Home செய்திகள்கீழக்கரை செய்திகள் இஸ்லாத்தை ஏற்ற முதல் வாலிபரின் வரலாறு!..ரமலான் சிந்தனை 15…கீழை ஜஹாங்கீர் அரூஸி…

இஸ்லாத்தை ஏற்ற முதல் வாலிபரின் வரலாறு!..ரமலான் சிந்தனை 15…கீழை ஜஹாங்கீர் அரூஸி…

by ஆசிரியர்

குறைஷியர் குலத்தின் மூத்த நபராக மதிக்கப்பட்ட அபூதாலிப் அவர்கள் பெருமானாருக்கு சிறிய தகப்பனாராகவும் வளர்ப்புதாரியாகவும் இருந்தார்கள். அபூதாலிப் அவர்களின் மகனார் அதாவது பெருமானாரின் சச்சா முறை தம்பி தமது சிறிய வயதிலேயே நபி(ஸல்) அவர்களின் நேரடி கண்காணிப்பில் வளர்ந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் பயிற்சிப் பாசறையில் இளமைக் கால வாழ்வை ஆரம்பித்த அபூதாலிப் அவர்களின் மகனுக்கு அப்பொழுது ஒன்பது வயதே ஆகியிருந்தது. அப்பொழுது தான் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தனது தூதுத்துவப் பணியை ஆரம்பம் செய்திருந்த கால கட்டம்.

ஒருநாள் அந்த சிறார், அவர்கள் வீட்டில் இருந்த பொழுது, இறைத்தூதர் (ஸல்) அவர்களும், அவர்களது துணைவியாரும் தரையில் தலையை வைத்து, சுஜுது நிலையில் இருப்பதைக் காண்கின்றார்கள். அவர்கள் அப்பொழுது அல்லாஹ்வைப் புகழ்ந்த வண்ணமும் இருந்தார்கள்.

இந்த அதிசய நிகழ்ச்சியை இமை மூடாமல் பார்த்துக் கொண்டிருந்த அந்த சிறியவர் இதுபோன்றதொரு நிகழ்வை நாம் எங்கும் எப்பொழுதும் கண்டதில்லையே, என்ற சிந்தனையில் ஆழ்ந்தார்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்த பின், அவர்களை அணுகிய அந்த சிறியவர் சற்று முன் நான் பார்த்த காட்சிக்கு என்ன அர்த்தம் என்று வினவினார்கள்.

நாங்கள், நம்மைப் படைத்த வல்லோனாகிய, ஏகனாகிய அல்லாஹ்வைத் தொழுது கொண்டிருந்தோம் என இறைத்தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்து விட்டு, நான் உங்களுக்கு ஒரு அறிவுரை ஒன்றைக் கூறுகின்றேன்.

நீங்கள் எப்பொழுதும் அந்த லாத், உஸ்ஸா, அல்லது வேறு எந்த சிலைகளுக்கும் சிர வணக்கம் செய்யாதீர்கள், சற்று நீங்கள் பார்த்தீர்களே..! அதைப் போல உங்களைப் படைத்த ஏகனுக்கு மட்டும் சிர வணக்கம் செய்யுங்கள் என்று கூறினார்கள் இறைத்தூதர் (ஸல்) அவர்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்களின் இந்த அறிவுரை அவருக்கு நல்லதாகவே பட்டது. எனவே, அதுபற்றிச் சிந்திக்கலானார்கள். சிந்தனைத் தெளிவுக்குப் பின்னர், இறைத்தூதர் (ஸல்) அவர்களுயை கருத்தினை ஏற்றுக் கொண்டார்கள்.

அடுத்த நாள் காலை இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்டார்கள். இளைஞர்களிலேயே முதன் முதலில் இஸ்லாத்தினைத் தனது வாழ்வியல் நெறியாக ஏற்றுக் கொண்ட வரலாற்றுப் பெருமை கொண்டவர்களாக அடையாளம் காணப்பட்டவர் இஸ்லாமிய சாம்ராஜ்ஜியத்தின் நான்காம் கலீஃபா ஹழ்ரத் அலீ(ரலி) அவர்களாகும்.

இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட அலீ (ரலி) அவர்கள், இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்தார்கள். அதன் காரணமாக வாழ்க்கை பற்றியும், இன்னும் இறைநம்பிக்கை பற்றியும் அதன் அடிப்படைகள் பற்றியும் மிகவும் ஆழமான அறிவைப் பெற்றார்கள்.

எனவே, இது பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறும்பொழுது: “நான் அறிவுலகத்தின் நகரம் என்றால், அலீ அதன் வாசலாவார்” என்று கூறினார்கள்.

பெருமானாரின் மீது அளவு கடந்த நேசம் கொண்டவர்களாக இருந்ததினால், ஒரு கட்டத்தில் தமது உயிரையும் பணயம் வைத்து மக்கத்து குறைஷி எதிரிகளிடமிருந்து பெருமானாரை பாதுகாப்பாக மக்காவுக்கு ஹிஜ்ரத் செல்ல உதவினார்கள் ஹழ்ரத் அலீ(ரலி) அவர்கள்.

அந்த உதவி குறித்தும் அதன் பின்னர் நடந்த நிகழ்வு குறித்தும் இன்ஷா அல்லாஹ்…

ரமலான் சிந்தனை 16ல் காணலாம். கீழை ஜஹாங்கீர் அரூஸி.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!