Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகராட்சியில் புதிதாக உருவாகும் அவசியமற்ற உரக்கிடங்கினால் அபாயம் – சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியீடு !

கீழக்கரை நகராட்சியில் புதிதாக உருவாகும் அவசியமற்ற உரக்கிடங்கினால் அபாயம் – சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியீடு !

by ஆசிரியர்

கீழக்கரை புதுக் கிழக்குத் தெருவில் மக்கிளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நகராட்சி நிர்வாகத்தால் அமைக்கப்படும் உரக்கிடங்கினை அப்புறப்படுத்தக் கோரி பொதுமக்கள் சட்ட ரீதியிலான போராட்டங்களை  முன்னெடுக்க துவங்கியுள்ளனர். இந்நிலையில்  ”ஊரடங்கில் உருவெடுக்கும் உயிர்க்கொல்லி ‘உரக்கிடங்கு’ கீழக்கரை பொதுமக்களே.. உஷார்..!” என்கிற தலைப்பில் கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கம் சார்பாக கண்டன பரப்புரை வெளியிடப்பட்டுள்ளது. அந்த பரப்புரையில் பின்வரும் விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. கொரானா ஊரடங்கால் நமது பொருளாதாரத்தை இழந்து, வாழ்வாதாரத்தை தொலைத்து துவண்டு போயிருக்கும் நம்முடைய கவலைகள் எல்லாம், கேள்விக்குறியாகி நிற்கும் நமது எதிர் காலத்தை நோக்கியே அச்சத்துடன் சுற்றிச் சுழன்று கொண்டிருக்கிறது. இதை தாண்டி வேறு எதனையும் சிந்திக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கும் வேளையில், கீழக்கரை நகராட்சி நிர்வாகம் மக்கள் விரோத திட்டங்களை அமல்படுத்த மும்முரமாக காத்திருக்கிறது.

கீழக்கரை நகராட்சி எல்லைக்குட்பட்ட புதுக் கிழக்குத் தெருவில் செயல்பட்ட அபாயகரமான குப்பை கொட்டும் தளத்தினை அப்புறப்படுத்தக் கோரி நடைபெற்ற பொது மக்களின் மாபெரும் எதிர்ப்பு போராட்டங்களால், கடந்த 18 ஆண்டுகளாக கைவிடப்பட்டு கிடப்பில் கிடந்த மக்கள் விரோத திட்டத்தினை, நகர் மன்ற மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லாத இந்த சூழலில்,

ஏற்கனவே 5 ஏக்கரில் நகராட்சிக்கு உரக்கிடங்கு செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில், இந்த கொரானா ஊரடங்கு அமைதி நிலையை பயன்படுத்தி, எங்கள கேள்வி கேட்க எவன் இருக்கான் என்கிற சர்வாதிகார மமதையில், பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்காமல் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் தன்னிச்சையாக தீர்மானம் நிறைவேற்றி உரக்கிடங்கு அமைக்கிறோம் என்கிற பெயரில் புதிதாக மீண்டும் உயிர்க்கொல்லியை உருவாக்கி, நகர் மக்களை நோய்களின் பிடியில் சிக்க வைக்க முனைந்திருப்பது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
கொரானா ஊரடங்கால் ஆள் நடமாட்டம் குறைந்துள்ள நிலையை சாதகமாக்கி, சம்பந்தப்பட்ட இடத்தில் உரக்கிடங்கு பணிகள் திட்ட மதிப்பீடு குறித்து எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்காமல், எவருக்கும் தெரியாமல்,  உரக்கிடங்கு அமைக்கும் பணிகளை நகராட்சி செய்து வருவதை அறிந்து, புதுக் கிழக்குத் தெரு மக்கள் கொந்தளித்துப் போயுள்ள நிலையிலும், ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக தங்கள் ஆட்சேபனையை தெரிவித்து அறவழி போராட்டங்களை முன்னெடுக்க முடிவெடுத்துள்ளனர்.
