Home செய்திகள் முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் குறை கேட்பு கூட்டம்

முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளிடம் குறை கேட்பு கூட்டம்

by mohan
தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் திண்டுக்கல் மாவட்டக்குழுவின் சார்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் முதுகுத்தண்டுவட நோயால் பாதிக்கப்பட்டு அனுதினமும் பல்வேறு இன்னல்களை சந்தித்து வரும் மாற்றுத்திறனாளிகளை சந்தித்து அவர்களது குறைகளை கேட்டறியும் நிகழ்ச்சி திண்டுக்கல்லில் உள்ள பழைய கோர்ட் வளாகத்தில் 06.10.19 அன்று காலை 11.00 மணியளவில் மாவட்ட தலைவர் செல்வநாயகம் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டம் சங்கத்தின் மாவட்ட செயலாளர் பகத்சிங், மாவட்ட பொருளாளர் காளீஸ்வரி, ஆத்தூர் ஒன்றிய செயலாளர் ஆறுமுகவள்ளி, பழனி நகர செயலாளர் தங்கவேல் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சங்கத்தின் மாநில தலைவர் திருமதி.ஜான்சிராணி, மாநில பொதுச்செயலாளர் திரு.நம்புராஜன், மாநில செயலாளர் திரு.பாரதி அண்ணா, உயரம் தடைபட்டோர் மாநில செயலாளர் திரு.வெங்கடேஷ் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு குறைகளை நேரில் கேட்டறிந்தனர்.
இக்கூட்டத்திற்கான ஏற்ப்பாடுகளை முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் திண்டுக்கல் மாவட்ட கிளையில் தலைவர் சிவா, செயலாளர் சசிகுமார், பொருளாளர் குழந்தைவேல் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.இக்கூட்டத்தின் வாயிலாக தமிழக அரசுக்கு முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் முன்வைக்கும் கோரிக்கைகள் :
1. முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் முழுவதும் மருத்துவ உபகரணங்களின் உதவியால் மட்டுமே வாழமுடியும் என்பதால் வாரம் ஒன்றிற்கு மருத்துவ செலவு மட்டுமே 2000க்கு மிகாமல் செலவு செய்யக்கூடிய சூழ்நிலையில் தமிழக அரசு 1500 ரூபாய் மட்டுமே உதவித்தொகை வழங்கி வருகிறது. எனவே, தமிழக அரசு தருகின்ற உதவித்தொகையை 5000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்.
2. மத்திய அரசு 21 வகையான மாற்றுத்திறனாளிகளை வரிசைப்படுத்தியுள்ளது. இந்த அனைத்து மாற்றுத் திறனாளிகளையும் விட முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்கள் மிகப்பெரிய இன்னல்களை தினசரி சந்திப்பதால் இவர்களை 22 வது பிரிவாக தனியாக பிரித்து வரையறை செய்து அவர்களுக்கு கூடுதலாக அரசின் சலுகைகள் மற்றும் நலத்திட்டங்களை வழங்க வேண்டும்.
3. திண்டுக்கல் மாவட்டத்தில் மறுவாழ்வு பயிற்சி மையங்களை அமைக்க வேண்டும்.
4. மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் யூரின் பேக், யூரின் டியூப், யூரின் டியூப் மாட்டுவதற்கு பயன்படும் ஜெல், கையுறை, 20 ML ஊசி, குளுகோஸ் பாட்டில், காட்டன், பேண்டேஜ் துணி, பிளாஸ்திரி, மருந்து மாத்திரைகள் ஆகியவற்றை இலவசமாக வழங்க வேண்டும்.
5. படுக்கைப்புண் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு இலவசமாக காற்று மற்றும் தண்ணீர் படுக்கை வழங்க வேண்டும்.
6. அனைத்து வகையான முதுகுத்தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுக்கும் இலவசமாக கட்டில் மற்றும் மெத்தை வழங்க வேண்டும்.
7. கழுத்துவரை பாதிப்புக்குள்ளான அனைவருக்கும் ஏர்கூலர் வழங்க வேண்டும்.
8. கழிப்பறைக்கு செல்ல பயன்படும் வீல்சேர் அனைவருக்கும் இலவசமாக வழங்க வேண்டும்.
9. சொந்த வீடில்லாத அனைவருக்கும் வீடுகள் கட்டித்தர வேண்டும்.
10. சொந்த வீடுள்ள அனைவருக்கும் அவர்கள் எளிதாக வீட்டிற்குள் இருந்து வெளியில் செல்லவும் திரும்ப வீட்டிற்கு வருகை தருவதற்கும் வசதியாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தர வேண்டும். மேலும், வெஸ்டர்ன் கழிப்பறை வசதி செய்து தர வேண்டும்.
11. அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் கட்டிடங்கள், வங்கிகள், திருமண மண்டபங்கள் உள்ளிட்ட அனைத்து பொது இடங்களுக்கும் சென்று வர ஏதுவாக கைப்பிடியுடன் கூடிய சாய்வுதளம் அமைத்து தர வேண்டும்.
12. தரமான வீல்சேர் வழங்க வேண்டும்.
13. கண்ணால் பார்த்து அறிய முடிகிற ஊனத்திற்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள மருத்துவரே அடையாள அட்டை வழங்கலாம் என தமிழக அரசு அரசானை எண் 21 நாள் 17.06.11 அன்றே வெளியிட்டும் இன்னும் இந்த அரசானை அமலுக்கு வராத காரணத்தால் அடையாள அட்டை பெறக்கூட மிகப்பெரிய அளவில் கஷ்டங்களை அனுபவிக்க வேண்டியுள்ளது. எனவே, அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் அடையாள அட்டை வழங்க வேண்டும்.
14. எவ்வித நிபந்தனையும் இல்லாமல் வங்கிக்கடன் வழங்க வேண்டும்.
15. உள்ளாட்சி அமைப்புகளின் (மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி) சார்பில் செயல்படுத்தப்படும் வணிக வளாகங்களில் முன்னுரிமை அடிப்படையில் கடைகள் ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
16. படித்த அனைவருக்கும் அரசு வேலைவாய்ப்பு வழங்க வேண்டும்.
17. வீல்சேரில் அமர்ந்தவாறு பயணிக்கும் வகையில் அனைத்து வழித்தடத்திலும் பேருந்துகள் இயக்க வேண்டும்.
18. திண்டுக்கல் ரயில் நிலையத்தில் பேட்டரி கார் வசதி ஏற்ப்படுத்தி தர வேண்டும்.
கூட்டத்தின் முடிவில் மேற்கண்ட கோரிக்கைகள் அனைத்தையும் மாநில மாற்றுத்திறனாளிகள் ஆணையரிடம் திண்டுக்கல் மாவட்ட நிர்வாகிகள் அனைவரும் நேரில் சென்று சந்தித்து வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!