Home செய்திகள் படித்தவர்களின் வாக்குப்பதிவு குறைந்து வருகிறது;நெல்லையில் கவிஞர் பேரா பேச்சு…

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை, ஸ்ரீசாரதா மகளிர் கல்லூரியில் நாட்டு நலத் திட்ட அணிகள் சார்பில் வாக்காளர் விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. அதில் படித்தவர்களிடையே வாக்களிப்பது குறைந்து வருவது வருத்தம் அளிப்பதாக கவிஞர் பேரா தெரிவித்துள்ளார். இந்த கருத்தரங்கிற்கு ஸ்ரீசாரதா கல்லூரி முதல்வர் முனைவர் மு.மலர் விழி தலைமை வகித்தார். நாட்டு நலத்திட்ட ஒருங்கிணைப்பாளர் தி.வெண்ணிமாலை அனைவரையும் வரவேற்றுப் பேசினார். பொதிகைத் தமிழ் அறக்கட்டளை நிறுவனர் கவிஞர் பே.இராஜேந்தின் சிறப்புரை ஆற்றினார்.

அவர் பேசுகையில், “உலகிலேயே மிகப் பெரிய ஐனநாயக நாடுகளில் முதன்மையானது இந்தியா. ஜனநாயகத்தின் முதுகெலும்பே வாக்குரிமை தான். ஜந்தாண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் தேர்தலில் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும். 18-வயது நிரம்பிய அனைவருக்குமே வாக்குரிமை தரப்பட்டுள்ளது. ஆயினும் தேர்தல்களில் 70முதல் 75 சதவீத வாக்குகள் தான் பதிவாகிறது. அதிகப்பட்சமாக 80-சதவீதம் பதிவானால் அதுவே மிகப் பெரியது. மீதமுள்ள வாக்காளர்களையும் தேர்தலில் பங்கேற்கச் செய்ய வேண்டும் என்பதே நமது குறிக்கோள். வாக்களிக்காத 20-சதவீத மக்களில் ஏறக்குறைய 15-சதவீதம் படித்தவர்கள் என்பதே வருத்தமான செய்தியாகும். படித்தவர்களிடம் வாக்களிப்பது குறைந்து வருவது மிகவும் வருத்தமளிக்கிறது.

எனவே,இந்நிலை மாற வேண்டுமானால் மாணவ மாணவிகள் இப்படிப்பட்ட வாக்காளர் விழிப்புணர்வு பரப்புரைகளில் அதிகமாக பங்கேற்க வேண்டும். மாணவ சமுதாயத்தினரிடம் மட்டுமே தடைகளை உடைக்கும் வலிமை உள்ளது. திருப்பு முனைகளையெல்லாம் ஏற்படுத்தும் சக்தி பெற்றவர்கள் நீங்களே. பூமிப் பந்தினையே புரட்டும் நெம்புகோல் மாணவிகளே. நீங்கள் (மாணவிகள்)இந்த வாக்காளர் விழிப்புணர்வை வீதியெங்கும் எடுத்துச் செல்ல வேண்டும். வீடு தோறும் இந்தச் செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும். நீங்கள் (மாணவ சமுதாயம்)நினைத்தால் நூறு சதவீத வாக்குப் பதிவு சாத்தியமே. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஐந்து சட்டமன்றத் தொகுதிகளிலும் இந்த இலக்கை எய்திட அனைவரும் சபதம் ஏற்போம்”என வேண்டுகோள் விடுத்தார். நிகழ்ச்சியில், கவிஞர் ந.சுப்பையா விழிப்புணர்வு பாடல் பாடினார். முனைவர் த.தனலட்சுமி நன்றி கூறினார். நிறைவாக பேராசிரியர்கள், மாணவிகள் அனைவரும் “வாக்களிப்போம் ‘என உறுதியேற்றனர். நிகழ்ச்சியில் பொதிகைத் தமிழ் அறக்கட்டளையின் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை கவிஞர் பேரா மாணவிகளுக்கு வழங்கினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

EID MUBARAK

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com