இதன் ஒரு கட்டமாக, கீழக்கரை புதுக் கிழக்குத் தெரு பகுதியில் செயல்படவிருக்கும் அவசியமற்ற உரக்கிடங்கினை அப்புறப்படுத்தி மாணவர்களுக்கான அரசு விளையாட்டு மைதானம் அல்லது அனைத்து சமுதாய மக்களுக்கான பூங்கா அமைத்து தரக் கோரி புதுக் கிழக்குத் தெரு பகுதி மக்கள் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், கீழக்கரை வட்டாட்சியர், கீழக்கரை நகராட்சி மேலாளர் (ஆணையர் பொறுப்பு) ஆகியோருக்கு நேரிலும், பதிவுத் தபால் மூலமும் கோரிக்கை மனுக்களை அனுப்பியுள்ளனர். இந்த மக்கள் விரோத திட்டப் பணிகள் நடைபெறுவதையும், மக்கள் எதிர்ப்புகளையும், நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து சென்றுள்ளார். உரக் கிடங்கால் என்ன தான் பிரச்சனை ?
கீழக்கரை பேரூராட்சியாக இருந்த காலத்தில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னர், கீழக்கரை புதுக் கிழக்குத் தெரு பகுதியில் ஏற்படுத்தப்பட்டிருந்த பேரூராட்சி குப்பை கொட்டும் தளத்தால் பல்வேறு சுகாதாரக் கேடுகள் நிலவி வந்தது. இங்கு மலை போல் கொட்டி குவிக்கப்பட்டிருந்த குடலை புடுங்கும் நாற்றம் மிகுந்த குப்பைகளிலிருந்து கிளம்பிய ஆபத்தான கிருமிகளால், பெயர் தெரியாத ஏகப்பட்ட நோய்களால், தொடர்ச்சியாக அந்த தெருப் பகுதி மக்கள் வயது வித்தியாசமின்றி ஆரோக்கியத்தை இழந்து அவதியடைந்து வந்தனர்.
இந்த அபாயகர குப்பை கிடங்கிலிருந்து உருவான முதல் நோய் தொற்று மெல்ல பரவத் தொடங்கி, கீழக்கரை நகரின் அனைத்து தெரு பகுதி பொதுமக்களையும் தாக்கி, கீழக்கரை பகுதியில் இறப்பு விகிதத்தை அதிகரித்தது. மேலும் இந்த குப்பை கொட்டும் தளத்தால், இந்த பகுதியே குப்பை மேடாக காட்சி அளித்தது. இந்நிலையில் குப்பை கிடங்கில் இருந்து உருவான நோய்களின் உக்கிரத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள், அந்த நேரத்தில் பல முறை அரசு அதிகரிகளிடம் முறையிட்டும் பலனேதும் கிடைக்கவில்லை .
இதனையடுத்து கடந்த 1999 ஆம் ஆண்டு, புதுக் கிழக்குத் தெரு பகுதியில் இருந்து குப்பை கொட்டும் தளத்தை அப்புறப்படுத்தக் கோரி, ஒருங்கிணைந்த கீழக்கரை நகர் பொதுமக்களின் தொடர் மக்கள் போராட்டத்தால், அரசு அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி, புதுக் கிழக்குத் தெரு பகுதியில் குப்பை கொட்டுவது நிறுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த 2002 ஆம் ஆண்டு, இந்த பிரச்னை மீண்டும் தலை தூக்கியது. அப்போதும் மக்கள் எழுச்சி போராட்டங்களால், புதுக் கிழக்குத் தெருவில் இருந்த குப்பை கிடங்கில் குப்பை கொட்டப்படுவது முழுவதுமாக நிறுத்தப்பட்டது.
ஆனால் ஏற்கனவே இந்த குப்பை கிடங்கில் மலை போல் குவிக்கப்பட்டிருந்த குப்பைகளை அப்புறப்படுத்துமாறு தொடர்ந்து புதுக் கிழக்குத் தெரு பகுதி மக்கள் வலியுறுத்தியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் ஏறத்தாழ 18 ஆண்டுகளுக்கு பின்னர், புதுக் கிழக்குத் தெரு பகுதியில் அமைந்திருந்த குப்பை கிடங்கில் மலை போல் மக்கிப் போய் கிடந்த குப்பைகளை கீழக்கரை நகராட்சி அதிகாரிகள் அப்புறப்படுத்தியது அந்த பகுதி மக்கள் அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்தது.
