விவசாய நிலங்களில் நான்கு வழிச்சாலை அமைத்திட நிலம் கையகப்படுத்தும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிப்பதுடன், இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர். திருமங்கலம் தொடங்கி கொல்லம் வரை நான்கு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதற்காக விவசாய நிலங்களை கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள்,விவசாய சங்கங்கள்,அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.நான்கு வழிச்சாலை திட்டம் திருமங்கலம் முதல் ராஜபாளையம், சங்கரன் கோவில், வாசுதேவநல்லூர், கடையநல்லூர், செங்கோட்டை ஆகிய பகுதிகளை உள்ளடக்கி சுமார் 1147 கோடி ரூபாய் செலவில் 146. 98 கிலோ மீட்டர் வரை செயல்படுத்த பட உள்ளது. நன்செய் நிலங்கள், வாழை, எலுமிச்சை, நெல்லி என பல்வேறு விவசாய பயிர்கள் செழித்து வளரும் இப்பகுதியில் சுமார் 1500 ஏக்கர் விளை நிலங்கள், 3 இலட்சம் தென்னை மரங்கள் மற்றும் 200 க்கும் மேற்பட்ட விவசாய கிணறுகள் இத்திட்டத்தின் மூலம் பாதிக்கப்படுகின்றது. எனவே விவசாய நிலங்கள் பாதிக்காதவாறு இத்திட்டத்தை மாற்றுப்பாதையில் நிறைவேற்றிடவும், விவசாய நிலங்களை பாதுகாத்திடவும் அனைத்து விவசாய சங்கங்களும் தொடர்ந்து வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சி ஒருங்கிணைப்பில், அனைத்து விவசாய சங்கங்கள் பங்கேற்ற மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் கடையநல்லூர் மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ மாவட்ட தலைவர் யாசர் கான் தலைமை தாங்கினார், மாவட்ட பொதுச் செயலாளர் சிக்கந்தர் ஒலி, மாவட்ட செயலாளர்கள் வழக்கறிஞர் சர்தார் அரபாத், இம்ரான் கான், மாவட்ட பொருளாளர் செய்யது மஹ்மூத், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஹக்கீம் , ஷேக் முஹம்மது ஒலி, நைனா முஹம்மது @கனி, SDTU தொழிற்சங்க மாவட்ட தலைவர் ராஜா முஹம்மது,மாவட்ட துணைச்செயலாளர் தாஜுதீன், கடையநல்லூர் நகர செயலாளர் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக எஸ்டிபிஐ கட்சியின் மாநில துணைத்தலைவர் அப்துல் ஹமீது, விவசாய அணி மாநில தலைவர் ஷேக் அப்துல்லாஹ்,விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் சாரதி, மாடசாமி, மீரா கனி, ரெசவு மைதீன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் ஆண்கள், பெண்கள், விவசாயிகள் என 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு விவசாய நிலங்களை பாதுகாக்க வலியுறுத்தியும், ஒன்றிய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷம் எழுப்பினர். சட்டமன்ற தொகுதி தலைவர் ஷேக் முஹம்மது ஒலி நன்றி கூறினார்.
செய்தியாளர் அபுபக்கர்சித்திக்
You must be logged in to post a comment.