன்றி தெரிவித்துள்ளார்.இராமநாதபுரம் மாவட்டத்தில் ஒருசில குக்கிராமங்களிலும் காவல்துறையினர் கடுமையாக நடந்து கொள்ளும் போக்கை மாற்றிக் கொள்ளவேண்டும்.
தமிழகம் முழுவதும் மாநில அரசு காட்டிய வழிமுறை படி, பாதுகாப்பான முறையில் அரசுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தொழுகை மற்றும் கடமைகளை நிறைவேற்றி, பாதுகாப்பான முறையில் தியாகத் திருநாள் கொண்டாடப்படுகிறது.அரசு அனுமதி அளித்தபடி, ஆண்டு வருமானம் 10 ஆயிரத்திற்கும் குறைவாக உள்ள குக்கிராமங்களில் உள்ள சிறிய வழிபாட்டுத் தலங்களில் அரசு காட்டிய நெறிமுறைகளின் படி தொழுகை நடத்த அனுமதித்திருக்கிறது.ஆனால் இராமநாதபுரத்தில் 10 ஆயிரத்துக்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள மிகச் சிறிய வழிபாட்டுத் தளங்கள் உள்ள குக்கிராமங்களில் மாவட்ட காவல்துறையே பதட்டத்தை ஏற்படுத்தும் வண்ணம் அதிக எண்ணிக்கையிலான காவல்துறையினரை குவித்து தேவையில்லா கெடுபிடிகளை விதிப்பது கண்டனத்துக்குரியது.
இன்றைய தினம் நான் வசிக்கும் என்னுடைய சொந்த ஊரான இராமநாதபுரம் மாவட்டம், குருவாடியில் 10 ஆயிரத்திற்கும் குறைவான ஆண்டு வருமானம் உள்ள மிகச்சிறிய வழிபாட்டுத் தலத்தில், சுமார் பத்திலிருந்து இருபது நபர்கள் மட்டுமே தொழுகையை நிறைவேற்றக்கூடிய வழிபாட்டு தளத்தில் பக்ரீத் பெருநாளுக்கு ஒரு தினத்திற்கு முன்பே, மாவட்ட காவல்துறை அதிக எண்ணிக்கையிலான காவலர்களை குவித்து ஏதோ ஒரு பதட்டம் ஏற்படுவது போன்ற ஒரு சூழலை ஏற்படுத்தி தொழுகை நடத்த அனுமதி மறுத்திருந்தது.இதுகுறித்து மாவட்ட ஆட்சியரை தொடர்புகொண்டு தெரிவித்தபோது, தொழுகை நடத்த மாவட்ட ஆட்சியர் அனுமதி அளித்தார்.
ஆனாலும், மாவட்ட காவல்துறைக்கு ஒத்துழைப்பு கொடுக்கும் வகையிலும், எந்தவித சர்ச்சைக்கும் இடமளிக்காத வண்ணமும் வீட்டிலிருந்தபடியே தொழுகையை நடத்தி என்னுடைய அறிவுறுத்தலின்படி கண்ணியத்தோடு நடந்து கொண்டனர் கிராம மக்கள்.எனவே, தேவையில்லா பதற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்த்து, குக்கிராமங்களுக்கு அரசு வழங்கியுள்ள அனுமதியை பொருட்படுத்தாமல் நடந்து கொள்ளும் போக்கை இராமநாதபுரம் மாவட்ட காவல்துறையினர் மாற்றிக் கொள்ளவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
You must be logged in to post a comment.