அதன் பிறகு இந்த இடத்திற்குள் தொடர்ந்து ஏதோ கட்டுமானப் பணிகள் நடந்து வந்ததால், உள்ளே என்ன நடக்கிறது என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம், புதுக் கிழக்குத் தெரு மக்கள்  கேட்ட போது, ‘’இந்த இடத்தில் விரைவில் கீழக்கரை நகராட்சி சார்பாக, அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் ‘அம்மா பூங்கா’ ஒன்றினை அமைக்க இருக்கிறோம்.’’ என்று கூறி மழுப்பி இருக்கிறார்கள். அரசு வழிகாட்டுதல் பிரகாரம் உரக்கிடங்கு பணிகள் தான் நடைபெறுகிறது என்பது சம்பந்தமாக எந்தவொரு அறிவிப்பு பலகையும் வைக்கப்படவில்லை. அதனால் அந்தப் பகுதி மக்கள், இங்கு பூங்கா தானே அமைக்கிறார்கள் என்பதால் நகராட்சி அதிகாரிகள் பணிகள் மேற்கொள்வதற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்துள்ளனர். இந்நிலையில் இந்த இடத்தில் மீண்டும் குப்பைகளை கொட்டி, உரக்கிடங்கு அமைக்கும் பணிகள் தான் நடைபெற இருப்பதாக அறிந்த புதுக் கிழக்குத் தெரு மக்கள் அனைவரும் மன வேதனை அடைந்து கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே 2011 ஆம் ஆண்டில், கீழக்கரை நகராட்சியில் நிரந்தர உரக் கிடங்கு அமைப்பதற்காக, பள்ளமோர் குளம் தோணிப் பாலம் பகுதியில் 5 ஏக்கர் நிலம், மேலத் தெரு சலாஹுதீன் அவர்களால், அரசுக்கு தானமாக கொடுக்கப்பட்டுள்ளது. அந்த இடத்தில் உரக் கிடங்கிற்கான பணிகளை மேற்கொள்ள, அப்போதைய நகர் மன்றத்தால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு,  அதன் அடிப்படையில்  2014 – 2015 மற்றும் 2015 – 2016 நிதியாண்டில் மத்திய மாநில அரசுகளின் நிதிகளில் இருந்தும், நகராட்சி பொது நிதிகளில் இருந்து ஏறத்தாழ 2 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2016 ஆம் ஆண்டு முதல் கீழக்கரை நகராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் மக்கும் மற்றும் மக்காத குப்பைகளை பிரித்து உரமாக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த கொரானா ஊரடங்கு காலத்தை பயன்படுத்தி, 18 ஆண்டு காலமாக கிடப்பில் போடப்பட்ட அபாயகர திட்டத்தினை, ஏற்கனவே கீழக்கரை நகராட்சிக்கு சொந்தமாக பல ஏக்கரில் உரக்கிடங்கு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அவசியமில்லாமல், எவ்வித முன்னறிவிப்பும் தராமல்,  அதிகாரிகள் பொய்யான விளக்கங்களை கூறி, மீண்டும் புதுக் கிழக்குத் தெரு பகுதியில் குப்பை கிடங்கினை ஏற்படுத்தி, மறுபடியும் நோய்களின் நகரமாக கீழக்கரையை மாற்ற நினைப்பது எதிர்காலத்தில்  கொரானாவை விட கொடிய பேராபத்துக்களை கொண்டு வந்து சேர்க்கும் என்பதே நிதர்சனம். நகராட்சிக்கு நம்முடைய கேள்விகள்.. இது தான்… 1) கீழக்கரை நகராட்சி உரக்கிடங்கிற்காக, பள்ளமோர்குளம் பகுதியில், மக்களின் வரிப் பணம், சுமார் ரூ 200 இலட்சம் செலவு செய்யப்பட்டு, உரம் தயாரிப்பில் மும்முரமாக இருப்பதாக சொல்லப்படும் பிரம்மாண்ட  உரக்கிடங்கின் தற்போதைய நிலை என்ன ? 2) இந்த உரக்கிடங்கில் உர தயாரிப்பு பணிகள் நடைபெறுகிறதா ? 3) இதுவரை இந்த உரக்கிடங்கில் இருந்து மக்கும் மற்றும் மக்காத குப்பைகளில் இருந்து தயாரிக்கப்பட்ட உரத்தின் மூலம் நகராட்சி பெற்றுள்ள வருவாய் எவ்வளவு ? 