Home செய்திகள் சுரண்டையில் நள்ளிரவில் ஜவுளிக்கடை திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்..

சுரண்டையில் நள்ளிரவில் ஜவுளிக்கடை திடீரென தீப்பற்றி எரிந்து நாசம்..

by mohan

சுரண்டையில் பிரபல ஜவுளிக்கடையில் நள்ளிரவில் திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டையில் சங்கரன்கோவில் செல்லும் சாலையில் அண்ணாசிலை வடபுறம் பிரபல ஜவுளி கடை ஒன்று அமைந்துள்ளது. சுமார் இரண்டு வருடங்களாக இக்கடையில் அனைத்து வகையான ஜவுளிகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. செங்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் இதன் உரிமையாளராக இருந்து வருகிறார். இந்நிலையில் சனிக்கிழமை இரவு 9 மணிக்கு வியாபாரங்களை முடித்துவிட்டு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்று விட்டனர்.இந்த நிலையில் ஞாயிறு நள்ளிரவு 2:00 மணி அளவில் கடையின் மாடியில் இருந்து கரும்புகை வருவதை பார்த்த சிலர் சுரண்டை  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த சுரண்டை போலீஸ் எஸ்ஐ ஜெயராஜ் உடனடியாக தீயணைப்பு நிலையத்திற்கு தெரிவித்த தகவலின் பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் முத்துச்செல்வம் நிலைய அலுவலர் போக்குவரத்து பாலச்சந்தர் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.‌ தீ கட்டுக்கடங்காததால் உடனடியாக தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய தீயணைப்பு நிலையத்தில் இருந்து மேலும் 4 தீயணைப்பு வண்டிகளும், தீயணைப்பு வீரர்களும், 15க்கும் மேற்பட்ட தண்ணீர் லாரிகளும் வரவழைக்கப்பட்டன. விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் அதிரடியாக மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். தீயணைப்பு வாகனத்தின் மேலும் அருகில் இருந்த உயரமான கட்டடங்கள் மீது நின்றும் தண்ணீரை அடித்து தீயை அணைத்தனர். தீயணைப்பு வீரர்களின் துணிச்சல் மிக்க பணியை பொதுமக்கள் பாராட்டினர். மேலும் ஜவுளிக்கடையின் முன்புறம் உள்ள டிரான்ஸ்பார்மரிலிருந்து சுரண்டை மற்றும் சுற்று வட்டாரப் பகுதியின் அனைத்து இடங்களுக்கும் உயரழுத்த மின்சார வயர்கள் செல்கிறது. விரைந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்தனர்.‌ இதனால் சுரண்டை முழுவதும் இருளில் மூழ்கியதுடன் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு மாவட்ட தீயணைப்பு அலுவலர் வெட்டும் பெருமாள், ஆலங்குளம் டிஎஸ்பி பொன்னிவளவன், போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள், ஆர்ஐ மாரியப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் வந்து பார்வையிட்டு தீயணைப்பு பணிகளை துரிதப்படுத்தினர். மாவட்ட காங்கிரஸ் தலைவரும் தென்காசி காங்கிரஸ் வேட்பாளருமான எஸ் பழனி நாடார் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து தீயணைப்பு பணிகளை விரைவுபடுத்த அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். சுமார் 6 மணி நேரம் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர். ஆனால் அதற்குள் அனைத்து ஜவுளிகளும் கடையின் ஷோகேஸ், மற்றும் அலங்காரங்கள் உள்ளிட்ட முன்பகுதியில் முற்றிலும் எரிந்து நாசமாயின. எரிந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ 8 கோடி இருக்கும் என கூறப்படுகிறது. தீ விபத்து மின்கசிவினால் ஏற்ப்பட்டதா அல்லது வேறு எதுவும் காரணமா என சுரண்டை போலீஸ் எஸ்ஐ ஜெயராஜ் வழக்குப்பதிவு செய்து, தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் விசாரித்து வருகின்றனர்.‌

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com