4) இந்த பிரம்மாண்ட உரக்கிடங்கில், குப்பைகள் மலைபோல் குவியாத வண்ணம், நகராட்சி முறையாக பராமரித்து வருகிறதா 5) ஏற்கனவே கீழக்கரை நகராட்சிக்கு மிகப் பெரிய நில அளவில் உரக்கிடங்கு செயல்பாட்டில் இருக்கும் போது, புதுக் கிழக்குத் தெரு குடியிருப்பு பகுதிக்குள் ஏற்கனவே குப்பை கிடங்கிற்கு பொது மக்களின் எதிர்ப்பு இருக்கும் சூழலில், மக்கள் வரிப்பணத்தை வீணடிக்கும் வகையில் ரூ.60 இலட்சம் திட்ட மதிப்பீட்டில்  மீண்டும் உரக்கிடங்கு எதற்கு ? அரசு அதிகாரிகள் சம்பாதிக்கவா? 6) நகர் மன்றத்திற்குள் மக்கள் பிரதிநிதிகள் பொறுப்பில் இல்லாத சூழலில், எவர் கொண்டு வந்த தீர்மானத்தின் அடிப்படையில் மேற்சொல்லப்பட்ட உரக்கிடங்கு பணிக்கான டெண்டர் விடப்பட்டது? 7) மேற்சொல்லப்பட்ட இடத்தில் அனைத்து சமுதாய மாணவர்களும் பயன்படுத்தும் விளையாட்டு மைதானமாகவோ அல்லது அனைத்து சமுதாய மக்களும் பயன்படுத்தும் வகையில் பூங்காவாகவோ அமைத்து தரக் கோரி கீழக்கரை பொது நல அமைப்பினர்களால் நூற்றுக்கணக்கான மனுக்கள் செய்யப்பட்டும், அதற்கு நமக்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகம், ‘’கீழக்கரை நகராட்சியில் அரசு சார்பாக பூங்கா அமைக்கவோ விளையாட்டு மைதானம் அமைக்கவோ போதுமான நிலம் நகராட்சியிடம் இல்லை’’ என மக்கள் கோரிக்கைகளை தட்டிக் கழித்து வந்த நகராட்சி, மக்கள் எதிர்ப்பு உள்ள இடத்தில் உரக்கிடங்கு அமைக்க ஊரடங்கு காலத்தில் ஊமை வேஷம் போட்டு கபட நாடகம் ஆடுவது ஏன் ? 8) மேற்சொல்லப்பட்ட இடத்தில் மலை போல் குவிந்திருந்த 18 ஆண்டு கால குப்பையை யாருக்கும் தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாக அள்ளி, அரைத்து, காசாக்கி நகராட்சி கணக்கில் கொண்டு வரமால் விற்று, வாயில் அள்ளிப் போட்டு விட்டதாக கொந்தளிக்கும் பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கு நகராட்சியின் பதில் என்ன ? (இது போன்ற பல கிடுக்கிப்பிடி கேள்விகளை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும், இந்திய சாட்சிய சட்டத்தின் மூலம் கீழக்கரை நகராட்சி நிர்வாகத்திற்கு எழுப்பி தகவல்களை பெற்று நீதியை பெறுவோம். ) நாம் இனிசெய்ய வேண்டியது.. இது தான்…
 ஜனநாயக வழியில் சட்ட ரீதியாக இந்த பன்னெடுங்கால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்றால், கீழக்கரையின் கண்ணியமிகு  ஜமாத்தார்களும், பொதுநல சங்கங்களும், சமூக நல இயக்கங்களும் ஒன்றிணைந்தோ அல்லது தனித் தனியாகவோ, மனுக்கள்  சம்பந்தப்பட்ட அரசுத் துறை அதிகாரிகளின் கவனத்திற்கு நேரடியாகவும் பதிவுத் தபால் மூலமும் கொண்டு செல்லுங்கள்.  அரசியல் கட்சிகள் ஒருங்கிணைந்து இந்த மக்கள் விரோத திட்டத்தினை அப்புறப்படுத்த, பொதுமக்களை திரட்டி அறவழி போராட்டங்களை முன்னெடுங்கள்.  தனி நபர்கள், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் [email protected] என்கிற மின்னஞ்சல் முகவரிக்கு மனு அனுப்புங்கள். அதன் பின்னரும் இந்த மக்கள் விரோத திட்டம்  செயல்பட அனுமதிக்கப்படுமானால் சட்டத்தின் துணையோடு நீதிமன்றத்தை நாடி உரக்கிடங்கிற்கு நிரந்தர தடையாணை பெற முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு நீதி நிலை நிறுத்தப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com